வியாழன், நவம்பர் 12

மசியின் நிறங்கள் - ஆதவன் தீட்சண்யா

அ.பாண்டியன் எழுதிய ‘அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை’ என்கிற நூலின் வெளியீட்டு விழாவில் ( நவம்பர் 1, கோலாலம்பூர்) பேசியது.. 

பல்லினங்கள் வாழக்கூடிய ஒரு சமூகத்தில் ஒவ்வொரு இனமும் தன்னுடைய தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களைப் பேணிக்கொள்கிறது. அதேவேளையில் அது தனக்குப் புறத்தே இருக்கிற பிற இனங்களின் பண்பாட்டிலிருந்து தேவையானதை தன்வயமாக்கிக்கொள்வதோடு தன்னிடமிருப்பதை பகிர்ந்தும்கொள்கிறது. நாம்- நாங்கள், அவர்கள் - மற்றவர்கள் என்கிற பாகுபாடுகளைக் கடந்து இடையறாது நிகழ்ந்தவாறே இருக்கும் இந்தப் பரிமாற்றம் பண்பாட்டுப் பொதுமைகளை உருவாக்குகிறது.

ஒவ்வொரு இனமும் தன்னையும் தனக்கு வெளியே இருக்கிற மற்ற இனங்களையும் குறித்த மதிப்பீடுகளைக் கொண்டிருக்கிறது. தனக்கும் மற்றவர்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசங்களை தனித்துவங்களாக கருதி இணக்கம் பேணுவது அல்லது இந்த வித்தியாசங்களின் மீது நல்லது-கெட்டது, உயர்வு- தாழ்வு, தீட்டு- புனிதம் ஆகிய கற்பிதங்களை ஏற்றி இடைவெளியை உருவாக்குவது என்பதாக இம்மதிப்பீடு உருத்திரள்கிறது.    

வரலாற்றின் போக்கில் இனங்களுக்கிடையே உருவாகியுள்ள பொதுமைகளையும் வித்தியாசங்களையும் விளங்கிக்கொள்வதற்கான தரவுகளை மொழியும் கலை இலக்கியமும் பொதித்துவைத்திருக்கின்றன. எனவே தனது சகஜீவிகளான மலாய் இனத்தவரது வாழ்வியலை அவர்களது சிறுகதைகளின் ஊடாக புரிந்துகொள்ள அ.பாண்டியன் மேற்கொண்ட முயற்சியும் வாசிப்பனுபவமும் ‘அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை’ என்கிற கட்டுரைத்தொகுப்பாக நமக்கு கிடைத்திருக்கிறது.

இயற்கைக்கும் தனக்கும், தனக்கும் தன்னையொத்த மனிதச் சமூகத்திற்கும் இடையிலான உறவுகளுக்கும் முரண்களுக்குமான காரணங்களை கற்பிதமாக புனையத் தொடங்கியதிலிருந்து கதைகள் பிறந்தன எனலாம். காலத்தோடு சேர்ந்து கதைகளும் வளர்ந்து பெருகின. அச்சு இயந்திரங்கள் உருவாகி செய்தித்தாள்கள் வெளியான காலத்தில் அவை மக்களை ஈர்ப்பதற்காக அதாவது சந்தையை விரிவுபடுத்துவதற்காக மக்களது கூட்டு நினைவில் ஆழப்பதிந்து வாய்மொழி மரபாக பரவிக்கிடந்த இந்த தொல்கதைகளைச் சுருக்கி வெளியிடத் தொடங்கின. செய்தித்தாள்கள் ஒதுக்கும் இடவரையறையைக் கருத்தில் கொண்டு அதற்குள்ளாக அடங்கிவிடும் தன்மையில் உருவாக்கப்பட்ட வடிவம்தான் சிறுகதை. பின்னாளில் காலனியம் பரவியபோது அதனூடாகவே அச்சியந்திரமும் சிறுகதை வடிவமும் பரவியது என்பதற்கும் அப்பால் இதை திருநிலைப்படுத்திக் கொண்டாட எதுவுமில்லை. ஆகவே சிறுகதைக்குரிய வடிவ மற்றும் உள்ளடக்க வரையறை என்பது எழுதப்படும் மொழிக்குரிய மக்களின் தேவைகளையொட்டி மாறிக்கொண்டே இருக்கிறது. மலாய் சிறுகதையிலும் இதுதான் நடந்திருக்கிறது என்பதை பாண்டியனின் நூல்வழியே அறியமுடிகிறது.

ஒரு பெரும்பான்மை தேசிய இனத்தின் மொழியாகவும், சுதந்திரத்திற்குப் பின் தேசிய மொழியாகவும் சிறப்புரிமை பெற்ற மலாய் மொழிச் சிறுகதைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை காய்தல் உவத்தல் இன்றி சொல்லி, அது  பழமைவாதத்தையும் மத வட்டத்தையும் தாண்ட முடியாமல் மாட்டிக் கொண்டிருப்பதையும் அவற்றுக்கெதிரான  மீறல்களையும் விமர்சனப்பூர்வமாக முன்வைக்கிறது அறிமுகக் குறிப்பு. மலாய் சிறுகதைகளோடு மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளின் நிலையை ஒப்பிட்டுள்ள பார்வையும் முக்கியமாகப் படுகிறது. ஆனால், மலேசியத் தமிழ்ச்சமூகத்திற்கு எழுத்தறிவு கிடைக்கப் பெற்றதற்கான வரலாற்றின் தொடர்ச்சியில் வைத்துதான் மலேசியத் தமிழ் எழுத்திலக்கியத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் மதிப்பிட வேண்டும். மலேசியத் தமிழிலக்கியத்தை அதன் காலத்திற்குள் வைத்து மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கோருவதை அதற்கு கோரப்படும் சலுகையாக தாழ்த்திக் கொள்ளவேண்டியதில்லை. ஆகவே அதை தமிழ்நாட்டு அல்லது மலாய் சிறுகதைகளுடன் ஒப்பிடுவது பொருந்தா முடிவுகளுக்கே இட்டுச் செல்லும். மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளின் இன்றைய நிலை காலம் அதை அனுமதித்த அளவை எட்டியுள்ளதா, காலத்தின் தேவையை நிறைவு செய்யும் உள்ளக ஆற்றலை பெற்றுள்ளதா என்கிற ரீதியிலான ஆய்வின் தேவையை இந்த அறிமுகக் குறிப்பை வாசிக்கும் போது உணரமுடிகிறது.

ஷஹனூன் அமாட் எழுதிய வறண்ட வயல், ஹிடாயா அஸ்ஸாரி எழுதிய நாவிதனின் மகள், பஹருடின் கஹார் எழுதிய பா உரே, டத்தோ அப்துல்லா  ஹூசேன்  எழுதிய தன்னை தொலைத்தவர்கள், ஸைன் கஸ்தூரி எழுதிய ஹாங் நாடிமின் வேறு கதை, அனுவார் ரிட்வான் எழுதிய டிக் டிக் டிக், சஸ்ஜீரா எழுதிய சக்களத்தி ஆகிய மலாயர்கள் எழுதிய சிறுகதைகளையும்,  தமிழரான சரோஜாதேவி மலாயில் எழுதிய ‘கந்தசாமி’, க்ஷியோ ஹேய் என்பவர் சீனமொழியில் எழுதி வூ தெக் லோக் என்பவரால் மலாயில் மொழியாக்கம் செய்யப்பட்ட ‘தூறல் மழையில்’ ஆகிய சிறுகதைகளையும் ஏ.சாமாட் சைட் எழுதிய சலீனா என்கிற நாவலின் ஒரு பகுதியையும் அறிமுகப்படுத்தி பாண்டியன் எழுதிய பத்து கட்டுரைகளே இத்தொகுப்பு.

கட்டுரையின் பேசுபொருள் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கிறது.

1. எழுத்தாளர் அறிமுகம்

குறிப்பிட்ட எழுத்தாளரின் சமூகப் பின்புலம், எழுதவந்த காலகட்டம், அவரது இலக்கியப் பார்வை, இலக்கியத்தில் அவரது பங்களிப்பு, பெற்ற விருதுகள், சமூகத்தில் அவர் ஆற்றிவரும் பணிகள் மற்றும் வகிக்கும் பொறுப்புகள் குறித்த விவரங்கள் சுவைபடச் சொல்லப்படுகிறது. வாழ்வின் வெவ்வேறு அடுக்குகளிலிருந்து எழுத்தாளர்கள் உருவாகி வந்திருப்பதையும் தங்களது அன்றாடங்கள் விதிக்கும் தளைகளை மீறி   அவர்கள் படைப்புரீதியாக தங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் அறியத் தருகிறது.  

2. கதையின் கதை

குறிப்பிட்ட கதை மலாய் சிறுகதைப்பரப்பில் வடிவ மற்றும் உள்ளடக்கரீதியில் கொண்டுள்ள தனித்துவம், சமூகத்தின் நிலவரம் கதையின் மையக்கருவாக உருத்திரண்டு வெளிப்படுவதற்கான காரணிகள், கதை எதிர்கொள்ளப்பட்ட விதம், அது பிறமொழிக் கதைகளோடு கொண்டுள்ள ஒப்புமை. 

3. கதை

கதையின் சுருக்கம், அந்தக்கதை பற்றிய பாண்டியனது கருத்து

ஒருவகையில் இவரது கதைத்தேர்வு வட்டாரம் சார்ந்தும் வகைமை சார்ந்தும் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. மலேசியாவின் வெவ்வேறு பகுதிகளைச் சார்ந்த மக்களின் கதைகள் அவர்களது வட்டார மொழிநடையில் எழுதப்பட்டிருப்பது இங்கு கவனப்படுத்தப்படுகிறது. போட்டிப் பொறாமையிலும் பரஸ்பர அவநம்பிக்கையிலும் வெந்துழலும் விவசாயிகள், தமது தேவையிலிருந்து புதியதொரு கூந்தல் அலங்கார பாணியை அறிமுகப்படுத்திவிடுகிற பாசமிகு நாவிதரும் அவரது மகளும், பூர்வீக நிலம் அரசாங்க ஒப்புதலோடு அபகரிக்கப்படுவதன் வலியில் துடிக்கும் பழங்குடி, தன்னலம் துறந்த அரசியல் போராளிகள், தாயகம் எதுவெனக் குழம்பித் தவிக்கும் இந்திய வம்சாவளித் தொழிலாளிகள், இஸ்லாத்தை தழுவி மலாய்க்காரராக மாற தீவிரமாய் முயற்சிக்கும் ஆங்கிலேயர்- மேற்கத்திய வாழ்முறையை ஆரவாரமின்றி கைக்கொண்டிருக்கிற மலாய்கள், சமகாலத்திற்கு இழுத்துவரப்பட்ட செவ்வியல் இலக்கியத்தின் கதாநாயகன், ஓட்டரசியலின் பகடைகளாக உருட்டப்படும் எளிய மக்கள், ஹிரோஷிமா பெண்ணும் நெவாடா ஆணும், கணவனை இன்னொரு பெண்ணுடன் பகிர்ந்துகொள்வதற்கு இடமளிக்கும் மதாச்சாரத்தை கேள்விக்குட்படுத்தும் பெண்கள் என்று இக்கதைகளின் மாந்தர்கள் மலேசிய சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகளைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் வழியே சொல்லப்படும் கதைகள் மலேசிய சமூகத்திற்கு அப்பாலும் விரிந்து மனிதகுலம் எதிர்கொள்ளும் சிக்கல்களை பேசமுனைகின்றன.

இனம், மொழி, மதம் ஆகியவை ஒன்றாகவே இருந்தபோதும் தனிமனிதர்களுக்கு இடையே நிலவும் முரண்கள், பண்பாட்டு ஊடாட்டங்களால் ஏற்படும் மாற்றங்களை ஏற்கவும் விலக்கவுமான மனப்போராட்டம், ஒரு சமூகமாக ஈட்டிய சாதனைகளையும் பெருமிதங்களையும் பகிர்ந்துகொள்வதிலுள்ள இடர்ப்பாடுகள், தனிமனித வாழ்வில் மதம் வகிக்கும் பங்கு, பழமைவாதத்தின் மீதான பிடிப்பும் விடுவித்துக் கொள்வதற்கான எத்தனங்களும், ஆண் பெண் உறவுகளில் வெளிப்படும் பாலினப் பாகுபாடும் ஒடுக்குமுறையும், அரசியல் போதாமையும் ஏமாற்றுகளும், நகரமயமாக்கத்திற்காக விரட்டியடிக்கப்படும் மக்களின இடப்பெயர்வு, ஆயுதக்குவிப்பு மற்றும் போரினால்   ஏற்படும் அழிமானங்கள் என்று உலகளாவிய அளவில் மனிதகுலம் எதிர்குலம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மலாய் கண்கொண்டு பார்த்து எழுதப்பட்டவையாய் இருக்கின்றன இக்கதைகள்.

தனது சகஇனத்தவரைப் பற்றி எழுதும் போது கவனம்வைக்க வேண்டிய வரம்பு உள்ளிருந்து வழிநடத்துவதால் அதற்கிசைவான மொழி பாண்டியனுக்கு வாய்த்திருக்கிறது. தோட்ட வாழ்க்கை, தோட்டங்கள் துண்டாடப்படுதல், மலாயா கம்யூனிஸ்ட் இயக்கம், ஜப்பான் ஆதிக்கம், இரண்டாம் உலகப்போர், பெர்சே போராட்டம், அணுகுண்டு அபாயம் என்று கதைகளை ஒட்டியும் உட்புகுந்தும் பல்வேறு விசயங்களைப் பேசுவதற்கு அவரை இக்கதைகள் தூண்டியிருக்கின்றன.

‘கறாரான’ விமர்சன அளவுகோல் எதுவும் என்னிடம் இல்லை. அதை வைத்திருப்பதாக அலட்டிக் கொள்கிறவர்கள் அதைக்கொண்டு ஒருபோதும் தன் எழுத்துகளை அளந்ததாக நான் கேள்விப்பட்டதுமில்லை.  எனவே வாசிப்பை வெறும் அனுபவமாகவோ சாதனையாகவோ குறுக்கிக்கொள்ளாமல் அது தனக்குள் ஏற்படுத்திய சலனங்களை உணர்ந்ததை உணர்ந்தவாறு யாவரோடும் பாண்டியன் பகிர்ந்துகொண்டிருக்கும் அதேபாங்கில் இந்நூல் குறித்த எனது கருத்துகளை இங்கு நான் பகிர்ந்திருக்கிறேன்.

வெள்ளி, நவம்பர் 6

தூங்கா இரவும் தூங்கித் தொலைத்த பகலும் - ஆதவன் தீட்சண்யா


வல்லினம் கலை இலக்கிய விழா முடிந்து நவம்பர் 4ம் தேதி மாலை நாடு திரும்ப கோலாலம்பூரில் ஏர் ஏசியா விமானம் ஏறியபோது அதியதிசயமென மிகச்சரியாக 9 மணிக்கு வண்டி கிளம்பியது. ஆனால் கிளம்பிய விமானம் வெகுநேரமாக ஓடுபாதையில் சுற்றிக் கொண்டேயிருந்தது. ஒருவேளை இது தரைவழியாகவே இந்தியாவைச் சென்றடையும் விமானமாக இருக்குமோ என்கிற சந்தேகம்கூட வந்துவிட்டது. இது வெறும் பஸ்ஸா அல்லது ஏர்பஸ்ஸா என்கிற அளவுக்கு எனது யோசனை தாறுமாறாகிகொண்டிருக்க விமானமோ பல சுற்றுகளுக்குப் பின்னும் மேலெழும்பவேயில்லை. கடைசியில் ஏதோ இயந்திரக் கோளாறு என்று புறப்பட்ட இடத்திற்கே கொண்டுபோய் நிறுத்திவிட்டு 10 நிமிடங்கள் பொறுமை காக்குமாறு சொன்னார்கள். நமது பொறுமைதான் உலகறிந்த விசயமாயிற்றே, காத்திருந்தோம். கொஞ்சநேரத்திற்குப் பிறகு, இப்போதைக்கு சரியாகும் வழியைக் காணோம் என்று சொல்லி  கீழேயிறக்கி  அழைத்துப்போய் ஒரு அறையில் உட்காரவைத்துவிட்டார்கள். இப்போ அப்போவென நேரம் ஓடிக்கொண்டிருந்தது. நேரம் ஆகஆக அதற்கு முந்தைய நாள் ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது, காணாமல் போய் ஒருவருடமாகியும் கண்டுபிடிக்க முடியாத மலேசிய விமானம் என்று பயணிகள் விமானம் தொடர்பான மர்மங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள்  . 

நானோ யாரோடும் தொடர்பு கொள்ள வழியற்று எங்கோ மாட்டிக்கொண்டது போன்ற உணர்வில் தத்தளித்துக் கொண்டிருந்தேன். கடைசியில் விமான நிலைய ஊழியர் ஒருவரது மொபைல் வழியாக சகோதரி மணிமொழியிடம் பேசி, வந்து சேர தாமதமாகும் என்கிற தகவலை வீட்டாருக்கு தெரியப்படுத்தினேன். ஆனால் அதற்குள்ளாகவே பெங்களூர் விமான நிலையத்திலிருந்து என்னை வீட்டுக்கு அழைத்து வருவதற்கான வண்டியை அவர்கள் அனுப்பிவைத்து விட்டிருந்தார்கள். நானோ கோலாலம்பூர் விமானநிலையத்திலேயே காத்துக்கிடந்தேன்.

நண்பர்களைச் சந்தித்ததிலும், நிகழ்வுகளில் பங்கேற்றதிலும் உண்டாகியிருந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் வடிந்து ஊர் போய் சேர்ந்தால் போதும்  என்றாகிவிட்டது. மேலும் தாமதமாகிக் கொண்டிருந்த நிலையில் ஏர் ஏசியாவினர்சோத்துப்பொட்டலம் கொடுத்து தின்னச் சொன்னார்கள். ஒருவழியாக கோளாறை சரி செய்துவிட்டதாக இரவு 12.30 மணிக்கு அதே விமானத்தில் ஏற்றிய போது மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு கொஞ்சமும் நம்பிக்கை ஏற்படவில்லை. இயல்பான சத்தங்கள்கூட கோளாறாகவே கேட்டதில் கண்ணைக் குத்தினாலும் தூக்கம் வரவில்லை.  நடுவானில் விமானம் வெடித்துச் சிதறியதில் ஆதவன் சாவு என்கிற செய்தி கேட்டு முதலில் மகிழ்ச்சியடையக் கூடியவர் யார் என்று யோசித்ததில் சிலபெயர்கள் பின்னுக்குப் போய் சில பெயர்கள் புதிதாக முன்னுக்கு வந்தன. ( யாருமற்ற பாலைவனத்தில் விட்டாலும் மணலை எதிரியாக்கிக் கொள்ளும் வல்லமை நமக்கிருக்கிறதே?) ஆனால் அத்தகைய நல்வாய்ப்பை அவர்களுக்கு இந்தமுறை வழங்காத ஏர் ஏசியா, ஒருவழியாக அதிகாலை 5 மணிக்கு பெங்களூர் வந்து சேர்ந்தது. 

ஒசூரிலிருந்து  வண்டியோடு ராத்திரி 10 மணிக்கே வந்துவிட்டிருந்த நண்பர்கள் ராமனும் வரதராஜனும் விடியவிடிய தூக்கமின்றி  விமான நிலையத்தில் காத்திருந்தனர். காத்திருக்கும் அன்புக்கு கட்டணம் பெறத்தெரியாத ராமன் ஒரு தொழில்முறை வாகனமோட்டியாய் இருந்திருந்தால் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியிருப்பார்.

சொக்கிச்சொக்கி விழுந்தபடியே வீடு வந்து சேர்ந்ததுதான் தெரியும், நேற்று மாலைவரை தூக்கம் தூக்கம்... தூக்கம் முழுவதும் கனவுகள். பிற்பகலில் பிரளயன் வந்து எழுப்பாவிட்டால் ஒருவேளை எனக்கான அஞ்சலிக்கூட்டத்தையும் கனவில் கண்டிருப்பேன்.


ராட்டைச் சக்கரமும் அசோகச்சக்கரமும் - இங்கிலாந்து நாடகத்தை முன்வைத்து - ஆதவன் தீட்சண்யா



ஒரு நாடகத்தைக் காண்பதற்கு அதன் பனுவலை வாசித்திருக்க வேண்டும் என்பது முன்னிபந்தனையல்ல. ஆயினும் நான் ந.முத்துசாமி எழுதிய இங்கிலாந்து நாடகத்தைப் பார்ப்பதற்கு முன்பாக அதன் பனுவலை எனக்கு படிக்க வாய்த்தது. தமிழ் நாடக உலகிற்கு கடந்த நாற்பதாண்டு காலமாக கூத்துப்பட்டறையும் ந.முத்துச்சாமியும் ஆற்றிவரும் பங்கு குறித்த மதிப்பீடுகளை முன்வைத்து பிரளயன் எழுதியிருந்த கட்டுரையொன்றில் ‘அவரது முக்கியமான நாடகங்களிலொன்று’ என இங்கிலாந்தைக் குறிப்பிடுகிறார். 1989ல் ந.முத்துசாமியின் நெறியாளுகையிலும் பிறகு அன்மோல் வெலானியின் நெறியாளுகையிலும் இந்நாடகம் நிகழ்த்தப்பட்ட போது அதைக் கண்டிருந்தவர்  பிரளயன். எனவே, அந்தக் காணனுபவத்தை  இருபதாண்டுகாலம் தனக்குள் பொதித்து வைத்திருந்த பிரளயனின் நெறியாளுகையில் 2015ல் அதே பனுவல் நாடகமாக நிகழ்வதானது கூடுதல் முக்கியத்துவமுடையதாகிறது. 

ஒசூர் டி.வி.எஸ். பள்ளி மாணவர்களைக் கொண்டு பிரளயன் நிகழ்த்திய நாடகங்கள் பலவற்றை கருநிலையிலிருந்து முழுநிலையை எட்டும் வரையான வளர்போக்கினை உடனிருந்து பார்த்திருக்கிறேன். உணர்வை சொல்லாக்குவதும், ஒரு சொல்லை காட்சிப்படுத்துவதும், சடப்பொருளை உயிர்ப்பிப்பதும், உயிர்ப்பொருளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்திச் செலுத்துவதுமாக அவர் அரங்கை தன்மயப்படுத்திப்போவார். அதேவேளையில் அது ஒரு கூட்டுச் செயல்பாடாக, ஜனநாயகத்தன்மையோடு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். இவற்றோடு அவரது நெறியாளுகையினூடான சென்னை கலைக்குழுவின் நாடகங்கள், புதுவை பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு நடத்திய பாரி படுகளம் போன்றவற்றையும் பார்த்திருந்த முன்னனுபவங்களுடன் தான் 2015 செப்டம்பர் 5 அன்று மாலை இங்கிலாந்து பார்க்கப் போனேன்.

***

இங்கிலாந்து நாடகத்தின் பனுவலை வாசிக்கும் போது இதை எப்படி நாடகமாக நிகழ்த்தியிருக்க முடியும், அல்லது நிகழ்த்த முடியும் என்கிற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. அந்தளவுக்கு அருவமாகவும் திட்டவட்டப்படுத்த முடியாத சொற்கோலமாகவும் பல விசயங்களை எழுதியிருக்கிறார் ந.முத்துசாமி.  அவரது புஞ்சை கிராமம் பரந்த நாடாக விரித்து வைக்கப்படுகிறது. புஞ்சை எங்கெங்கும் இருப்பதாக சொல்வதன் மூலம் அதன் கதை எனச்  சொல்லப்படுவதை நாட்டின் கதையெனக்  கொள்ளமுடியும். மேற்கத்திய மாடுகள் பூட்டிய வண்டி அந்த ஊரின் எந்தப் பாதையில் செல்லவேண்டும் என்று விரும்பி எதிர்பார்க்கிறோமோ அந்தப் பாதையில் அது செல்லவில்லை. வண்டியோட்டியின் கவனமின்மை, சரியாக சொடுக்கப்படாத அல்லது தவறாக சொடுக்கப்படுகிற சாட்டைக்கழி, மாடுகளின் தடுமாற்றம், வண்டியை குடைநாட்டிக் கவிழ்க்கும்படியாக பாதையில் மறைந்திருக்கும் உளைகள் என்று இந்த திசைவிலகலை நியாயப்படுத்த எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும், வண்டி இலக்கை அடையவில்லை என்பதை பெரும் அங்கலாய்ப்போடு கவனப்படுத்துகிறது இந்த நாடகம். அதேவேளையில், தேர்ந்துகொண்டு இலக்கில் உள்ள கோளாறுகளால் தான் அது அடையப்பட முடியாததாக இருக்கிறதா என்கிற கேள்வியையும் எழுப்புகிறது. 


வரலாற்றின் உக்கிரமான பல நிகழ்வுகள் காலவோட்டத்தில் வெறும் எண்களாகவும் பெயர்களாகவும் மாறி நம் நினைவடுக்கின் ஆழத்திற்குள் புதைந்தும் போகின்றன. சில காட்சிகளோ கலங்கிப்போய் பழுப்படைந்த சித்திரம் போலாகி ஒற்றைச்சொல்லாக சிறுத்துப் போவதுமுண்டு. நிலை திரிந்த இந்த எண்களையும் சொற்களையும் பெயர்களையும் திரும்பத் திரும்ப வெவ்வேறு தொனியில் சூழலில் எழுப்புவதன் மூலம் நமது நினைவாழத்திலிருந்து அவற்றை மேலிழுத்து வந்து மீண்டும் உயிர்ப்பித்து அதனதன் காலத்திற்குரிய மூர்த்தத்தோடு உலவச் செய்கிறது இங்கிலாந்து நாடகம். எண்களை ஆண்டுகளாகவும் ஆண்டுகளை குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அல்லது நிகழ்வுகள் நடந்தேறிய காலமாகவும், பெயர்களை ஆளுமைகளாகவும் ஆளுமைகளை அரசியல் கண்ணோட்டங்களின் பிரதிநிதிகளாகவும் அரங்கிலும் நமக்குள்ளும் ஒரு சேர மாற்றுகிறது நாடகம். வரலாற்றின் ஒரு கண்ணியாக மாறிக்கொண்டிருக்கும் நிகழ்காலத்தில் நாடகம் இன்றைய நடப்பியல் உண்மையாகவும், நடப்பியல் உண்மைகள் பலவற்றின் நேற்றைய வகைமாதிரியாகவும் இயங்குகிறது.

பழங்கால இந்தியச் சமூகத்தை உன்னதமானதாக கற்பிதமேற்றிக் காண்கிற விநோதப் பூஞ்சையால் அரிக்கப்பட்ட கண்கள், நிகழ்காலத்தின் எல்லா பிரச்னைகளுக்குமான தீர்வினை கடந்த காலத்திற்குள் துழாவிச் சலிக்கின்றன. அப்படி கடந்தகாலத்திற்கு திரும்ப வேண்டுமென்ற ஏக்கத்திலும் திரும்பமுடியாத  ஆற்றாமையிலும் காந்தலேறிச் சிவந்த அக்கண்களினூடாக பிரிட்டன் காலனியாதிக்கத்தையும் சுதந்திரப்போராட்டத்தையும் கிராமச்சமூகத்தில் ஏற்பட்டுவந்த அழிமானத்தையும் நவீன பெருநகர் வாழ்வையும் ஒற்றை மனிதர் போல திரள்வதற்கு ஊறு செய்யும் சாதியத்தையும் கண்டால் கிடைக்கும் காட்சிகளை விவரிக்கிற ஒரு பனுவல்தான் இங்கு நாடகமாக்க எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

மனித உடல் எதிலிருந்து உருவாகிறதோ அதை மறுத்து தனியாவதிலிருந்துதான் அடுத்தக்கட்ட வளர்ச்சி சாத்தியம். தாயையும் சேயையும் இணைத்து வைத்திருப்பது தொப்புள்கொடிதான் என்றாலும், குறிப்பிட்ட காலத்தில் அதை அறுத்தெறியாவிட்டால் இரண்டு உயிர்களும் அழிவதற்கு அதுவே காரணமாகிவிடும். அறுத்துவிடப்பட்ட இந்த தொப்புள் கொடி காய்ந்து உலர்ந்து உதிராமல் கிளைத்து வளர்ந்து ஒவ்வொரு வீட்டின் உத்திரத்திலிருந்தும் தொங்கும் நூல்கண்டாக மாறுமானால் அது பழமையின் எச்சமாகவோ தொடர்ச்சியாகவோ ஆகிவிடுகிறது.

பாரம்பரியம் என்பதற்கும் பழமைவாதம் என்பதற்கும் இடையேயான வேறுபாட்டை துல்லியமாக பிரித்தறிகிற போதுதான் காலனியம் உருவாக்கியுள்ள விதேசியத்திற்கு எதிராக எதை முன்னிறுத்துவது என்கிற தெளிவைப் பெற முடியும். பாரம்பரியமானது, ஒரு சமூகத்தால் பொதுவில் பகிர்ந்துகொள்ளப்படும் ஜனநாயகத்தன்மை கொண்டது. பழமைவாதமோ சமூகத்தின் ஒரு பிரிவுக்கான நலனைப் பேணுவதற்கென மட்டுப்படுத்தப்பட்ட எல்லையைக் கொண்டது. அடிப்படையில் இரண்டுமே எதிரெதிரானவை. எனவே பழமை போல் திரிந்துள்ள பாரம்பரியத்தையும் பாரம்பரியம் போல் மினுக்குகிற பழமையையும் ஒன்றெனக் குழப்புவது, நவீனத்துவத்தை விதேசியத்தின் குழந்தையாக காண்கிற அபத்தத்திற்கு கொண்டு சேர்த்துவிடும். பழமைவாதத்தைப் போலவே நவீனத்துவமும் காலவயப்பட்டதோ கருவிமயப்பட்டதோ அல்ல, அது கருத்துவயமானது. 

ஏற்றத்தாழ்வின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள இந்தியச்சமூகத்திற்கு சமத்துவம் என்கிற கருத்துதான் நவீனமானது, மட்டுமல்ல கலகத்தன்மை கொண்டதும்கூட. ஏற்றத்தாழ்வு உருவான காலந்தொட்டே கருக்கொண்டுவிட்ட சமத்துவம் என்கிற கோரிக்கை வரலாறு நெடுகிலும் எழுந்தெழுந்து அமுங்கியிருக்கிறதேயன்றி அது ஒருபோதும் அடங்கிவிடவில்லை. ஒரு சமூகமாக சேர்ந்து வாழ்வதற்குரிய இந்த பெருவிருப்பத்தை பூர்த்தி செய்யாமலே சுற்றப்படுமானால் இராட்டையிலிருந்து நூலுக்கு பதிலாக நூலாம்படைதான் திரண்டுவரும் என்பதை நாடகம் சொல்லிப் போகிறது.

தொழிலை மட்டுமல்லாது தொழிலாளர்களையும் பிரித்துவைத்திருக்கிற சாதியம் ராட்டையையும் குறிப்பிட்ட சாதியினரின் கைகளில்தான் ஒப்படைத்திருந்தது. விதேசியத்திற்கு எதிரான சுதேசியத்தின் குறியீடாக இந்த ராட்டையை காந்தி முன்னிறுத்திய போதும் அது எல்லோரது கைகளுக்கும் சென்றடைந்து விடவில்லை. தீண்டாமையையும் பாகுபாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் ஆரக்கால்களாக கொண்டியங்கும் ராட்டையால் வரலாற்றை உந்திச் செலுத்துவதற்குரிய ஒரு சக்கரமாக மாறமுடியாது என்பதை நன்குணர்ந்ததால் தான் அம்பேத்கரை அசோகச்சக்கரம் ஈர்த்தது என்பது தற்செயலானதல்ல. ஆயினும்  சமகாலத்திற்கும் என்றென்றைக்கும் பொருத்தமானதாக ராட்டைச் சக்கரத்தையே  பரிந்துரைக்கும் இந்தப் பனுவலை அதன் நேரடி அர்த்தங்களுக்கு அப்பால் நகர்த்திப்போகும் சவாலை பிரளயன் எதிர்கொண்டு சாதித்திருக்கிறார்.

விதேசிய மோகத்தில் சுயமியழந்துத் திளைப்பவர்களுக்கும் அவர்களை சுயநிலைக்குத் திருப்ப மேற்கொள்ளப்படும் எத்தனங்களுக்கும் இடையிலான போராட்டம், கிராமிய வாழ்வுக்கும் பெருநகர் வாழ்வுக்கும் இடையேயான முரண், நகர வாழ்வில் தாழ்ந்துவரும் மனித நிலை, சூழல் மாசுபாடு, கிராம நகர பேதமின்றி நிலைகொண்டு வழிநடத்தும் சாதியம், சாதியத்தின் பேரால் நிகழ்த்தப்பட்டுவரும் படுகொலைகள் ஆகியவற்றால் நாடும் மனமும் ஒருசேர சிதறடிக்கப்படுகிறது. மூக்குக்குள் உலர்ந்துள்ள பொறுக்குகளை சுவாரஸ்யமாக நோண்டுவதில் லயிப்பு காண்கிறவர்களைப் போல தங்களுக்குள் சேரும் கசடுகளைக்கூட பெருமிதமாக கருதிக்கொள்கிறவர்களாக மக்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள். தலையணைகளை மாற்றிப் பார்த்துவிட்டு தலைநோவு தீரவில்லை என்று சலித்துக் கொள்கிறவர்களைப் போல மக்கள் கட்சிகளை ஆட்சிகளை தலைவர்களை மாற்றிப்பார்த்தும் பாடுகள் தீராமல் வாய்விட்டு அரற்றுகிறார்கள். ஆனாலும் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது என்பதைச் சொல்லும் நாடகம் அதற்காக ஒவ்வொருவரும் அவரவர்க்கு உள்ளிருந்து சுழலும் ஆற்றல் கொண்ட ஒரு ராட்டையை கைக்கொள்ளச் சொல்கிறது. அது சாதியும் காந்தியும் கைக்கொண்ட ராட்டைச்சக்கரமாக அல்லாமல், முறுகச் காய்ச்சிய பறையாக நமக்குள் உருமாறி ஒலிக்கத்தொடங்குகிறது. சனாதன- சாஸ்திரிய ஓட்டைகளை பெரிதுபடுத்திக் காட்டுவதற்கு மட்டுமல்லாது, நவீன காலனியாதிக்கத்தால் சூழப்பட்ட இன்றைய வாழ்வை எதிர்கொள்வதற்கும் பறையை ஒரு போராயுதமாய் உயர்த்திப் பிடிக்கச் சொல்லும் அந்தக் குரல் பனுவலில் இருப்பதைவிடவும் உக்கிரமாக ஒலிக்கிறதென்றால் பிரளயனுடையது. 

சாதித்தூய்மை, தூயரத்தம் ஆகியவற்றின் பொறுப்பாளியாக்கப்பட்ட இந்திய / தமிழ்ப் பெண்ணை வீட்டுக்குள் இருக்கும் போது குடும்பத்தாரும், வீதியில் இறங்கியதும் ஊராரும் கண்காணிக்கின்றனர். படிப்பு, வேலை, சம்பாத்தியம், வயது என்று யாதொன்றும் இந்தக் கண்காணிப்பிலிருந்து பெண்ணை விடுவிக்கவில்லை. கண்காணிக்க வேண்டும் என்கிற முனைப்பின்றி தன்னியல்பில் அனிச்சையாகவே கண்காணிக்கத் தொடங்கிவிடுகிற கேவல மனநிலையை, பெரிய பெரிய கண்களும் காதுகளும் வாய்களுமாக  பெண்ணை பின்தொடரும் காட்சியாக  சித்தரிக்கிறார் பிரளயன். கூகியின் கருப்பின மந்திரவாதி நாவலில் வரும் ஒரு அமைச்சனுக்கு அரசனிடம் நயந்து பேசுவதற்காக நாக்கு நீண்டிருக்கும், இன்னொரு அமைச்சனுக்கோ ஒட்டுக் கேட்பதற்காக காது பெருத்திருக்கும். திவ்யா - இளவரசன், சுவாதி - கோகுல் ராஜ் என்கிற மனிதர்களை மட்டுமல்ல, கடவுளையும் கூட கண்காணித்துக் கொண்டிருக்கிற இந்தியர்களுக்கும் அப்படி கண்ணும் காதும் பெருத்து வாய் நீண்டுவிடும் சாத்தியங்களிருப்பதை நாடகத்திற்குள் தடதடத்தோடும் ரயிலும், நாடகத்தின் முடிவில் சண்டாள அபிஷேகத்திற்கு சொல்லப்படும் விளக்கக்குறிப்பும் எச்சரிக்கின்றன.

இந்தக் காலத்தில் இப்படியயொரு பனுவல் பிரளயனது நெறியாள்கையில் நாடகமாக நிகழ்த்தப்படுவதே கவனம் கொள்ளத்தக்க அரசியல் செயல்பாடுதான். பனுவல் என்கிற சட்டகத்தை நெகிழ்த்தி நெகிழ்த்தி அதை அதிகாரத்திற்கு எதிரான ஒரு கூட்டுக்குரலாக வளர்த்தெடுத்து தற்காலப்படுத்தியிருப்பதில் அவரது நெறியாளுகையின் தனித்துவமும் அரசியல் கடப்பாடுகளும் இழைந்திருக்கின்றன. குடிமக்களின் அன்றாட வாழ்வின் மீது நிகழ்த்தப்படுகிற வன்முறைகளையும்  அத்துமீறல்களையும் செயலற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிற அரசியல் சாசனத்தை குறிப்பால் உணர்த்துவதைப்போல அரசின் இலச்சினையில் உள்ள சிங்கத்தைலைகள் அரங்கின் ஓர் ஓரத்தில் பொம்மையாக நிறுத்தப்பட்டுள்ளது. பிரளயன் தன் விமர்சனத்தை இவ்வாறாக வெளிப்படுத்தும் பாங்கை உணரும் தருணங்களால் நிரம்பிய இந்நாடகம் பற்றி கூடுதலாகவும் விவரிப்பதிலிருந்து என்னை நானே தடுத்துக் கொள்கிறேன். ஏனெனில், நாடகமானது நிகழ்த்தப்பட வேண்டியது என்பதைப் போலவே காணப்படவும் வேண்டியது. ஆமாம், ஒளியும் இசையும் நடிப்பும் ஊடாடியிழைந்து உருவாக்கும் அனுபவத்தை படித்துணர முடியாது, பார்க்கக் கடவீர்.

நன்றி: செம்மலர், நவம்பர் 2015

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...