செவ்வாய், ஜூன் 4

ஒரு கத சொல்ட்டா சார்? - ஆதவன் தீட்சண்யா

மோகனும் நளினியும் வங்கி ஊழியர்கள். தொழிற்சங்க வேலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட தோழர்கள். சாதிகளையும் பண்பாட்டு பின்னமைவுகளையும் கடந்து அவர்கள் தமது காதலை முன்மொழிந்து கொண்டது முதல் இன்றளவும் நானும் எனது இணையர் மீனாவும் அவர்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறோம். பெற்றோரின் ஒப்புதலுடன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது அவர்களது விருப்பம். பெண் தரப்பில் பிரச்னை இல்லை. ஆனால் மற்ற தரப்பில் எதிர்ப்பு. இணங்கவைப்பதற்காக அவர்கள் சில வருடங்களாக எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. இயக்கத் தோழர்கள், அலுவலக நண்பர்கள், உடன்பாடுள்ள உறவினர்களை மட்டும் அழைத்து திருமணத்தை நடத்துவது என்று முடிவாகி 200 அழைப்பிதழ்களை தேவை என்றனர். ஒசூர் மீனு பிரிண்ட்ஸில் அச்சடித்து அனுப்பினேன். மறுநாள் இரவு அழைத்த மணமகன், தனது பெற்றோரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும்  தங்களது வட்டத்தில் கொடுப்பதற்கு மேற்கொண்டு 200 அழைப்பிதழ் வேண்டுமென்று அவர்கள் கோருவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இரவோடிரவாக அச்சடித்து அனுப்பிய அதுவும் போதாமல் மூன்றாவது முறையாகவும் அச்சடித்து அனுப்ப வேண்டியதாகிவிட்டது.  

நல்ல நேரம் நாறிப்போன நேரம் என்று ஒன்றுமில்லைதானே? எனவே ஓரளவுக்கு எல்லோரும் வந்துசேர்ந்ததும் தோழர் மைதிலி சிவராமன் தலைமையில் திருமணம் என்றிருந்தோம். 10 மணிக்கும் முன்பாகவே அரங்கம் நிறைந்துவிட்டிருந்தது. மேடைக்கு மணமக்களை அழைக்கும் நேரத்தில் மணமகனின் பெற்றோர் தாங்கள் வாங்கி வந்திருந்த தாலியைக் கொடுக்க முனைந்ததும் சிக்கல் ஆரம்பமானது. சாதி மறுப்பு, சடங்கு மறுப்பாக தங்களது திருமணத்தை நடத்திக்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டிருந்த மணமக்கள் தாலி பற்றி யோசித்திருக்கவேயில்லை. கடவுள் நம்பிக்கை உள்ளவரான மணப்பெண் எப்படி தாலி பற்றி யோசிக்காமல் போனார் என்பதில் பலருக்கும் கூடுதல் அதிர்ச்சி. காரசாரமான விவாதம். (இதனிடையே சிலர் 'இதுங்களோட சகவாசம் வச்சிருந்தா இப்படித் தான்' என்று என்னையும் தோழர் ச.தமிழ்ச்செல்வனையும் தோழர் ராஜியையும் திட்ட ஆரம்பித்திருந்தனர். இதற்கென யாரேனும் ஒரு  வழக்கு போட்டிருந்தால் வரிசைக்கிரமப்படி நாங்கள் மூவரும் ஏ1, 2, 3 ஆகியிருப்போம் என்ற தோழர் எஸ்.வி.வேணுகோபால் இப்போதும் கிண்டலடிப்பதுண்டு.) 

இதனிடையே மதிய உணவு ஆறிக்கொண்டிருக்கிறது, சாப்பிட்டுவிட்டு உங்களது சர்ச்சையைத் தொடருங்கள் என்று உணவகத்துக்காரர் அழைப்பு வேறு. இப்போது ஒரு முடிவைச் சொல்லியாகவேண்டும் என்கிற நிலையில் மணமகள், திருமணத்தில் தாலி அவ்வளவு முக்கியமானதென்றால் இருவரும் கட்டிக் கொள்கிறோம் என்று தீர்மானமாகச் சொல்ல, தாலியைக் கட்டிக்கொள்வதில் தனக்கொன்றும் ஆட்சேபணையில்லை என்று மணமகன் மண்டையாட்ட அந்த மண்டபமே ஒரு கணம் ஆட்டம் கண்டது போலிருந்தது. தாலியின்றி சடங்குகளின்றி அவர்கள் திருமணம் நடந்தேறிய பின் குடும்பத்தினர் அனைவருமே ஒன்னும்மண்ணுமாய் கூடிவிட்டனர். 

மணமகன் எனக்கு தாலி கட்டினால் நான் மணமகனுக்கு தாலி கட்டுவேன் என்று 2004 ஆம் ஆண்டு நளினி சொன்னதை 2024ஆம் ஆண்டில் ஒரு பெண் 'ஹாட் ஸ்பாட்' படத்தில் செயல்படுத்தி இருக்கிறாள். நான்குக்கதைகளைக் கொண்ட இப்படத்தின் முதற்கதை, ஆணின் நலன்களையும் விருப்பங்களையும் மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ள குடும்ப அமைப்பில், பெண்ணின் இடத்திற்குள் ஆணை மாற்றிப் பொருத்தினால் எப்படி இருக்கும் என்று பேசுகிறது. 

பெண் பார்ப்பதற்கு பதிலாக மாப்பிள்ளை பார்ப்பது, கட்டின வேட்டியோடு உங்க பையன் வந்தால்கூட போதும் நாங்க கண்கலங்காம பாத்துக்குவோம் - ஆனா உங்க பையனுக்கு நீங்களா பார்த்து என்ன வேணும்னாலும் போடுங்க என்று பெண்ணின் தாய் சூசகமாக வரதட்சணை கேட்பது, பெண் கை நிறைய சம்பாதிப்பதால் திருமணத்திற்குப் பிறகு பையன் வேலையை விட்டு நிற்கவேண்டும் என பெண்வீட்டார் நிபந்தனை விதிப்பது, மணமகள் மணமகனுக்குத் தாலி கட்டுவது, ‘பொண்டாட்டி வீட்டுக்கு வாழப் போகும் கண்ணே, மாப்பிள்ளை கண்ணேஎன்று பையன் வீட்டார் அவனை காரில் ஏற்றி அனுப்புவது, முதலிரவு அறைக்குள் பால்செம்புடன் மணமகன் செல்வது, பின் தூங்கி முன்னெழுந்து தலைக்கு குளித்துவிட்டு காபி போடுவது முதல் மற்ற வேலைகள் அனைத்தையும் செய்வது, அவன் உட்பட படத்தில் வரும் ஆண்கள் தழையதழைய தாலியை தொங்கவிட்டுக்கொண்டு நடமாடுவது, நாத்தனாரின் சிடுசிடுப்புக்கு மாற்றாக இவனுக்கு மச்சினன் சிடுசிடுப்பு, அப்பா வீட்டுக்குப் போய்வர ஆசையாயிருக்கு என்று ஏக்கத்தை அவளிடம் தயங்கித் தயங்கி சொல்வது இப்படியாக எல்லாவற்றையும் தலைகீழாக்கி நேர்ப்படுத்த முயன்றிருக்கிறார்கள். குளிக்கும்போது தாலியைக்  கழற்றி வைத்தவன் ஞாபக மறதியாக வந்துவிட அது மாமனாருக்குத் தெரிந்துவிட ஒரே களேபரம். உங்கப்பன் உனக்கு என்னத்த சொல்லி வளர்த்தானோ என்று மாமனார் ஏச, எங்கப்பமூட்டப் பத்தி பேசற வேலை வச்சிக்காதீங்க என்று அவன் பதிலுக்கு கத்த, எதுத்தெதுத்துப் பேசறீயாடா என்று மனைவி அவன் கன்னத்தில் அறைய... திடுக்கிட்டு விழித்துக்கொள்கிறான். இதுவரை கண்டது கனவு என்று முடித்துக் கொள்ளாமல், குடும்பத்தால் விழுங்கப்படும் பெண்ணின் சுயம் பற்றி பேசும் அவன் அதை மீட்டெடுத்துக்கொள்வதற்கான விவாதங்களை முன்வைக்கிறான்.  

நடுவதற்காக பிடுங்கும் சிறுசெடியைக்கூட அதன் வேரடிமண்ணை தாய்மண்ணை சேர்த்தெடுத்துப் போகிறோம். புலம்பெயர்கையில் குலதெய்வக் கோவிலிலிருந்து பிடிமண்ணை எடுத்துப்போய் புதுக்கோவிலைக் கட்டினால்தான் தெய்வமே கூட அங்கு தங்கும் என்கிறார்கள். ஆனால் ஒரு பெண் திருமணமானதுமே பிறந்து வளர்ந்த வீட்டை விட்டுவிட்டு கணவன் வீட்டுக்குப் போய் புகாரின்றி பொருந்தி வாழவேண்டும் என்று எதிர்பார்க்கிற குடும்ப அமைப்பு மீது வைக்கப்பட்டுவந்த விமர்சனத்தை இன்னும் வலுவாக இந்தப்படம் எழுப்புகிறது.  

மற்ற மூன்று கதைகளும்கூட மிகுந்த சமகாலத்தன்மையுள்ள பிரச்னைகளையே நுணுக்கமாகப் பேசுகின்றன. ஒருவன் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வேவு பார்ப்பதற்காக தனது சக ஊழியன் ஒருவனை அனுப்பிவைக்க வந்தவனுக்கும் இவளுக்கும் காதலாகிவிடுகிறது. ஆனால் இந்த விசயத்தை நேரடியாகச் சொன்னால் தனது பெற்றோர் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்று யூகிக்கும் அப்பெண், தானொரு லெஸ்பியன் என்றும் தனது காதலியுடன் பதிவுத்திருமணம் செய்து கொண்டுவிட்டதாகவும்  அவர்களிடம் கூறுகிறாள்.  அதிர்ச்சியாகிப் போகும் அவர்கள் தாம்தூமெனக் குதித்துக்கொண்டு எவனாச்சும் ஒரு பையன்னா கூட பரவால்ல, போயும் போயும் ஒரு பொம்பளைய கல்யாணம் பண்ணிருக்கியே என்று அலறுகிறார்கள். இந்த வார்த்தைகளுக்காகவே காத்திருந்த அவள், சரிசரி உண்மையில நான் ஒரு பையனைத்தான் லவ் பண்றேன், அவனையே கட்டி வையுங்க என்று மடக்கி சம்மதம் பெறுகிறாள். ஆனால் பையனின் தாயும், காதல் திருமணம் செய்துகொண்டதால் குடும்ப உறவுகளால் விலக்கிவைக்கப்பட்ட அவளது தாயும் சகோதரிகள் என்கிற உண்மை அப்போது தெரியவர இவர்கள் அண்ணன் தங்கை முறையாகிவிடுகிறார்கள். இந்தப் புதிய உறவுமுறை தெரிய வருவதற்கும் முன்பே தாங்கள் வளர்த்தெடுத்தக் காதலை என்ன செய்வதென்று அறியாமல் தற்கொலைக்கு முயற்சிப்பதுதான் இரண்டாவது கதை. தன்பாலீர்ப்பு பற்றி பொதுப்புத்தியில் உறைந்துள்ள அசூயை, காதல் திருமணத்தின் மீதான ஒவ்வாமை, உறவுமுறை என்னும் வரம்பு, பெண்ணின் நடத்தை மீதான ஐயம் கொண்டு வேவுபார்க்கும் ஈனப்புத்தி ஆகியவற்றின் மீது கேள்வியெழுப்பியபடி பரவிச்செல்லும் இக்கதை தற்கொலையைத் தீர்வாக வைத்திருக்க வேண்டியதில்லை.  

ஐ.டி.ஊழியன் ஒருவன் அலுவலக கழிவறைக்குள் மொபைலில் ஒரு காட்சியைப் பார்த்தபடியே சுயமைதுனம் செய்துகொண்டிருக்கும் காட்சி கண்காணிப்புக் கேமரா வழியே (அங்கே கேமரா வைக்கப்பட்டது தொடர்பாக மேலாளர் தரும் விளக்கம் படுஅபத்தம்) அலுவலகம் முழுவதும் பரவிவிடுகிறது. அவன் அங்கிருப்பதையே அருவருப்பாக உணர்வதாக பெண் ஊழியர்கள் தெரிவித்ததையடுத்து உடனடியாக வேலையிலிருந்து வெளியேற்றப்படுகிறான். வேறுவேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கும் காலத்தில் பல்வேறு கடன்களுக்கான தவணைகளைச் செலுத்த வேண்டிய நெருக்கடியில் இருக்கும் அவன், ஒரு தரகர் மூலமாக மேற்குடிப் பெண்களுக்கான பாலியல் தொழிலாளியாக மாறுகிறான். (தன் அம்மாவையே வாடிக்கையாளராக பார்க்க நேரிடுவது சார்ந்த காட்சி செயற்கையாகத் தெரிகிறது).  ஒருநாள் அவன் ஆண் பாலியல் தொழிலாளிகள் பற்றிய செய்தித் தொகுப்புக்காக தகவல்களைத் திரட்டிவரும் ஊடகவியலாளரான அவனது காதலியிடம் பிடிபட்டுவிடுகிறான்.  

பல்வேறு தொழில்களைப்போல இதுவும் ஒரு தொழில், காதல் வேறு காமம் வேறு, லவ்னா என்ன லஸ்ட்னா என்ன, உன் மீது மட்டுமே இருப்பது காதல், உடலால் தொடுவதும் உள்ளத்தால் நெருங்குவதும் ஒன்றல்ல  என்றெல்லாம் பல்வேறு தர்க்கங்களை நிறுவுகிறான். ஒருகட்டத்தில் அவன் சொல்வதை ஏற்றுக் கொள்வதாக கூறி முத்தமிடும் அவள், நீதான் என்றென்றும் என் காதலன், உன்மீது மட்டும்தான் எனக்கு காதல், ஆனால் இப்போது என் காமத்திற்கு உன் நண்பனை ஏற்பாடு செய் என்று அவனது தர்க்கத்தையும் நியாயத்தையும் அவன்மீதே எய்கிறாள். திணறித் திண்டாடி ஏதேதோ பிதற்றுகிறான். அவளது பிடிவாதம் தளராத நிலையில் நண்பனை அழைத்துவந்துவிடுகிறான். இப்போது நண்பன் தடுமாறித் தத்தளிக்கிறான். அவள் அடுத்தக் கட்டத்திற்கு நகர்கிறாள். பொறுக்கமாட்டாமல் அவளைத் தாக்கும் அவனது கையில் உங்களுடைய என்னுடைய கைகளும்கூட ஒளிந்திருக்கக்கூடும். ஆண்களால் ஆண்களுக்காக உருவாக்கிக்கொள்ளும் நியாயங்களை பெண்கள் கோரும்போது அவற்றை குற்றங்களாக்கிவிடும் கபடத்தை நெங்காலமாக திறம்பட நிறைவேற்றும் நம்மை பொளேரென அறைந்து வீழ்த்துகிறது இக்கதை. 

குழந்தைகளை அவர்களது வயதுக்கு மீறிய உள்ளடக்கம் கொண்ட ரியாலிட்டி ஷோ எனும் தொலைக்காட்சி நிகழ்வுகளில் பங்கெடுக்கச் செய்வதில் உள்ள வன்முறையை அம்பலப்படுத்தி அவர்களுக்கு குழந்தைமையை மீட்டெடுத்துக் கொடுப்பதற்கான முயற்சியின்பாற்பட்டது நான்காவது கதை. போட்டிக்குச் செல்வதென்றாகி விட்டால் எப்பாடுபட்டேனும் வெற்றிபெற்றாக வேண்டும் என்று குழந்தைகளை வதைக்கும் பெற்றோர்களை தொலைக்காட்சி அரங்குகளில், கல்விக்கூட வாயில்களில், பள்ளி ஆண்டுவிழா மேடைகளில், நீட் தேர்வு மையங்களில் பார்க்க முடிகிறது. அவ்வாறாக தாயால் நெட்டித்தள்ளப்படும் ஒரு சிறுமி நிகழ்ச்சி ஒத்திகையின் போது வல்லாங்கு செய்யப்பட்டு கொல்லப்படுவதற்கு அந்நிகழ்வின் உள்ளடக்கம் சார்ந்த அவளது ஐயங்களே காரணமாகிவிடுகிறது. வலிக்குது அண்ணா விட்டுருங்க என்று பொள்ளாச்சியில் கேட்ட அந்த உயிரறுக்கும் கதறலை மீண்டும் எழுப்பியபடியே இச்சிறுமி இறக்கிறாள். இந்தக் குற்றத்தின் பங்குதாரிகளாக நீடிக்கப் போகிறீர்களா அல்லது விடுவித்துக்கொள்ளப் போகிறீர்களா என்ற கேள்வியை  பெற்றோர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், நிகழ்ச்சித்தயாரிப்பாளர்கள், விளம்பரதாரர்கள், எல்லாவற்றையும் கைகொட்டி ரசிக்கும் பார்வையாளர்கள் அரசுகள் - என எல்லோரிடமும் இக்கதை எழுப்புகிறது.  

திரை இயக்குனராகும் வேட்கை கொண்ட ஓர் இளைஞர், தனது காதலியின் தந்தையான படத் தயாரிப்பாளரைச் சந்தித்து இந்த நான்கு கதைகளையும் அவரிடம் சொல்லி படம் தயாரிக்கவும்  முடிவில் தனது காதலுக்கும் சம்மதம் பெறுகின்ற கதையும் இதேயளவுக்கு பொருட்படுத்தத்தக்கது. இஸ்லாமிய வெறுப்பை வைத்தே பரந்த இந்த நாட்டின் ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்கிற கொடுங்கனவோடு மோடிகள் திரியும் இக்காலத்தில், இந்தப் படத்தின் முதன்மைப்பாத்திரத்திற்கு முஸ்லிம் பெயரைச் சூட்டியிருக்கும் துணிச்சலுக்காகவும் நல்லிணக்க மனப்பாங்கிற்காகவும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் உள்ளிட்ட படக்குழுவினரை தனிச்சிறப்பாக பாராட்டத் தோன்றுகிறது. 

x

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

செருப்பனாசின் - ஆதவன் தீட்சண்யா

மோசமான அரசனிடமிருந்து மக்களைக் காக்கும் கடப்பாட்டுணர்வில்   தானே அரியணை ஏறிய செருப்பினை  எம்முன்னோர்கள் தைத்திருக்கிறார்கள்.  ஊரெல்லையில்  த...