இன்னும் இருக்கும் சுவர்களின் பொருட்டு... - ஆதவன் தீட்சண்யா

சுவற்றின் இந்தப் பக்கம் இருக்கும் என்பெயர் மனிதன்
அந்தப்பக்கம் யாரும் இருக்கிறீர்களா?

விடையிறுக்கப்படாத இந்தக் கேள்வியை எழுப்பியபடி
நானொருவன் எத்தனைக்காலம்தான் காத்திருப்பது?
உங்களில் ஒருவருக்கேனும் எனது குரல் காதில் விழுகிறதா?

என்னோடு உரையாடுவதை தவிர்த்துக்கொள்ளும் பொருட்டு
உங்களது குரல்வளையை
நீங்கள் இன்னும் அறுத்துக்கொள்ளாதிருக்கும் பட்சத்தில்
மறுமொழி சொல்லுங்கள் யாரேனும்

குலுக்குவதற்கு நீட்டப்பட்டிருக்கும் எனது கரங்கள் மரத்துப்போய்
தானே தொய்ந்துவிழ வேண்டுமென்று
காலந்தாழ்த்தும் தந்திரத்தை கைக்கொண்டிருக்கிறீர்களா
அல்லது,
இதோ நானிருக்கிறேன் என்று பதில்கூற
யாருமேயில்லாத பாழ்வெளியாய் கிடக்கிறதா அந்தப்பக்கம்?

சுவர் உங்களைக் காப்பதாய் சொல்லிக்கொண்டு
சுவற்றை நீங்கள் காக்கும் இழிகாலத்தில்
எந்தப்பக்கம் இருப்பவர் யார் என்ற வழக்கில்
இப்போது எழுதப்பட வேண்டியது தீர்ப்பு மட்டுமேயாதலால்
சுவற்றின் இந்தப் பக்கம் இருக்கும் என்பெயர் மனிதன்
அந்தப்பக்கம் யாரும் இருக்கிறீர்களா?
உஸ்பார் கொய் ஹை க்யா?
ஆக்கடே யாரு இதாரே?
திக்கடெ பாஜூ கோன் ஆஹே...?
அக்கட எவுரு உண்ணாரு? 
அப்பக்கம் ஆரெங்கிலும் இண்டோ?
எனிபடி ஈஸ் தேர்?

2 கருத்துகள்:

 1. மேமந்துரு சூஸ்குனே உன்னாமண்டி. சாலா லிட்டரல் அய்ந்தண்ட்டே எவரும் ஜவாபு செப்படம் லேது. அதே மேட்டரு!

  http://kgjawarlal.wordpress.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நட்சத்திர தோழருக்கு வணக்கம்.

   மனிதன் மனிதனாக எப்போதும் இருந்ததில்லை என்பதால் உங்கள் கேள்விக்கு பதில் உண்டோ.....?!
   ஞான் அறியேன்!.

   நீக்கு