திங்கள், ஜனவரி 19

மெட்ராஸ் : உள்ளடி ஊமைக்குத்து - ஆதவன் தீட்சண்யா
மிழின் முதல் பேசும் படம் வெளியானது முதல் நாளது தேதி வரையாக ஐயாயிரத்து சொச்சம் படங்கள் வெளியாகியிருப்பதாக கணக்கொன்றைச் சொல்கிறார்கள். இதில் குங்குமப் பொட்டு கவுண்டர், சின்னக் கவுண்டர், பெரிய கவுண்டர் பொண்ணு, தேவர் மகன், அய்யர் ஐபிஎஸ், மிஸ்டர் அண்ட் மிஸஸ் அய்யர், பசும்பொன் தேவர் வரலாறு என்று பெயரிலேயே அப்பட்டமாக சாதியைச் சுமந்துகொண்டு அனேகமான படங்கள் வெளிவந்துள்ளன. எஜமான், நாட்டாமை, மிட்டாமிராசு, முதலாளி என்று நிலவுடமைச்சாதியினரின் அதிகாரங்களை விதந்தோதும் பெயரிலான படங்களுக்கும் இங்கு குறைவில்லை. பசும்பொன், மாயி, விருமாண்டி, குட்டிப்புலி என்று சூசகமாகச் சாதியைச் சுட்டும் படங்களும் புழுத்துத்தான் கிடக்கின்றன. இப்படி எடுத்தயெடுப்பில் தலைப்பிலேயே சாதியைப் பேசிவிடும் இவையெல்லாம் சினிமா என்றே முன்னிறுத்தப்பட்டன.  ஹரிஜன பெண் அல்லது லஷ்மி (1936), ஹரிஜன சிங்கம் (1937) என்று தலைப்பிடப்பட்ட படங்கள் என்னவாக எடுக்கப்பட்டன என்பதும் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டன என்பதுமாகிய விவரங்கள் கிடைக்கவில்லை. அவை ஹரிஜன்களை சரிஜன்களாக ஏற்குமாறு பேசினவா அல்லது அவர்களை அவ்வாறே இருக்குமாறு ஓதினவா என்பது தெரியவில்லை.

விதிவிலக்கான ஒன்றிரண்டைத் தவிர, வெளிப்படையாக சாதிப்பெயரை சூட்டிக் கொள்ளாமலே சாதியத்திற்கு ஆதரவாகவும் சமத்துவச்சிந்தனைகளுக்கு எதிராகவும் பேசிய ஏனைய படங்களும் சினிமா என்றே சுட்டப்பட்டன. குடும்ப கௌரவம், குலப்பெருமை, மானம் மரியாதை, ஊர்வழக்கம் என்பவற்றின் பெயரால் சாதிப்பெருமிதங்களை உலவவிடும் சாக்கடைகள் கோடம்பாக்கத்திலிருந்து கிளம்பி பட்டிதொட்டியெங்கும் பாய்ந்து நாறடித்துக்கொண்டிருந்தாலும் அவையெல்லாம் சினிமா என்றே முன்னிறுத்தப்பட்டன. சிகரங்களும் தகரங்களும் தமக்குத் தெரிந்த அக்ரஹாரத்து அழிச்சாட்டியங்களை தமிழின் உன்னதப்படங்களென இயக்கி முன்னிறுத்த முடிந்திருக்கிறது. ஆனால் மெட்ராஸ்என்கிற படம் மட்டும் தலித் சினிமா அல்லது தலித் சினிமா அல்ல என்கிற விவாதத்திற்குள் சிக்கவைக்கப்பட்டிருப்பது ஏன்? பெரும்பான்மை மதத்தவர் தம்மை தேசியவாதிகள் என்று கட்டமைத்துக்கொண்டு சிறுபான்மையினரின் இருப்பின்மீது எப்போதும் சர்ச்சைகளை கிளப்பிவிடும் தந்திரம் போன்றதுதானா இதுவும்?

அம்பேத்கர் படத்தை மொழிமாற்றி வெளியிடாமல் பத்துவருடம் முடக்கிவைத்த மாநிலம் இது. குருபூஜை என்கிற பதத்தை தலித்துகளும் பயன்படுத்தியதால் 1+7 உயிர்களை பதம் பார்த்த சாதி வெறியர்கள் மலிந்திருக்கும் மாநிலம் இது. தலித்துகள் ஜீன்ஸ் டீசர்ட் அணிவதைப் பார்த்து தங்களது கோவணம் உருவப்பட்டதைப் போன்று அலறிக்கொண்டு ஊர்ஊராய் கொளுத்தியழிக்கும்  ராமதாஸ்களும் குட்டி ராமதாஸ்களும் கூட இங்குதான் இருக்கிறார்கள்.  தலித் பணியாளர்கள் சத்துணவு சமைக்கும் பள்ளிக்கூடத்திற்கு குழந்தைகளை அனுப்பாமல் நிறுத்திக்கொள்ளுளவுக்கு கடுமையான தீண்டாமை இங்கு நிலவுகிறது. சாதிரீதியான பாரபட்சத்திற்கும் ஒதுக்குதலுக்கும் அவமதிப்பிற்கும் உயர்நீதிமன்ற நீதிபதியும் கூட தப்பமுடியாத நிலை. எந்தவொரு பொது வெளியிலும் தலித்துகளின் நுழைவை இருப்பை சகித்துக்கொள்ள முடியாமல் ஒழித்துக்கட்டுகிற அல்லது புறக்கணிக்கிற சாதி வெறியர்களிடையே இருந்துதான் சினிமாவை உருவாக்குகிறவர்களும் பார்வையாளர்களும் வருகிறார்கள்.  எனவே மெட்ராஸ் ஒரு தலித் படமாக இருக்கும் பட்சத்தில் அதை இவர்கள் எடுத்திருக்கமாட்டார்களே ஓடவிட்டிருக்கமாட்டார்களே? ஒருவேளை அது தீவிர தலித்துகளின்/ தீவிர தலித்விரோதிகளின் கண்ணுக்கு மட்டுமே தெரிகிற மாந்திரீக காட்சிகளாகவோ குழுவுக்குறி மருவுமொழியிலோ எடுக்கப்பட்டிருந்து இது தெரியாமல் மற்றவர்களெல்லாம் ஏமாந்து வெறும் படமாகப் பார்த்துக் கொண்டிக்கிறார்களா? இப்படியான கேள்விகள் சூழ ஒரு படத்தை எப்படித்தான் பார்ப்பது? தலித் என்பவர்கள் குறித்தும் சினிமா என்பது குறித்தும் அவரவர் கொண்டிருக்கும் புரிதலுக்கொப்ப வைக்கப்பட்ட வாதப்பிரதிவாதங்கள் மெட்ராஸ் மீது படியவிட்டுள்ள மூட்டத்தை விலக்கிவிட்டு அப்படத்தை அதன் அசலில் வைத்துப் பார்ப்பது எப்படி என யோசித்துக் கொண்டிருக்கும்போதே ஒருவாரம் ஓடிவிட்டது.


***

எனக்கு தலைப்பிலிருந்தே குழப்பம்தான். அது சென்னை என்கிற தமிழ்ப்பெயரை விட்டுவிட்டு ஏன் மெட்ராஸ் எனப் பெயரிட்டார்கள் என்று தமிழ்த்தேசியவாதிகளை கொம்பு சீவிவிடும் தி இந்து வகைப்பட்டதல்ல. ஏனென்றால் சென்னை என்பது ஏதோவொரு தெலுங்கு மூலத்திலிருந்து வருவிக்கப்பட்ட சொல் என்பது தி இந்துவைத் தவிர மற்றெல்லாரும் அறிந்த விசயம்தான். ரஞ்சித் தன் படத்துக்கு சென்னை என்று பெயர் சூட்டாததற்கு இதுவும் ஒரு காரணமாய் இருக்குமானால் அது வரவேற்கக்கூடியதே. அடுத்து, மெட்ராஸ் என்கிற சொல் யாரைக் குறிக்கிறதோ இல்லையோ அது தலித்துகளைக் குறிக்கவில்லை என்பது நிச்சயம். உண்மையில் அப்படியொரு சொல் எப்படி வந்தது என்பது பற்றி வரலாற்றாளர்களிடையேகூட ஒருமித்தக் கணிப்பில்லை. போர்த்துக்கீசியர் ஆட்சிக்காலத்தில் செல்வாக்குடன் விளங்கிய வணிகக் குடும்பமான மெட்ரா என்பதிலிருந்து மெட்ராஸ் என்கிற பெயர் பெறப்பட்டது என்பதற்கு ஆதரவாக கூடுதல் ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவர்கள் வருவற்கும் முன்பாகவே மதராசாப்பட்டணம் என்று ஒன்று இருந்ததாக கூறுவோரும் உண்டு. அதெல்லாம் இல்லை, மேடு ராசப்பட்டணம் என்கிற தமிழ்ப்பெயர்தான் ஒழுங்காக வசம்புவைத்து தேய்த்துப் பழக்காத இங்கிலிஸ்காரர்களின் நாவில் மெட்ராஸ் என்று ஆகிப்போனது என்பதாக ஜே.பி.பி.மோரே போன்றவர்கள் கூறுவதுண்டு. ஆகவே மெட்ராஸ் என்கிற சொல்லைக் கேட்ட மாத்திரத்திலேயே இது தலித் படம் அல்லது தலித் பற்றியதல்லாத படம் என்கிற முடிவுக்கு எந்தவொரு பார்வையாளரும் சென்றிருக்க வாய்ப்பில்லை. சரி, படத்துக்கும் தலைப்புக்கும் சம்பந்தமில்லாமல் வெளிவந்திருக்கிற எத்தனையோ தமிழ்ப்படங்கள் போல இதுவும் ஏன் இருக்கக்கூடாது என்றும்கூட யோசித்துக்கொண்டேதான் படம் பார்க்கப்போனேன்.

எனது சக பார்வையாளர்களோ இப்படியான உளவியல் சிக்கல் எதுவும் இன்றி வெகு இயல்பாக மனமொப்பி படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சீழ்க்கையடித்தார்கள் சிரித்தார்கள் ஆற்றாமையினால் அரற்றினார்கள் ஆரவாரித்தார்கள். கதாபாத்திரங்களின் மனநிலைகளுடனும் உணர்வுகளுடனும் காட்சிகளுடனும் அவர்கள் ஒன்றிக்கலந்து ரசித்துக்கொண்டிருந்தார்கள். பாடல் காட்சிகளில் கூடவே முணுமுணுத்தார்கள். மறுமுறை பார்க்கவந்திருந்தவர்கள் உடன்வந்தவருக்கு அடுத்துவரும் காட்சிகளை அச்சுஅசலாக விவரித்துக்கொண்டிருந்தார்கள். இயக்குனரானவர் கதாபாத்திரங்களை மட்டுமல்லாது பார்வையாளர்களையும் சேர்த்தே இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பதாகவும்கூட அந்தக்கணத்தில் எனக்குத் தோன்றியது. உண்மையில் சினிமா முதலாவதாக எதிர்பார்ப்பதும் வரவேற்பதும் ரசிகர்களைத்தான் என்றால் அவர்களை மெட்ராஸ் வெகு லாவகமாக அணிதிரட்டிக்கொண்டது என்பதை அரங்கிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தவர்களின் உரையாடல் அறிவித்தது. அவர்கள் படத்தின் பல்வேறு காட்சிகளை சிலாகித்து விலாவாரியாக பேசிக்கொண்டு போனார்கள். காட்சிகளையும் பாடல்களையும் கதாபாத்திரங்களின் தனித்துவங்களையும் அவர்கள் அணுவணுவாக ரசித்திருக்கிறார்கள். நான் இவர்களையொத்த சராசரி பார்வையாளன் அல்ல, இது தலித் சினிமாவா அல்லவா என்பதை வேவு பார்க்க வந்திருக்கிற ஆய்வாளப்புடுங்கியாக்கும் என்கிற முன்முடிவினால்தான் படத்தோடும் இதரர்களோடும் ஒன்றிக்கலக்கும் மனநிலை எனக்கு வாய்க்கவில்லை என்று நான் உணர்வதற்குள் படம் முடிந்துவிட்டது.  

***

இந்தப் படத்தின் கதாநாயகன் அட்டைக்கத்தி கதாநாயகனின் பல்வேறு குணக்கூறுகளை உள்வாங்கியவனாகவே எனக்குத் தோன்றினான். வாழ்வை அதனதன் பருவத்திற்குரிய மன நிலையோடு கொண்டாடத் துடிக்கும் அவன் சற்றே மருவிய வடிவிலோ நீட்சியாகவோ வெவ்வேறு கதாபாத்திரங்களினூடாக இந்தப்படம் முழுவதும் நிரம்பியிருப்பதாகவும்கூட தோன்றியது. நீண்ட காலத் திட்டங்கள், அவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்கான தத்துவங்கள் தந்திரங்கள் போராட்டங்கள் ஆகியவற்றில் சிக்கிக்கொள்ளாமல் - துக்கப்பட முடியாதபோது சிரித்துக்கொண்டே போண்டா சாப்பிட்டுவிட்டு அடுத்தவேலையைப் பார்க்கப்போகிறானல்லவா- அந்த ரீதியில் அன்றன்றைய வாழ்வை அதனதன் போக்கிலேயே எதிர்கொள்ளும் ஒரு மனவலுவையும் வாழ்வியல் கண்ணோட்டத்தையும்தான் இக்கதாபாத்திரங்கள் பகிர்ந்துகொள்கிறார்கள். அதில் குறுக்கிடுகிற வஞ்சகம், மோசடி, வன்முறை ஆகியவற்றையும்கூட அவ்வாறே எதிர்கொள்கிறார்கள். தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட சுவற்றை மீட்டுக்கொண்டபோது அதையே அண்ணாந்து பார்த்து புளகாங்கிதம் அடைந்துகொண்டிருக்காமல் அடுத்தவேலைக்குப் போய்விடுவதாக - அதாவது கற்பிக்கப் போய்விடுவதாக - படத்தில் காட்டப்படுவதும் இந்த மனநிலையின் வெளிப்பாடுதான் என்று நினைத்துக்கொண்டேன்.      

மெட்ராஸ் படத்தைப் பற்றி பேசவேண்டும் என்கிற அழைப்பு வந்ததும் மனத்திரையில் மீண்டும் படத்தை ஓடவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தேன். படத்தின் கதையோவெனில் புதுவிசையில் வெளி வந்த ரஞ்சித்தின் தண்ணிக்கோழிசிறுகதையுடன் அனேக ஒருமைகளைக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. சிறுகதையில் வரும் அவன் கனவுகளால் சிதறடிக்கப்பட்டவன், ஆயினும் கனவுகளை விட்டு வெளியேறாமல் அதனுள்ளேயே தன்னை அமிழ்த்திக்கொண்டவன். மனநிலைக்கேற்ற உருவங்களாய் மாறி அலையும் அவன் இந்த நிலமெல்லாம் ஒரு காலத்தில் எங்களுடையதுஎன்கிற வரலாற்று உண்மையை பிதற்றிக்கொண்டேயிருப்பான். அதை எப்படியேனும் மீட்டுக்கொள்ள வேண்டும் என்கிற அவனது உட்கிடக்கையே மெட்ராஸ் படமாக உருமாறியிருப்பதாக நினைத்துக் கொள்வதற்கு சாத்தியமிருக்கிறது.

தண்ணிக்கோழி கதைக்கு ரஞ்சித் வரைந்த ஓவியத்தில் குழைந்திருக்கும் ஆழ்ந்த வண்ணங்களே முரளியின் கேமிராவிலிருந்து பீறி வருவது போன்ற உணர்வு ஏற்பட்டது. தண்ணிக்கோழியின் கதைமாந்தன் தன்னை கனவிலிருந்து விடுவிடுத்துக் கொண்டு அதை நடப்பில் செய்யத்துணிந்தால் என்னென்ன நடக்கும் அல்லது எப்படி நடந்திருக்கும் என்பதுதான் மெட்ராஸின் கதை என்றே நான் விளங்கிக்கொள்கிறேன்.

அடிப்படையில் ஓர் ஓவியராகிய ரஞ்சித் இந்தக் கதையை படமாக எடுத்ததற்கு பதில், ஒருவேளை இதன் காட்சிகளையெல்லாம் ஒரு கித்தானுக்குள் வரைந்திருப்பாரேயானால் என்ன நடந்திருக்கும் என்கிற யோசனை தோன்றியது. உண்மையில் அப்படியொரு ஓவியம் வரையப்பட்டிருக்குமானால் அதில் யார் யார் கண்ணுக்கு எதெது படுகிறதோ அததுவாக அந்த ஓவியம் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும். ஏனென்றால் எங்கிருந்து எவ்வாறாக பார்க்கப்பட வேண்டும் என்கிற நிபந்தனையை ஓவியம் முன்வைப்பதில்லை. பார்வையாளரது கவனம் எவற்றின்மீது குவிந்துப் பரவவேண்டும் என்கிற தனது உட்கிடக்கைக்கு இசைவான வண்ணங்களையும் அடர்த்தியையும் உருவங்களின் அளவையும் இடத்தையும் அடுக்கையும் ஓவியர் தெரிவு செய்திருந்தாலும் அது பார்வையாளரை கட்டுப்படுத்துவதில்லை. ஆனால் காட்சிகளின் கோர்வையை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஊடகமாக சினிமா இருப்பதால் இது இவ்வாறாக பார்க்கப்பட வேண்டும் என்று நம்மைப் பணித்து வழிநடத்துகிறது. இந்த நிபந்தனையின் அடிப்படையில் பார்த்தாலும்கூட மெட்ராஸை தலித்துகளைப் பற்றிய அல்லது தலித்துகளுக்கான படமாக பார்க்குமாறு ரஞ்சித் யாதொருபோதும் பரிந்துரைக்கவில்லை என்றே தோன்றுகிறது. எனில், பார்வையாளருக்கு புரியாமல் போய்விடக் கூடாது என்பதற்காக லேடி டாக்டர்மீனலோசனி என்றும் தங்கச்சிக்கென ஒரு பெயரிருந்தாலும் தங்கச்சி தங்கச்சி என்றே படம் முழுக்க விளித்துத் தெளிவுபடுத்தும் மரபுக்கும் பழக்கப்பட்டுபோன தமிழ்ச்சினிமாவின் நெடிய வரலாற்றில் தலித் என்கிற சொல்லை ஓரிடத்திலும் உச்சரிக்காத மெட்ராஸை ஒரு தலித் படம் என்று சொல்லி கட்டம் கட்டும் திருப்பணியைத் தொடங்கி வைத்தவர்கள் யாரெனத் தெரியவில்லை.

கதையானது ஏதாவதொரு இடத்திலும் காலத்திலும் நடந்தாக வேண்டும். இவ்விரண்டையும் தெரிவு செய்திட தனக்குள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்திக்கொள்கிற இயக்குனர், பொத்தாம்பொதுவான மெட்ராஸையல்லாமல் மெட்ராஸின் குறிப்பிட்டதொரு பகுதிக்குள் நம்மை கண்குவிக்கச் செய்கிறார். ஹவுசிங் போர்டு என்கிற வசிப்பிட ஏற்பாடுகள் நடைமுறைக்கு வந்துவிட்ட காலம் தொடங்கி ஐ.டி.கம்பனிகள் வந்துவிட்ட சமகாலம் வரைக்குமான குறிப்பிட்ட காலகட்டத்தில் இக்கதை நடக்கிறது. குறிப்பிட்ட இந்த இடத்தில் குறிப்பிட்ட இக்காலகட்டத்தில் அவரவர்க்குரிய பெயரோடும் தொழிலோடும் அரசியலோடும் அறிவோடும் கொண்டாட்டங்களோடும் ஆர்வங்களோடும் இங்கு வாழ்ந்த/வாழ்கிற மக்களின் மீது கவனத்தை குவித்துக்கொள்ள நேர்ந்திடும் பார்வையாளர் தான் காண்பது தன்னையொத்த மனிதர்களின் கதை என்றுணர்கிறார். இந்த கவனக்குவிப்பானது, இதுவரை நீள்கண் அல்லது தொலைகண் பார்வையில் உருவாக்கிக் கொண்டிருந்த அபிப்ராயங்களை நேர்கண் பார்வையில் மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பை பார்வையாளருக்கு வழங்குகிறது. ஆகவே, பொத்தாம்பொது என்று சொல்லப்படுகிற எதுவும் அவ்வாறானதாக ஒருபோதும் இருப்பதில்லை என்பதால் எல்லாமே குறிப்பானவையாகஅதன் அசலுக்கு நெருக்கமாக அடையாளப்படுத்தப்படுவதற்கு பார்வையாளர் உடன்படுகிறார். படம் பேசும் அரசியலுக்கு பார்வையாளர்களின் ஒப்புதலைப் பெற்றுக்கொள்ளும் விதமாக இந்த அடையாளப்படுத்துதல் ஓர் ஆக்கத்திற்கு மிகமிக அவசியமானது என்பதை இயக்குனரும் அவரது குழுவினரும் உணர்ந்து நம்பகத்தன்மையுடன் அதை நிகழ்த்தியுள்ளனர்.

பெத்லஹேமின் அழுகைச்சுவர், பெர்லின் சுவர், உத்தபுரம் சுவர் என்று ஒவ்வொரு ஊரிலும் ஒரு சுவர் - அது வெறும் கல்லும் மண்ணும் சேர்ந்த கலவையாலானது என்பதைத்தாண்டி ஏதேனுமொரு காரணத்திற்காக முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது- படத்தில் வரும் சுவரைப்போல. சுவற்றின் மீது ஏற்றிச் சொல்லப்படும் கருத்தியல்தான் அதை முக்கியத்துவமுடையதாக்குகிறதேயன்றி அது தன்னளவில் வெறும் சுவர்தான். இப்படி தன்னளவில் ஒன்றுமில்லாத ஆனால் சாதி, மதம், கடவுள், சாத்தான், தேசம், தீட்டு, புனிதம் போன்ற புனைந்தேற்றப்பட்ட விசயங்களின் மீதுதான் மக்களின் விசுவாசம் கோரப்படுகிறது. இவற்றை நிலைநிறுத்திக்கொள்ள அல்லது கைப்பற்றத்தான் மக்கள் மடிந்தும் மடிவித்தும் கொண்டிருக்கிறார்கள் என்கிற ரீதியில் பார்ப்பதற்கே இப்படம் பெரிதும் இடமளிக்கிறது. வெகுமக்களின் கவனத்தை சுவர், ஓவியம், சிலை, பட்டங்கள், வழிபாட்டுத்தலங்கள், கட்டிடங்கள் போன்றதான எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய ‘‘மான அவமான’’ பிரச்னைகளின் மீது குவிய வைத்துவிட்டு அதன் பேரிலான அரசியல் மற்றும் பொருளியல் ஆதாயங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிற ஏதேனுமொரு குழு ஒவ்வொரு குடும்பத்திலும் சாதியிலும் தெருவிலும் இயங்கிக் கொண்டிருப்பதை தம் நேரனுபவத்தில் அறிந்துள்ள பார்வையாளர்கள் இதை தத்தமது கதையாக பார்ப்பதற்கு படம் இடமளிக்கிறது. இந்த மான அவமானப்பொறியை அணைய விடாமல் காப்பதற்கென உலவவிடப்பட்டுள்ள உணர்ச்சிகரமான விளக்கங்களின் போலித்தனத்தையும், அதன்பேரில் நிகழ்த்தப்படும் வன்முறைகள், வஞ்சகங்கள், அழிவுகள் பற்றியும் தனக்குள் திரும்பிப்பார்த்து யோசிக்கும் ஒரு பார்வையாளர் அன்பு, காளி, மாரி, ஜானி அல்லது மற்றமற்ற கதாபாத்திரங்களின் சாயலில் தனக்குத் தெரிந்தவர்களையெல்லாம் திரையேற்றி தன்னுடைய கதையாக மாற்றிக்கொள்வதற்கான சாத்தியங்களை வழங்குகிறது படம். இந்த சாத்தியங்களைப் பயன்படுத்திக்கொண்டுதான் இதை தலித் படம் என்று அடையாளப்படுத்தும் முயற்சியும் நடந்திருக்கும் என்று தோன்றுகிறது.

படத்தில் இடம்பெறும் சில புகைப்படங்கள், புத்தகங்கள், வாசகங்கள், பெயர்கள், கொடிகள், ஆகியவற்றை ஏற்கனவே அறிந்துவைத்திருப்பவர்கள் இதில் ஒரு தரப்பை தலித்துகள் என்று விளங்கிக்கொண்டார்கள். படத்தின் ஒவ்வொரு காட்சியும் வசனமும் குறியீட்டு வடிவில் திட்டமிட்டு வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் மேலும் விளக்கத் தலைப்பட்டார்கள். தலித்துகளின் அடையாளமாக இருப்பவற்றில் சில படத்திலும் இடம் பெற்றிருப்பது தற்செயலானதல்ல என்றும் நிறுவப்பார்த்தனர். ரஞ்சித்தின் சாதிச்சான்றிதழை மட்டுமே வைத்துக்கொண்டு எட்டப்பட்ட இம்முடிவுக்கு படம் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல. நம்ம பயலுவ’/ ‘எங்காளுங்கஎடுத்தப் படம் என்று குதூகலிப்பதற்கும்கூட ரஞ்சித்தின் சாதிச்சான்றிதழ் மட்டும்தான் ஆதாரமேயன்றி படமல்ல. சொற்பமான இவர்களைத் தவிர இந்த நுணுக்கவிவரங்கள் எதையும் அறிந்திராத தலித்துகளும், தலித் அல்லாதவர்களும் அதை கதாநாயகன் தரப்பாக விளங்கிக்கொண்டதோடு அவனது தரப்பு வெற்றிபெற வேண்டும் என்கிற விழைவை ஒருசேர வெளிப்படுத்தியபடி படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எதார்த்த வாழ்வின் எல்லா நிலைகளிலும் பலகூறாய் பிளவுண்டு எதிரெதிர் நோக்கங்களுடன் இயங்கும் மனிதர்களை ஒரு கூரையின் கீழ் அமரவைத்து ஒரு புள்ளியில் இணைக்க முடிவதைத்தான் கலையின் வெற்றியாக அல்லது நோக்கமாக கருதவேண்டுமெனில் மெட்ராஸ் அதை மிகச்சரியாக ஈட்டியிருக்கிறது என்பதுதான் கொண்டாட்டத்திற்குரியது.

எந்தவொரு வட்டாரத்தின் பூர்வகுடிகளும் வந்தேறிகளிடமிருந்து தமது அடையாளங்களை தற்காத்துக்கொள்வதற்கான எத்தனங்கள் தவிர்க்கமுடியாத ஒம்பாமையையும் மோதலையும் தன்னகத்தே கொண்டிருக்கும். இந்த மொத்த நிலப்பரப்பும் பூர்வீகத்தில் தங்களுடையது என்பதை இன்னமும் நினைவில் பொதித்து வைத்திருக்கிற ஆதிக்குடிகளின் குரல்தான் எவ்வளவு காலம் கடந்தும் ஒலிப்பதற்கான வலுவையும் நியாயத்தையும் கொண்டிருக்கிறது. இப்படி உரிமை கோருவதற்கான வரலாற்றுப்பிரக்ஞையை கொண்டிருப்பவர்கள் எல்லாச் சமூகத்திலும் எல்லாக் காலத்திலும் இருந்து நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கிறார்கள். அவர்களது நினைவூட்டலானது பேச்சளவிலான உரிமையை செயல்பூர்வ உண்மையாக்கிக்கொள்வதற்கு விடுக்கப்படுகிற அறைகூவல் தான். அந்தளவிலான ஒரு நினைவூட்டலாகவே மெட்ராஸ் படத்தை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் ஒரு காலத்தில் வங்காள விரிகுடாவும் வாடிகன் சிட்டியும், அரபிக்கடலும் அண்டார்டிகாவும் எங்களுடையவையாகத்தான் இருந்தன என்நு பெறுமதியேதுமற்ற அங்கலாய்ப்பாகவோ அலட்டலாகவோ பிறழ்ந்துவிடாமல் அந்த உரிமைகோரலுக்கான நியாயத்தைப் பேசிப்பார்க்கும் முயற்சியாகவும் மெட்ராஸை விவரிக்கமுடியும். பூர்வீகத்தில் மெட்ராஸ் எங்களுடையது என்று சொல்கிறாயா, சொல்லிக்கொள். அது இப்போது எங்களுடையது என்று சென்னப்ப நாயக்கன் வகையறா தொடங்கி டச்சு, போர்த்துக்கீஸ், கிழக்கிந்தியக் கம்பனியார், இன்றைக்கு வந்து குவிகிற ஐ.டி.கம்பனியார் வரையானவர்கள் கொண்டிருக்கும் மமதை மீது ஒரு உதைப்பந்தாட்டக்காரனின் வன்மையுடன் ஆனால் உள்ளடி ஊமைக்குத்தாக ஒரு தாக்குதலையும் படம் நடத்தியிருக்கிறது. சொல்லிக்கொண்டிருக்காதே, காட்டு என்கிற புனைவின் அடிப்படைக் கூறினை ஆழ உள்வாங்கியிருக்கும் ரஞ்சித்தின் குழு, ஒரு படம் இவ்வளவுதான் செய்யமுடியும், செய்தால் போதும் என்கிற வரம்பை உணர்ந்திருக்கிறது.

புதன், ஜனவரி 14

எங்கே அந்த காசு கண்ணன்? - ஆதவன் தீட்சண்யா

பெருமாள் முருகன் காலச்சுவடு பத்திரிகை மற்றும் பதிப்பகத்திற்கென அறிவுரீதியாக பெரும் பங்களிப்பு செய்துவருபவர். அதன் ஆசிரியர் குழுவிலும் இடம் பெற்றிருப்பவர். தனது அநேக நூல்களை காலச்சுவடு பதிப்பகத்திற்கு வெளியிடக் கொடுத்து வருமானம் ஈட்டித்தந்தவர். இந்துத்துவ மற்றும் சாதியவாதிகளால் தற்போது பிரச்னைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் அவரது மாதொரு பாகன் நாவலை வெளியிட்டிருப்பதும்கூட காலச்சுவடுதான். இப்படி தன் வாழ்நாளின் பெரும்பகுதியை காலச்சுவடுக்கு அவர் ஒப்புக்கொடுத்திருக்க, அவருக்காக ஏதேனும் காலச்சுவடு ஏதாவது செய்திருக்கிறதா என்கிற கேள்வியை இத்தருணத்தில் எழுப்புவது அவசியமாகிறது.

மாதொரு பாகன் தொடர்பில் பெருமாள் முருகனுக்கு அச்சுறுத்தலும் நெருக்கடிகளும் அதிகமான நிலையில் அது ஊடகச்செய்தியானது. இதையொட்டி பதிப்பாளர் என்கிற முறையில் ஊடகங்கள் கேட்ட ஒன்றிரண்டு கேள்விகளுக்கு பதில் சொன்னதைத் தவிர இவ்விசயத்தில் காலச்சுவடு கண்ணன் வேறு ஏதாவது செய்திருக்கிறாரா என்று தேடினால் எதுவுமே இல்லை எனச் சொல்லலாம். அவரது முகநூல் பக்கத்தில் போய் பார்த்தால் அவர் யார்யாருடனோ இளித்துக் கொண்டிருக்கிற படங்கள்தான் இருக்கின்றனவேயன்றி பெருமாள் முருகன் என்றொரு எழுத்தாளன் எதிர்கொண்டிருக்கும் பிரச்னை பற்றி யாதொரு தகவலும் இல்லை. பெருமாள் முருகனுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் நடந்துகொண்டிருக்கும் இயக்கங்கள் பற்றியோ அல்லது இது குறித்து அவருடைய கருத்தாகவோ எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் இப்படியொரு பிரச்னை நடந்துகொண்டிருப்பதாக யூகிப்பதற்கான எந்தவொரு தகவலும் தடயமும் இல்லை. இன்று காலையில்தான் பொதுமனு ஒன்றில் அவர் கையெழுத்திட்டிருக்கும் சுட்டி பதிவேறியிருக்கிறது. கருத்துரிமைக்கான போராட்டம் தொடரும் என்று கட்டுரையோ தலையங்கமோ எழுதி கணக்கு காட்டலாம் என நினைக்கிறார் போலும்.

காலச்சுவடு கண்ணனின் வலைப்பின்னலும் தொடர்புகளும் பலரும் அறிந்தவைதான். தனக்கு தலைவலி என்றால் ஊரே தைலம் தேய்த்துக்கொள்ள வேண்டும் என்பதுபோல அடித்துப் புரண்டு கருத்தைத் திணிக்கிற அவரது சாமர்த்தியமும்கூட நாமறிந்ததுதான். ஆனால் இதையெல்லாம் ஏன் பெருமாள் முருகன் விசயத்தில் பயன்படுத்தி அவரை காப்பாற்ற முன்வரவில்லை என்பதே நம் கேள்வி.

புதுமைப்பித்தன் பெயர் விவகாரத்தில் நீதிமன்றம் போகத்தெரிகிறது. போனில் திட்டியவர்களின் பாஸ்போர்ட்டை முடக்கிட போலிசை ஏவத் தெரிகிறது. நூலகங்களுக்கு வாங்கப்பட்டு வந்த காலச்சுவடு நிறுத்தப்பட்டதுமே கருத்துரிமைக்கு ஆபத்து என்று கதறிக்கொண்டு கருத்துரிமை பாதுகாப்பு மாநாடு நடத்த முடிகிறது. மாதொரு பாகன் சர்ச்சைக்குள்ளானதும் கூடுதலாக விற்குமென எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான பிரதிகளை அச்சடித்து தயார்நிலையில் வைத்துக் கொள்ளத் தெரிகிறது. புத்தகச்சந்தையின் வருகையாளர்களை ஈர்ப்பதற்காக வெளியீட்டு விழாக்களை நடத்த முடிகிறது. ஆகவே பெருமாள் முருகனுக்காக  ஒரு இயக்கத்தை நடத்துவார் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்துபோயினர். நாமக்கல் மாவட்ட நிர்வாகம் பெருமாள் முருகனையும் பதிப்பாளர் கண்ணனையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது தனது வழக்கறிஞரை மட்டும் அனுப்பிவிட்டு புத்தகம் விற்கப் போய்விட்டார் கண்ணன். அந்த வழக்கறிஞர் பாஜகஜக ஆள் என்றொரு தகவல். எனது கட்சிக்காரர் என்று ஒரு வழக்கறிஞர் சொல்வதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் இருப்பதாக இவ்விடத்தில் தோன்றுகிறது. தைரியமாக வாருங்கள், நான் சொன்னால்  ரகளை செய்கிற இந்துத்துவவாதிகள் கேட்டுக் கொள்வார்கள் என்று அந்த வழக்கறிஞர் அழுத்திச் சொன்னதை நம்பியே பெருமாள் முருகன் உடன்வரத் தயாராக இருந்த நண்பர்களையும் மாணவர்களையும்  தடுத்துவிட்டு தனியாக போய் அவர்களிடம் சிக்கிக் கொண்டதாக தகவல்கள் வருகின்றன.

தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும் துயரத்தின் வெடிப்பாக பெருமாள் முருகன் வெளியிட்ட கடிதம்கூட கண்ணனின் வியாபார மனதை உலுக்கவில்லை. பெருமாள் முருகனுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து குறைந்தபட்சம் இந்த புத்தகச்சந்தையிலிருந்து அவர் தன்னையும் தனது பதிப்பகத்தையும்  வெளியேற்றிக் கொண்டிருந்திருக்க வேண்டும். அல்லது எழுத்தாளர் இல்லாமல் என்ன புத்தகம் என்ன புத்தகச்சந்தை என்று தனது தொடர்புகளையும் செல்வாக்கையும் பயன்படுத்தி புத்தகச்சந்தையை ஒருநாளாவது மூடுவதற்கு முயற்சித்திருக்க வேண்டும். மேற்சொன்ன எதையுமே அவர் செய்யமாட்டார் என்பது ஒருபுறமிருக்க, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்ட எழுத்தாளர்களும் கலைஞர்களும் பத்திரிகையாளர்களும் பதிப்பாளர்களும் 13.1.15 மாலை நடத்திய அமைதிப் போராட்டத்திலும் கூட அவர் பங்கெடுக்கவில்லை.

எழுதுவதற்கு பெருமாள் முருகன், ஏச்சும் பேச்சும் வாங்குவதற்கு பெருமாள் முருகன், போராடுவதற்கு கருத்துரிமைவாதிகள். கல்லா கட்ட கண்ணனும் காலச்சுவடும். தேசமே தீப்பிடித்து எரிந்தாலும் சாம்பலை விற்று சம்பாத்தியம் நடத்து என்கிற கவிதை வரி கண்ணனுக்கும் காலச்சுவடுக்கும் மிகச்சரியாய் மறுபடியும் பொருந்தி நிற்கிறது. காலச்சுவடை சுருக்கி காசு என்றும், அது காலச்சுவடு அல்ல காலச்செவிடு என்றும் இலக்கிய வட்டாரத்தில் புழங்கும் பகடிகள் உண்மைதான் என்பதும் மறுபடி நிரூபணமாகியுள்ளது.

திங்கள், ஜனவரி 12

பம்மாத்துகளின் மீது காறியுமிழும் கவிதைகள் – ஆதவன் தீட்சண்யா


திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின்
"ஒழுகிய வானத்தை நேற்றுதான் சரிசெய்தோம்"
தொகுப்புக்கு எழுதிய முன்னுரை

ஒழுகிய வானத்தை நேற்றுதான் சரிசெய்தோம் என்று இத்தொகுப்பிலுள்ள ஒரு வரி எனக்குள் விதவிதமான சித்திரங்களை விரித்துக்கொண்டேயிருக்கிறது. வாழ்க்கையை புகார்களால் நிறைத்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக அதை வாழத்தக்கதாக மாற்றிக்கொள்வதே சரி என்கிற மிகப்பெரும் போதம் இந்த ஒரு வரிக்குள் இறங்கி வழிநடத்துவதாகத் தோன்றுகிறது. இன்னும் இதுபோன்று மனதைக் கிளர்ச்சி கொள்ளவைக்கிற, உலகை புதுரீதியில் பார்த்திட அழைத்துப்போகும் கவிதைகள் இத்தொகுப்பில் நிறைந்திருப்பது தற்செயலானதல்ல. 

தான் வாழும் காலத்தின் சாட்சியமாக அல்லது பிரதிபலிப்பாக ஒருவரது இலக்கிய ஆக்கங்கள் வெளிப்படும் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தவரது ஆக்கங்களோ அதையும் மீறி காலத்தை இடைமறிப்பதை தன்னியல்பாகக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் நடப்புகளை அதன் போக்கில் அனுமதித்து அதுகுறித்து என்னத்தையாவது நாலுவரி எழுதித் தொலைக்க சூழல் அவர்களை அனுமதிப்பதில்லை. நித்தமும் நெருப்பாற்றை நீந்திக் கடக்க வேண்டியதுபோன்ற நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் அவர்கள் அதையல்லாமல் வேறெதை எழுத வாய்க்கும்? ஒடுக்குதலுக்கு எதிராக அவர்கள் எழுதுவது கைத்தட்டலை எதிர்பார்த்தல்ல, அது அவர்களது வாழ்க்கை. ஆமாம், அவர்களது இருப்பே ஒடுக்குமுறையை இடையறாது எதிர்ப்பதில் தான்  வேர் கொண்டுள்ளது. எனவே அவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி எழுதுவதை ஒடுக்குமுறையாளர்கள் தமக்கெதிரான குற்றப்பத்திரிகையாக பொருள்மாற்றி வாசிக்கும்படியாக நேர்வது தவிர்க்கமுடியாதது. 

இவர்களால் என்ன எழுதிவிட முடியும் என்கிற இளக்காரமும் குறுகுறுப்பும் கலந்த முன்முடிவுகளுடன் தலித்துகளின் எழுத்துகளை அணுகும் ஒரு சாதிய மனம் தன்னிடமுள்ள மனிதத்தன்மையற்றக் கூறுகளை வாசிப்பினூடாக இனங்கண்டு ரகசியமாகவேனும் துணுக்குற்றுப் போவதைக் கண்டு ரசிப்பதல்ல தலித் எழுத்துகளின் நோக்கம், அந்தச் சிறுபொழுதில் சாதியமனம் வெளிப்படுத்திய மனிதத்தன்மையை வாழ்நாள் முழுமைக்குமானதாக வளர்த்தெடுப்பதன் மூலம் தான், அதாவது அண்டை அயலாரையும் மனிதர்களாக்குவதன் மூலமாகத்தான் தம்மை மனிதர்களாக தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்கிற தெளிவு பெற்றுள்ள ஒடுக்கப்பட்டவர்கள் அதன்பொருட்டே எழுதுகின்றனர். அதற்காக அவர்கள், மலக்கிடங்கில் முழுகி அடைப்பை நீக்கி மேலெழுந்தக் கையோடு எழுதப்படுகிற இக்கவிதைகளை மூக்கைப் பொத்திக்கொண்டுகூட படிக்க முடியவில்லை என்று அரற்றுகிற நாசூக்குப் பேர்வழிகளிடம் நயந்து பேசிகொண்டிருப்பதில்லை. இந்தக் கவிதைகளின் வழியே பரவும் நாற்றம் எழுதியவருடையதல்ல என்பதை உணர வைக்கிறார்கள்.  

இந்தியாவை இந்தக்கணம் வரையிலும் அசுத்தப்படுத்தி வருகிற நரேந்திர மோடி தொடங்கி கமல்ஹாசன் வரையானவர்கள் திடுமென வெள்ளி ஸ்பூன் போல விளக்குமாறைப் பிடித்துக் கொண்டு தூய்மைப்போராளிகளாகிவிட்டனர். இவர்களில் ஒருவரேனும் ஒரு பொதுக் கழிப்பறையையோ திறந்தவெளி மலக்கிடங்காய் நாறும் ரயில்பாதையையோ சுத்தப்படுத்துவார்களா என்றால் அதுதான் இல்லை. ஏற்கனவே சுத்தப்படுத்தப்பட்ட தெருக்களை செயற்கையாக அசுத்தப்படுத்தி அதற்கப்புறம் கூட்டிக்கிழிக்கும் இந்த பம்மாத்துகளின் மீது காறி உமிழ்கிறது இக்கவிதைகள். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களில் அடுத்தக் கிரகத்திற்கு மங்கள்யான் அனுப்பிக்கொண்டே மலக்குழிக்குள்ளும் சாக்கடைக்குள்ளும் இறக்கிவிடப் படுகிறவர்கள் இந்த நாட்டின் பாரபட்சமான தொழில்நுட்ப அறிவின் மீது காறி உமிழாமல் வேறென்ன செய்வார்கள்? 

மனிதகுலம் அறிவியல் முன்னேற்றத்தால் அன்றாடம் விளைவித்துத்தரும் கருவிகளையும் புழங்குப் பொருட்களையும் வாங்கித்துய்ப்பதன் மூலம் தன்னையொரு நவீனச்சமூகமாக காட்டிக்கொள்கிறது இந்திய/ தமிழ்ச்சமூகம். ஆனால் அது கருத்தியல்ரீதியாக மிகவும் பின்னோக்கிய காலத்திற்குள் வீழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த இரட்டை மனநிலையை அம்பலப்படுத்துவதோடு நில்லாமல் கருத்தியல்ரீதியாகவும் அதை மேலிழுத்துக் காப்பாற்றும் அக்கறைகொண்ட கவிதைகளை இத்தொகுப்பில் காணமுடிகிறது. நுகர்வியம், பணமீட்டும் வெறி, பெண்ணுடல் மீதான அதிகாரம், அரச பயங்கரவாதம், சூழலிய அழிவு என்று மிக நேரடியான அரசியல் பிரச்னைகள் கவிஞரின் பாடுபொருள்களாகியிருக்கின்றன. ஆனால் இதையெல்லாம் எப்படி கவிதையில் சொல்ல முடியும், இதையெல்லாம் சொல்வதா கவிதை என்கிற கேள்விகள் எழாதபடிக்கு எழுதிப்போகும் சவாலை கவிஞர் நேர்மையாக எதிர்கொண்டிருக்கிறார் என்பதற்கு ஒருத்தி அறுத்தாஉள்ளிட்ட அநேகக் கவிதைகளை உதாரணம் காட்டமுடியும்.

எனினும், தன்னுணர்வாக உள்வாங்கப்படாத எதுவும் கவிதையாக மாறாது என்பதற்கு இதிலுள்ள கவியரங்கக் கவிதைகள் சிலவற்றை சுட்டமுடியும். தலைப்புக்கேற்ப கவிதை செய்கிற நிர்ப்பந்தங்களிலிருந்து  விடுவித்துக்கொள்வதன் மூலம் இந்த பலவீனத்தைக் கடந்து விட முடியும். ஒரு கவிஞர், தான் ஆதரிக்கும் அரசியல் பிரச்னைகள் மீதெல்லாம் கவிதை எழுதியேதான் தனது நிலைப்பாட்டை தெரிவித்தாக வேண்டும் என்று கட்டாயமில்லை. ஆனால் மக்களின் பாடுகளிலும் போராட்டங்களிலும் விடுதலையிலும் கொண்டாட்டங்களிலும் தன்னைக் கரைத்துக்கொள்ளும் ஒருவருக்கு அவையெல்லாவற்றையும் கவிதையாகவே எழுதிவிடுவதும்கூட சாத்தியமாகக்கூடும். என் தோழன் அந்த உயரங்களைத் தொடுவானாக. 

- ஆதவன் தீட்சண்யா
குழந்தைகளை கொண்டாடத் தெரியாத நாள் - 14.11.14, ஒசூர்ஞாயிறு, ஜனவரி 11

மீசை என்பது வெறும் மயிர் : மீபுனைவு - பிரளயன்

அண்மையில் ,ஆதவன் தீட்சண்யாவின் “மீசை என்பது வெறும் மயிர்” படித்தேன்........


“மீசைகள்” என்பது நான் மிகவும் மதிக்கும் மறைந்த கந்தர்வனின் கவிதைத்தொகுப்பு. முப்பதாண்டுகளுக்கு முன் வெளியானதிது. அதில் ‘விதம் விதமா மீசை வச்சோம்! வீரத்தை எங்கே வச்சோம்’ என்று ஒரு கவிதை நிறைவுறும். குட்டக்குட்ட குனிந்து கொண்டிருக்காதீர்கள்! உங்கள் உரிமைகளுக்காக போராட வாருங்கள்!! என்று உழைக்கும் மக்களை தொழிற்சங்கங்களில் அணிதிரள அறைகூவும் கவிதை இது. எனினும் அக்கவிதை “மீசை என்பது வீரத்தின் அடையாளம்’ என்பதை ஏற்றுக்கொண்டுவிடுகிறது. 

அதற்கு முப்பதாண்டுகள் கழித்து அண்மையில் வெளியான ஆதவன் தீட்சண்யாவின் புதிய நாவல் “ மீசை என்பது வெறும் மயிர்” என்கிறது. மறைந்த தோழர் கந்தர்வனும், ஆதவன் தீட்சண்யாவும் ஒரே அமைப்பைச்சேர்ந்தவர்கள்தாம் . ஒரே சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள்தாம். மீசை என்பது ஆதிக்க சாதித்திமிரின் அடையாளமாய்க் கருதப்படும் இன்றைய சூழலில்,உண்மையிலேயே ஒரு அமைப்பினது முப்பதாண்டுகாலச் செயல்பாடுகளில் ஏற்பட்ட கருத்தியல் வளர்ச்சியையும், சிந்தனைகளின் விரிவினையும் குறிப்பதாகக்கூட நாம் இப்போக்கினைக்கருதலாம்.

இந்த அளவீடுகளையும் தாண்டி ‘மீசை என்பது வெறும் மயிர்” தவிர்க்கமுடியாத தமிழின் மிக முக்கியமான நாவல்.

பெரும்பாலும் புனைவு என்பது பதிப்புரை,முன்னுரை,அணிந்துரை என எல்லா உரைகளையும் தாண்டி முதல் அத்தியாயத்திலிருந்துதான் தொடங்கும். இதில் ‘புனைவு’ என்பது அட்டைப்படத்திலிருந்தே தொடங்கிவிடுகிறது.

”மீசை என்பது மயிர்” ‘மீபுனைவு [மெட்டா-பிக்ஷன்] வகையினைச்சார்ந்தது. ‘Metafiction’ என்றால் என்ன என்பதையறிய நமது ‘பின்- நவீனத்துவ’ ஆசான்களின் பொழிப்புரைகளை தேடி சிரமத்துக்குள்ளாகவேண்டாம். ’விக்கிபீடியாவில்’ தேடினாலே போதுமானது.

உண்மையிலேயே ‘கோணங்கி’ வந்து சேர்ந்திருக்கவேண்டிய இடம் இது.ஆனால் ஆதவன் தீட்சண்யா வந்து சேர்ந்திருக்கிறார்.

எதார்த்தம், வரலாறு, புனைவு இவற்றின் எல்லைகளைக் கலைத்துப்போட்டு அவை வேர்கொண்டிருக்கும் அடியாழங்களுக்கு நம்மை அழைத்துச்செல்கிறது இந்நாவல்.

வசீகரமிக்க இறுகக்காய்ச்சிய ஒரு மொழிநடை ஆதவனுக்கு கைவந்திருக்கிறது. அது நம்மை வாசிக்கத்தூண்டுகிறது.

வாழ்த்துகள்! ஆதவன்!!

வியாழன், ஜனவரி 8

ஊரெல்லாம் தேடுன மாரியம்மா ஊட்டுலேயே சிக்குனாளாம் - திருவாசகம்

 

யார் இந்த நந்தஜோதி பீம்தாஸ் ?
ஐரோப்பிய, ஸ்பானிய, சப்பானிய ,அமெரிக்க, அண்டார்டிக்க எழுத்தாளர்களின் மொத்த புத்தகங்களையும் வாசித்து வாசித்து வாய் வீங்கி போன எனக்கு புலம் பெயர்ந்து வாழும் நாடு திரும்பா எழுத்தாளரான இந்த நந்தஜோதி பீம்தாஸ் குறித்து எதுவுமே தெரியவில்லை என்பதில் யாதொரு அவமானமும் எனக்கில்லை.

"பதிப்பக அடிமைகள் பலரும் தண்டி தண்டியாக எழுதி வண்டி வண்டியாக" புஸ்தக பண்டிகைகளுக்கு இறக்குமதி செய்யும் (வெளியீடு என்றும் சொல்லலாம்) புத்தக கண்காட்சி எழுத்தாளராக பீம்தாஸ் இல்லாமல் போனதற்கு நான் எப்படி காரணமாக முடியும் ?
பீம்தாஸ் இந்த மாதிரியான பண்டிகைகள் குறித்தெல்லாம் அறிந்தவராக தெரியவில்லை. அவர் பூர்வீகம் தமிழராகவே இருப்பினும் கூட. இருந்திருந்தால் புத்தக பண்டிகைகளில் ஏதோவொரு பதிப்பக வாசலில் உட்கார்ந்து வலிக்க வலிக்க கையெழுத்து போட்டுக் கொண்டிருக்கும் அவரிடம் நானும் ஒரு கையெழுத்தை வாங்கி ஃ பேஸ்புக்கில் போட்டோ போட்டிருப்பேன். ராவோடு ராவாக வாசித்து விமர்சனக் கூட்டமும் வைத்திருக்கலாம்.

பீம்தாசின் புத்தகங்கள் இதுவரை தமிழில் வெளியாகாததற்கு அவர் எப்படி காரணமாக முடியும் ?

கடந்த வாரம் உல்கடொ(டோ இல்லை 'டொ' ) நாட்டில் பேசப்படும் மியுஸ்(யூ இல்லை 'யு ') மொழியில் வழங்கப்படும் உயர்ந்த விருதான 'புரவிஸ்' விருதை பெற்ற "ஃபிளிப்ஸ் அல்மேஸ்டோ ஒசகாயோ" என்ற ஐரோப்பிய வாழ் அமெரிக்க ஜப்பானிய எழுத்தாளரின் முடிக்கப்படாத நாவலொன்றை மேசையிலிருந்து அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து வருகின்ற ஜனவரி ஒன்றுக்குள் ரிலீஸ் செய்திட வேண்டுமென்று வெறிகொண்டு மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் சில "இருமொழி இயந்திரங்களின்" கண்களில் கூட ஆங்கிலத்தில் எழுதும் பீம்தாசின் நாவல்கள் படவில்லை என்பது அதிசயமாகத்த்தானே இருக்க முடியும் ! ஆங்கிலத்தில் எழுதினாலும் கூட நந்தஜோதி பீம்தாஸ் ஒரு இந்தியர் அதுவும் தமிழர் அதுவும் சேரியர் தானே !

எது எப்படியோ நந்தஜோதி பீம்தாசின் புதிய நூலான "moustache : nothing but hair " என்ற நாவல் வெளியாகி விட்டதென்ற தகவலை ஃ ப்யூமி கெப்ளர் ( பீம்தாசின் புத்தகங்களை வெளியிட்டு வரும் otherside பதிப்பகத்தின் வெளியீட்டுப் பிரிவு செயலாளர் )எனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சல்(otherside@elml) உறுதி செய்ததை அடுத்து அந்த நாவலை டவுன் லோடு செய்ய எவ்வளவோ முயற்சித்தேன் (படிப்பதற்குத்தான் தான் சார் ). ஆனால், முடியவில்லை.

"ஊரெல்லாம் தேடுன மாரியம்மா ஊட்டுலேயே சிக்குனாளாம்" என்ற கதையாக பீம்தாசின் நாவல் தமிழிலேயே கிடைக்கிறது என்று கேள்விப்பட்டதும் அதை வாசிக்க வேண்டும் என்பதை விடவும் அதை யார் மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்று அறிந்து கொள்வதில்தான் பேரார்வமாக இருந்தேன்.  
ஆதவன் தீட்சண்யா.
இவரா? தமிழில் வாங்கப்பட்டு வரும் உயர்ந்த விருதுகளில் ஒன்றிரண்டான 'விளக்கு' விருதோ 'கோபாலபுரம்' விருதோ அல்லது குறைந்த பட்சம் " கே.ஆர் .விஜயா" விருது கூட கிடைக்காத இவரா பீம்தாசை மொழிபெயர்த்தார்? உணர்ச்சிப் பூர்வமாகவோ நெகிழ்சிப்பூர்வமாகவோ இதுவரை எதுவும் எழுதாத இவர் ஒரு anti லிட்ரேச்சர் ஆசாமியாசே. இவர் எப்படி மொழிபெயர்ப்புக்குள் நுழைந்தார் என்று கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது. ஆனால், வரலாற்றில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் இல்லையா ?

எது எப்படியோ நந்தஜோதி பீம்தாசின் நாவல் ஒன்று என் கைக்கு வந்தாகி விட்டது. அதுவும் தமிழில்.

"மீசை என்பது வெறும் மயிர்" என்ற அந்த நாவலை "ஏர்க்காலில் கண்டெடுத்த குலதெய்வத்தின் சிலையை தூக்கி வருவது போல" உற்சாகத்துடன் கொண்டு வந்தேன். படித்துக் கொண்டிருக்கிறேன்.

***


நாடு திரும்பாஎழுத்தாளரான நந்தஜோதி பீம்தாசின் எழுத்துகளின் தமிழ் மொழிபெயர்ப்பான "மீசை என்பது வெறும் மயிர்" நூலை படித்து முடித்ததும் எனக்குள் நிறைய கேள்விகளை கேட்டுக் கொண்டேன் .முதலில் இது ஒரு நல்ல மொழி பெயர்ப்பா ?

"தட்டக்குருவியை 'பிளேட்பேர்ட்' என்று மொழிபெயர்த்த மொழியறிஞர்களிடமோ, அல்லது ஒரு மாநாட்டில் ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் வங்கத் தலைவர் ஒருவர் 'மை டியர் காம்ரேட்ஸ்' என்று விளித்ததை தேவரின சொந்தங்களே" என்று மொழி பெயர்த்த தமிழ் சான்றோர்களிடமோ சிக்காமல் இந்த நூல் ஆதவன் தீட்சன்யாவிடம் சிக்கியது எவ்வளவு ஆபத்தாகியிருக்கிறது என்பதை இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள ஏலும். 

சரி, மொழிபெயர்ப்பு தான் இப்படி இருக்கிறதே நாவலின் கதைப் போக்காவது வாசிப்பின்பம் இருக்கும்படி இருக்கிறதா?

" பாபுவும் ஜமுனாவும் மனதிலிருந்து அகல மறுக்கிறார்கள். சுசீலாவின் பாத்திர வடிவமைப்பு நேர்த்தியும் க்ளைமேக்சில் அவள் எடுக்கும் துணிச்சலான முடிவும் வாசகர்களின் நெஞ்சை விட்டு அகலாமல் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். classic. மேலும், இன்றைய நவீன வாழ்க்கை முறை தனிமனிதன் மீது எவ்வளவு நெருக்கடிகளை திணிக்கிறது அதை எவ்வாறு கடந்து தனது தன்னிலைகளை மீட்டெடுப்பது என்பதை மாடி வீட்டு ராமச்சந்திரன் நாயரின் பாத்திரம் பிரதிபலிக்கிறது. திவாகர், மதுமிதாவின் வெறித்தனமான காதலை ஏற்றுக் கொள்ளாமல் போனது நெஞ்சை கனக்கச் செய்கிறது . கங்கா எங்கு தான் போனாள் என்று சொல்லாமல் விட்டது தான் நாவலின் பலமே".

இப்படியெல்லாம் மிகச் சரளமாக நாவல் விமர்சனம் எழுதுவதற்கு தோதாக நாவல் எழுதுவதை விட்டுவிட்டு இந்த புத்தகம் பேனாவையும் காகிதங்களையும் பார்த்து கெக்கலிப்பு செய்கிறதே ஒரு சாமர்த்தியம்.

மேலும், பிரதாப முதலியார் சரித்திரத்திரத்தில் தொடங்கி துப்பறியும் திகில் நாவல்கள், வரலாற்றுக் கதைகள், நடுத்தர வர்க்க சமூகக் கதைகள் முன் - பின் நவீனங்கள், குறிகளின் செயல்திறன் - செயல் இன்மை திறன் கதைகள் வரையிலும் வாசித்து தீர்த்து இன்னும் இலக்கிய தாகம் அடங்காமல், வருகின்ற புத்தகக் கண்காட்சிக்கு வர இருக்கும் குவியல்களுக்காக ymca மேல் விழி வைத்து காத்துக் கிடக்கும் என்னிடமே வாசிப்பு குறித்து சவால் விடுக்கிறதே இந்த புத்தகம்.

நாவல் என்ற மகத்துவமான இலக்கிய வகைமையின் மாண்புகளை குலைப்பதற்கென்றே ஆதவனால் எழுதப்பட்டிருக்கும் இந்நூலின் இலக்கிய மதிப்பீடு குறித்து நான் எழுதினால் அது பத்து லைக்குகள் பெறுவதற்குக் கூட தகுதியானதாக இருக்காது. தமிழ் இலக்கியத்தின் "முன்னணி ஆளுமை" என்று தங்களுக்குத் தாங்களே அறிவித்துக் கொள்ளாமல் ப்ராப்பர் இலக்கியவாதிகளால் அவ்வாறு அழைக்கப்படும் நாவலாசிரியரும் இலக்கிய விமர்சகருமான திரு. கே.என்.சுந்தர மோகன்ராம் அவர்களோடு (ஆதவன் தீட்சண்யா தனது கதைகளை இதயத்திலிருந்து உருவாக்காமல் அறிவிலிருந்து உருவாக்குகிறார் என்ற புகழ் பெற்ற விமர்சனத்தை வைத்தவர் இவர்தான் என்பது இலக்கிய வாசகர்களுக்கு நினைவிலிருக்கும் என்று நம்புகிறேன் )

"மீசை என்பது வெறும் மயிர்" நூலை முன்வைத்து ஒரு இலக்கிய உரையாடலை ('செந்தலை குருவி' இதழுக்காக ) நிகழ்த்தவிருக்கிறேன். விரைவில்.

அதுவரை, பீம்தாசின் மற்ற நாவல்களான
Why can't we share the bed tonight,
Hoof sound which chase in dream,
The dried sea by the fish's drinking,
Who is going to swallow the mercury droplets,
Even before this, we were in dark  - ஆகியவை ஆதவன் தீட்சண்யாவிடம் சிக்காமல் இருக்க முன்னணி இலக்கிய ஆளுமைகளின் சார்பில் ஜெபிக்கிறேன் ஆண்டவரே !

புதன், ஜனவரி 7

ஒசூர் எனப்படுவது யாதெனின்... - புத்தகமாக வெளிவருகிறது

மலைகள் பதிப்பகத்திலிருந்து 
எனது மற்றுமொரு நூல் வெளியாகிறது.

முகப்போவியமும் வடிவமைப்பும்: அன்புத்தோழன் கார்த்தி

''....ஆனாலும் இது ஒசூரின் வரலாறல்ல. ஒசூரின் இன்றைய நிலை பற்றிய சித்திரமும் அல்ல. திட்டமிடுதலோ முன்தயாரிப்போ இன்றி ஒசூர் பகுதிக்கும் எனக்கும் உள்ள தொடர்புகள் குறித்து சொல்லத் தோன்றியதில் கொஞ்சத்தை சொல்லியிருக்கிறேன், அவ்வளவே. என்விகடன்.காம் இணைய இதழில் பத்துவாரங்கள் தொடராக எழுதியவற்றை இப்போது தொகுத்துப் படிக்கும்போதுதான் உணர்ந்தேன் - ஒசூர் பற்றி எழுதுவதாக நினைத்துக்கொண்டு நான் என்னைப் பற்றிதான் பெரிதும் எழுதியிருக்கிறேன் என்பதை. அதனாலென்ன, என்னைப் பற்றியும் உங்களிடம் சொல்லத்தானே வேண்டும்?''
 - ஆதவன் தீட்சண்யா

சனி, ஜனவரி 3

கௌரவக்கொலை - ஆதவன் தீட்சண்யா
ரும்பாடு பட்டு வளர்த்த தம் பிள்ளைகளை பெற்றோர்களே கொன்றொழிக்கும் கொடுஞ்செயலை கௌரவக்கொலை என்றழைக்க என்ன நியாயம் இருக்கிறது? அவர்களைக் கொன்றாவது காக்கவேண்டிய அது உண்மையில் கௌரவம்தானா? கௌரவம் என்பதன் பொருள்தான் என்ன? என்று கேட்டு வலுவாக குறுக்கீடுவதற்கு பதிலாக உலகம் முழுக்க இவ்வகையில் வருடத்திற்கு 5000 பெண்கள் கொல்லப் படுவதாக புலம்புகிறது ஐ.நா. தற்கொலை, காணாமல் போதல், விபத்து என மூடி மறைக்கப்படுபவற்றையும் கொல்லப்படும் ஆண்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 20,000 வரை எகிறும் என்கிறது ஓர் ஆய்வு.  

கௌரவம், மானம், புனிதம், தூய்மை, உயர்வு என்கிற கற்பிதங்கள் தோன்றிய போதே அவற்றுக்கான உடனிபந்தனை போல இக்கொலைகளும் தொடங்கிவிட்டன. ஆகவே கௌரவத்திற்கான கொலைகள் திடுமென நடப்பது போன்ற பாவனை அவசியமற்றது. தன் குடும்பம் அங்கம் வகிக்கும் சாதி/மதம்/இனம்/நிறம் அல்லாத வேறொருவரது ரத்தக்கலப்பின்றி பெண்கள் தூய்மை காப்பதே கௌரவம் எனப்படுகிறது. இதற்கு ஏதேனும் பங்கம் வருமானால் காரணமானவர்களை கொல்வதன் மூலம் அந்தக் களங்கம் போக்கப்படுவதாக இதற்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது. பழமைவாதத்தில் ஊறி நொதிப்பவை என இகழப்படும் மத்திய கிழக்கு, தெற்காசிய நாடுகளில் மட்டுமல்லாது வளர்ந்தவை என அலட்டிக்கொள்ளும் அமெரிக்கா, பிரிட்டன் உட்பட 26 நாடுகளில் கௌரவத்திற்கான கொலை தொடர்கிறது. 

இக்கொலைகள் பெண்ணின் சுயேச்சைத்தன்மையை தடுக்கும் பொருட்டானவை. சுயமாக வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது, குடும்பத்தார் கட்டாயப்படுத்திச் செய்யும் திருமணத்தை மறுப்பது, விவாகரத்து கோருவது, ஒரே கோத்திரத்தானை / ஊரானை மணப்பது, வேறு மதம்/சாதி/இனத்தவரை காதலிப்பது / மணப்பது, அயலாருடன் பழகுவது, வேறு கலாச்சாரத்தின் உடைகளை அணிவது ஆகிய நடத்தைகளால் ஒரு பெண் தங்களது கௌரவத்தைத் தாழ்த்திவிட்டதாக கருதுகிறவர்களால் அவள் கொல்லப்படுகிறாள். இதில் தந்தை, சகோதரர்கள், தாய்மாமன், கணவன் உள்ளிட்ட குடும்பத்தின் ஆண்களும் (மகனும்கூட) மூத்தப் பெண்களும் நேரடியாக பங்கேற்கிறார்கள். குடும்பம் பாசத்தால் தடுமாறுமானால் உறவினர்கள் தலையிட்டும் ஒத்துழைத்தும் கொன்று முடிக்கிறார்கள். பெண்ணை கௌரவக்கேடாக நடக்கத்தூண்டியவன் என்கிற குற்றச்சாட்டின் பேரில் அவளது காதலன்/ கணவனும் கொல்லப்படுகிறான். குறிப்பிட்ட பெண்ணை கைவிடும்படியான கட்டளையை ஏற்காத ஆண் அவனது குடும்பத்தினராலேயே கொல்லப்படுவதுமுண்டு. 

கூட்டாக கல்லால் அடிப்பது, சாணிக்கரைசலை ஊற்றுவது, வாயில் சிறுநீர் கழிப்பது, தலைமுடியை அலங்கோலமாக்குவது, சூடு வைப்பது, சவுக்கால்  வெளுப்பது, அமிலத்தை ஊற்றி முகத்தைச் சிதைப்பது, ஊரின் ஆண்கள் கூட்டாக வன்புணர்வது ஆகிய சித்ரவதைகளை ஏவி பெண்ணின் ஆளுமையைச் சிதைத்து மனநோயாளியாக்குவது போன்றவை கௌரவத்திற்காக நிகழ்த்தப்படும் வன்முறைகள். ஜோடியாகச் செல்பவர்களை மறித்துத் தாக்குவது, தாலி கட்டிக்கொள்ளுமாறு வதைப்பது போன்றவை சித்ரவதைகளுக்கு கலாச்சாரக்காவலர்களின் மேக் இன் இந்தியாகொடை. 

பெண்களை தெய்வமெனப் பசப்பும் இந்தியாவில் இந்த பாழாய்ப்போன கௌரவத்தின் பெயரால் பெண்கள் நீண்டகாலமாக கொல்லப்பட்டு வருகின்றனர். இதில் சாதி, மதம், ஊர்க்கூட்டம், கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றின் அழுத்தம் பெரும்பங்கு வகிக்கிறது. பெண்மீதான இழிவானப் பார்வை அவளை கருவிலேயே கொல்கிறது. அதற்கும் தப்பினால் பால்யத்திலேயே ஏதேனுமொரு கிழத்துக்கு இரண்டாந்தாரமாகவோ ஏழாந்தாரமாகவோ  மணம் முடிக்கப்பட்டு நல்ல பிராயத்தில் விதவையாக்கப்பட்டாள். விதவை வேறுதுணை தேடினால் கௌரவக்கேடாகிப் போகுமே என்றஞ்சி அவள் உடன்கட்டை ஏற்றி உயிரோடு எரிக்கப்பட்டாள். அறுத்துக்கட்டும் சாதி என்கிற அவமதிப்புக்கு அஞ்சி மறுமணம் மறுக்கப்பட்டது பெண்களுக்கு. அரசர் தொடங்கி பாளையக்காரர்கள் வரையான ஆண்டப் பரம்பரை பலரும் அடிக்கோவணம் இல்லாமல் அலைந்தவர்கள்தானே? அவர்களது சிறையெடுப்புக்கு அஞ்சி தம் குடும்பத்துப் பெண்களைக் கொன்று வீட்டுக்குள்ளேயே புதைத்தவர்களுண்டு. மதக்கலவரம் மூளும் காலங்களில் பிறமதத்தாரிடம் சிக்கிச் சீரழிவதற்குப் பதிலாக சாவதே மேல் என்று தம் பெண்களை கொன்றவர்களிருக்கிறார்கள். இந்தக் கொலைகள் பெண்களின் நலன் சார்ந்ததே போல் கூறப்படுகிறது. செத்தப் பிறகு அவர்களுக்கு என்ன நலன்? களங்கப்படாதவளாக, ரத்தக்கலப்புக்கு ஆளாகாதவளாக சாதித்தூய்மை/ மதத்தூய்மையோடு செத்துப்போனாள் என்கிற கௌரவத்தக்காகத்தான் அவள் கொல்லப்பட்டாள். இங்குள்ள சிறுதெய்வங்களில் பலவும் இவ்வாறு கொல்லப்பட்ட பெண்கள்தான். மதுரை வீரன், முத்துப்பட்டன் போன்ற ஆண்தெய்வங்களுக்கும் இது பொருந்தும். 

சாதி ஆதிக்கத்தை மையமிட்டு இயங்கும் அமைப்புகள் இந்தக் கொலைகளுக்கு உடந்தையாகவும் தலைமையேற்கவும் செய்கின்றன. சோறில்லாமல்கூட இருந்துவிடலாம் மானமில்லாமல் இருக்க முடியுமா? என்று கொம்புசீவும் இத்தகைய அமைப்புகளால் கண்ணகி-முருகேசன், இளவரசன், மாரிமுத்து, விமலாதேவி என்று தமிழகத்திலும் இந்தப் படுகொலைகளின் பட்டியல் நீள்கிறது. தமது சாதிப் பெண்களின் உடை முதல் திருமணம் வரை எல்லாவற்றையும் தீர்மானிக்கிற அதிகாரத்தை தாமாகவே எடுத்துக்கொள்கிற இவ்வமைப்புகளுக்கு ஆதரவாகவே வெகுஜன உளவியல் இயங்குகிறது. ரத்தக்கலப்பைத் தடுத்து சாதித்தூய்மையை காப்பதற்கும் பெண்களை ஒரு கட்டுக்குள் நிறுத்தவும் இப்படி நாலுபேர் தேவைதான் என்கிற கருத்து பலரிடமும் இருக்கிறது. பெண்கள் மெதுவே பொதுவெளிக்கு வருவது பற்றி இதை  எழுதிக்கொண்டிருக்கிற என்னையும் சேர்த்து ஆண்களுக்குள் ஏற்படுகிற பதற்றத்தையும் திரும்பவும் வீட்டுக்குள் அடைத்துவிட வேண்டும் என்கிற வன்மத்தையும் இந்த அமைப்புகள் மிகச்சரியாக வெளிப்படுத்துகின்றன. 

சராசரியாக ஒவ்வொரு ஆறுமணி நேரத்திற்கும் ஒரு இளம்பெண் உயிருடன் எரிக்கப்பட்டோ கடுமையாக தாக்கப்பட்டோ இறக்கிறாள், அல்லது தற்கொலைக்கு தூண்டப்படுகிறாள் என்கிறது ஆக்ஸ்ஃபாம் அறிக்கை. 2014 அக்டோபர் வரை 14 பெண்கள் கௌரவத்திற்காக கொல்லப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிப்பதுடன் கடமை முடிந்ததாக நினைக்கிறது அரசு. இதைவிடவும் பெருந்தொகையான மனிதர்கள் நாள்தோறும் கொல்லப்படுவதைப் பார்த்தே அதிராத நம் மனங்களில் இந்த எண்ணிக்கை யாதொரு சலனத்தையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை. ஒருவேளை நமக்குள்ளும் ஒரு கௌரவக் கொலைகாரன் பதுங்கியிருப்பது இதற்கொரு காரணமாயிருக்கலாம்.

7.1.15 ஆனந்த விகடன் இதழுக்காக எழுதியதன் முழுவடிவம்.

வில்லியம் ப்ளேக் கடிதமும் கவிதையும் - வ. கீதா

எனக்குப் பிடித்த ஆங்கிலக் கவிஞர்களில் வில்லியம் ப்ளேக்கும் (William Blake)  ஒருவர். 18ஆம் நூற்றாண்டு. அவர் ஓவியர், டிசைனர், அச்சாளர். அ...