செவ்வாய், ஜனவரி 9

காஷ்மீர் ஆப்பிள் சுவையானது, காஷ்மீரிகளின் வாழ்க்கை? - ஆதவன் தீட்சண்யா

களப்பிரன் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள “காஷ்மீர்: குருதியால் சிவக்கும் ஆப்பிள் நூலுக்கான எனது முன்னுரை 

“வரும் வழியில் பார்த்தீர்கள் தானே எத்தனை ராணுவம், கவச வண்டிகள், துப்பாக்கிகளுடன் அவர்கள் இருப்பதை, அவர்களுக்கு யாரையும் சுட அதிகாரமிருக்கிறது. அவர்களைப் பொறுத்த அளவில் அவர்களுக்கு ஏற்ப யோசிக்காதவர்கள் எதிரிகள். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அந்த நபர் எண்ணிக்கை மட்டும் தான். ஆனால் எங்களுக்கோ அந்த நபர் மகன், குலாம் இவளுக்கு கணவன், இந்த குழந்தைக்கு அப்பா… எங்க உலகம், அந்த ஆள்… அவனை நாங்கள் தேடாம என்ன செய்வது…?” – ச.பாலமுருகன் எழுதிய “இங்கே சொர்க்கம் தொடங்குகிறது” என்கிற சிறுகதையில் வரும் தாய் ஒரு கட்டத்தில் “எனக்கு வயதாகின்றது. நான் சாவதற்குள் அவனைப் பார்த்துவிட்டுப் போக விரும்புகிறேன்.. உயிருடன் இருந்தால் ஒரே ஒருமுறை அவன் முகத்தை எங்களுக்கு, இல்லாவிட்டால்… சவக்குழியையாவது காட்டுங்கள்” என்பாள். காஷ்மீரிகள் ஒவ்வொருவரும் இப்படி காணாமல் போக்கடிக்கப்பட்ட தமது உறவுகளை மட்டுமன்றி தமது உயிரிலூறிய மண்ணையும் தேடி வாழ்நாளெல்லாம் அலைந்து மாய்கிறார்கள் என்பதை தான் நேரடியாக கண்டுவந்த அனுபவத்தை தோழர் களப்பிரன் இந்நூலில் எழுதியிருக்கிறார். பயணம் மேற்கொள்வதில் அளவற்ற நாட்டம் கொண்டுள்ள களப்பிரன் காஷ்மீரின் உண்மைநிலையை அறிந்துகொள்ளும் முனைப்பில் அங்கு சென்று கண்டதையும் கேட்டதையும் உணர்ந்ததையும் எழுதியவை இச்சிறுநூலாக வெளியாகிறது.  

தங்களது சொந்தமண்ணில் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் காஷ்மீரீகள். அதேரீதியில் வாழ்வைத் தொடர்வதற்கான உத்தரவாதத்தைக் கொடுத்து காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக்கொண்ட பிறகு அவர்களுக்குக் கொடுத்த உறுதிமொழிகள், சட்டப் பாதுகாப்புகள் அனைத்தையும் படிப்படியாக பறித்துக்கொண்ட இந்திய ஆட்சியாளர்கள் அவர்களை ஒடுக்குவதற்காக காஷ்மீர் மக்கள்தொகையில் சராசரியாக ஒவ்வொரு ஏழு பேருக்கும் ஒரு ராணுவத்தினரை குவித்துவைத்துள்ளனர். குடிமக்கள் மீது மட்டற்ற அதிகாரம் கொண்டுள்ளதான மமதையில் ராணுவத்தினர் அங்கு நிகழ்த்திவரும் மனித உரிமை மீறல்கள் பற்றி வரும் தகவல்கள் நம்மை வெட்கி தலைகுனிய வைக்கிறது. ராணுவத்தினர்  பதக்கங்களுக்காகவும் பதவியுயர்வுக்காகவும் சன்மானங்களுக்காகவும் போலியான பயங்கரவாத தடுப்பு சாகசங்கள் பலவற்றை ஜோடித்துக் காட்டுகின்றனர் என்று ஊடகங்கள் தொடர்ந்து அம்பலப்படுத்திவருகின்றன. சமூகப்பதற்றம் நிலவுவதான தோற்றத்தை நீடிக்கச்செய்வதன் வழியே அங்கு ராணுவமுகாம்களை நிலைத்திருக்கச் செய்கின்றனர் என்கிற குற்றச்சாட்டும் உண்டு. அப்பாவி மக்களை போலி என்கவுண்டரில் கொல்வது ( என்கவுன்டர் என்பதே போலியானது தான்), இளைஞர்களை ராணுவ வாகனத்தின் முகப்பில் கேடயமாக கட்டி இழுத்துச்செல்வது, ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்ததாக அல்லது தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக குற்றம்சாட்டி விசாரணையின்றி ஆண்டுக்கணக்கில் சிறையிலடைத்து வைப்பது என்று தம்மீது நிகழ்த்தப்படும் அட்டூழியங்களை வெளிப்படையாக சொல்வதற்கும் கூட அம்மக்கள் அஞ்சும் நிலைமை அங்கிருப்பதை களப்பிரன் அங்கு பலரோடும் நடத்திய உரையாடல் புலப்படுத்துகிறது.    

இந்த உரையாடல்கள், காஷ்மீரிகளின் தனித்துவமான பன்பாடு, மக்களிடையே நிலவும் நல்லிணக்கமும் சகிப்புத்தன்மையும், முடியாட்சியை உதறி குடியாட்சியை எய்துவதற்கான போராட்டம், “நயா காஷ்மீரை” கட்டியெழுப்புவதில் கம்யூனிஸ்ட்கள் கருத்தியலாகவும் களத்திலும் ஆற்றிய பணிகள், ஷேக் அப்துல்லாவின் முற்போக்கான அரசியல் கண்ணோட்டம், ஆப்பிள் பொருளாதாரம் என்று பல முனைகளையும் தொட்டுக்காட்டுகின்றன. ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட சூழலில் மக்களின் மனவோட்டம், இளைஞர்களின் எதிர்பார்ப்புகள், அச்சமற்ற சுதந்திரமான வாழ்க்கைக்கான அவர்களது ஏக்கங்கள், வாழ்வாதாரத்திற்காக தமது கல்விநிலைக்குப் பொருந்தாத பணிகளை மேற்கொண்டுள்ள அவலம், வீட்டுக்காவல், இணையச்சேவை முடக்கம், கல்விக்கூடங்கள் மூடலால் கல்வியில் தொடர்ச்சியின்மை- ஆகியவற்றால் அங்கு சமூக கட்டமைப்புக்குள் உருவாகிவரும் கவலைகொள்ளத்தக்க மாற்றங்கள் - ஆகியவற்றை வெளிப்படுத்த அம்மக்கள் செறிவேறிய சொற்களைத் தெரிவு செய்கிறார்கள். தோழர் யூசுப் தாரிகாமியின் நேர்காணல் இந்தச் சூழலின் சாராம்சத்தை ஒரு கோட்டுருவாக வரைந்துசெல்கிறது. 

ஜனநாயகத்தின் தொட்டில், உலகமே ஒரு குடும்பம் (வசுதைவ குடும்பகம்) என்றெல்லாம் கூச்சமற்றுப் பேசிக்கொண்டே காஷ்மீரத்தை குறுகிய மதக் கண்ணோட்டத்தினாலும் வெறுப்பரசியலினாலும் சிதறடித்து மக்களை பிளவுபடுத்திக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. சட்டத்தின் ஆட்சியை ஒழித்துக்கட்டி அரசியல் சாசனத்தை முடக்கும் அரசின் ஜனநாயக விரோதமான முடிவுகளுக்கு சட்டமொழியில் ஏற்பளிக்கின்றன நீதிமன்றங்கள். அரசின் முடிவுகளுக்கு சமூக இசைவை உருவாக்க ஆட்சியாளர்களின் ஊதுகுழல்களாக இழிந்துகிடக்கின்றன ஊடகங்கள். மதப்பெரும்பான்மைவாதத்திற்குள் சிக்கிக் கிடக்கின்றன நிர்வாகத் துறைகள். அஞ்சத்தக்க இந்த அழிமானங்களெல்லாம் காஷ்மீரத்துடன் நின்றுவிடப் போவதில்லை என்று தோழர் தாரிகாமி எச்சரிக்கிறார். 

“அவர்கள் ஒட்டுமொத்த நாட்டையும் ஒரு கட்சியின் கீழ், ஒற்றை அதிகாரத்தின் கீழ் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். அவர்கள் தவறு மேல் தவறு செய்கிறார்கள். ஆனால் இந்தியா இந்திய மக்களுக்கானது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மொழி, மதம், இனம், நிறம் என்று வேறுபாடுகள் கடந்து இந்தியராக ஒன்றிணைந்துள்ள இந்தியர்களுக்கானது. ஆகவே நீங்கள் எங்களுக்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும். காஷ்மீரிகள் பாதிக்கப்படும் போது மற்றவர்கள் குரல் கொடுக்கவில்லை என்றால், நாளை வேறு ஒரு மாநிலம் பாதிக்கப்படும் போது மற்ற மாநிலங்கள் குரல் கொடுக்காமல் அமைதிகாப்பார்கள்.   இது காஷ்மீரிகளின் இழப்பாக நாங்கள் பார்க்கவில்லை. இந்திய ஜனநாயகத்தின் இழப்பாக பார்க்கிறோம். நாம் இந்தப் போரில் வெற்றி பெற வேண்டும். நாம் வாழ வேண்டும். இந்திய அரசியல் சட்டம் வாழவேண்டும். இந்திய ஜனநாயகம் வாழவேண்டும்” – நாட்டின் உயர்ந்தோங்கிய மலையிலிருந்து தோழர் யூசுப் தாரிகாமி விடுக்கும் இந்த அழைப்பு இந்நூல்வழியே ஒலிக்கிறது. உங்களுக்குக் கேட்கிறதா?

1 கருத்து:

  1. i also visited kashmir during may 2023. no newspaper available to know the news people wating tv channels only that to local channels. Many children are childlabours only they are not going to school in the villages.

    பதிலளிநீக்கு

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...