ஒரு கவிதையும் சில வசனங்களும் - ஆதவன் தீட்சண்யா

பூட்டியிருந்த கதவத்தின் சாவிப்புழையுள்
ஆவியென உட்பரவி
வௌவால் புழுக்கை வீச்சத்தில் மூர்ச்சையானேன்
பிரக்ஞையின் பிரக்ஞை மூத்திரமாய் கரிக்க
உதட்டுச்சுழிப்போடு விசை பெற்றெழுகையில்
உடலைப் பிணைத்த சிலந்திக்கூடு கனத்த வலையாக

1: பாமரனுக்கும் புரியறாப்ல இதுல என்ன இருக்கு....? வெத்து பூடகம்
2: அபாரம்.... அற்புதம்.... ஆஹா... இப்படியாகத்தான்.....
எதையும் உணர்த்தாது தன்னளவில் இயங்கணும் கவிதை
 ரோமாந்திரங்களின் கீழ் சில்லிட்ட இருளில்
கபாலங்களும் கடவெலும்புகளும்
வெறியேறிய நாயின் கண்களென மின்ன
நேற்றின் நேற்றும் நேற்றின் இன்றும்
இன்றின் நாளை
யும்
நாளையின் நேற்று
மாகி காலண்டரும் கடியாரமும்
கழன்று வி
ழு
ந்

இடத்தில் விரிகிறது நியாண்டர்தால் குகை

தைர்யவாள் சுழற்றி இருளணுப் பிளந்து
பாய்கிறேன் சுயதிசைக்கு
சினையுண்ட காலத்தின் மணிவயிற்றுப்பிளவில்
சிறகு விரித்து காற்றில் எவ்விய எம்தேவதை
சூரியச்சந்திர விழிகளில் பீளை படிய
சிகரங்களில் மோதியும் சிறுபொடிச்சரளை சறுக்கியும் சிதறிக்கிடக்கிறது
சிதறிய கணத்தில் சிறகில் படிந்தது யுகங்களின் பாரம்

2: துவக்கத்தில் புழை, புழுக்கை, மூத்திரம்... பிறகு சினை.
இப்போது  பீளை... நம்மை நெருங்கி வருகிறது கவிதை.
ஆனாலும் தேவையோ இல்லையோ
ஐந்தாறு இடத்தில் இந்த வார்த்தைகள் நிரவி வரணும்.
வாசகன் மூக்கில் மூளையில் நாற்றம் ஏறணும். இன்னும் மலம், முலை, விந்து, புட்டம், மைதுனம், பிருஷ்டம் சேர்ந்துவிட்டால் முழுமையாகிவிடும் கவிதை.
1:அந்த முகாம்ல பாராட்டுறாங்கன்னாலே
இந்தக் கவிதையோட லட்சணம் என்னன்னு தெரியுது.
வக்கரித்துப்போன அக்கிரம எழுத்து..
சுமையின் பளுவால் சோர்ந்து வீழ்ந்தாலும்
மனசின் வலுவால் மறுபடி எழும்பிட
நானே வீசுகிறேன் கவரியாகி
வீணைகளின் நரம்பறுத்து வில்களில் நாணேற்றி
கனவுகள் கொண்டு செப்பனிடுகிறேன்
உடைந்த சிறகுகளை
நைந்த எம் மக்களுக்கு
என் கவிதைகள் எரிந்து கனப்பு மூட்டுகிறது

1: மக்கள்னு வந்துட்டதால ஏதோ புரியறாப்ல இருக்கு.
இன்னதுன்னு பிடிக்க முடியல.
2: என்னது... கவிதை கருகுற நாத்தமடிக்குது...?
கவனி... கவனி... மக்கள்னு வருது...
முடக்கும் செதிலுறைகளை முற்றாய் உதிர்த்து
மண் புரட்டியெழும் விதையென
எழுவார் எம்மக்கள் வெற்றியின் பாடலோடு.

2: ஐய்யய்யோ... கவிதையில பிரச்சாரம்... பிரச்சாரம்...
யாரங்கே நம்ம இஸச்சண்டைய அப்புறம் வச்சுக்கலாம்...இப்பக் கத்து, பிரச்சாரம் பண்ணு-கவிதையில் பிரச்சாரம்... பிரச்சாரம்னு...
 1.அவங்க பிரச்சாரம்னிட்டாங்களா...
அப்ப நாம கவிதைன்னு சொல்லிடலாம்.
 (விவாதப்புடுங்கிகளிடமிருந்து
கவிதை தனித்திருக்கிறது
எமது சேரிகளைப்போல)

3 கருத்துகள்:

  1. பதிவுலகில் கவிதைகள் வாசிப்போர் குறைவாக இருக்கிறார்கள் என்பது எனது ஆதங்கம். விமர்சனங்கள் வேறு.. கவிதை என்பது நம் குழந்தை போல். மற்றவர்களுக்கு எப்படியோ, காக்கைக்கு தன குஞ்சு பொன் குஞ்சு.

    பதிலளிநீக்கு
  2. ஏற்கனவே படித்ததுதான். மீண்டும் அருமை. கோவி அவர்கள் சொல்வது போல பதிவுலகில் கவிதை படிப்போர் மிக மிகக் குறைவு. அது ஆச்சரியமாகவும் இருக்கிறது. அதற்குக் காரணம் கவிதைக்குள் அத்தனை விதமான உள்ளுருக்கள் இருப்பதோ என்றும் தோன்றுகிறது. இது பற்றி என்னால் இயன்ற நடையில் சமீபத்தில்தான் எழுதியிருந்தேன். படிக்கிற மாதிரி இருந்தால் நேரம் கிடைக்கும் போது இங்கே சொடுக்கி அதைப் படித்துப் பாருங்கள் - http://bharatheechudar.blogspot.com/2011/11/blog-post_13.html.

    பதிலளிநீக்கு