புதன், மே 31

உனக்கு நான் வழங்குவது - ஆஸாங் வாங்கடெ

சென்ற வாரம் உத்தரப்பிரதேசக் கிராமங்கள் சிலவற்றுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சென்றபோது, அவரைப் பார்ப்பதற்கு முன் அங்குள்ள தலித்துகள் தங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அவர்களுக்கு அந்த  மாநில அரசாங்கம் சோப்பையும் ஷாம்பூவையும் வழங்கிய செயல்  நாடெங்கிலும் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. அரசாங்கத்தின் அந்த ஈனச்செயலுக்கு எதிர்வினையாக  எழுதப்பட்ட கவிதையின் ஆங்கில மொழியாக்கம் 'thewire.in' இணையதள ஏட்டில் வெளிவந்துள்ளது. தலித் கவிஞரும் வழக்குரைஞருமான ஆஸாங் வாங்கடெ, டெல்லியிலுள்ள தேசியப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் – பெரியார் - புலே ஆய்வு வட்டத்தை நிறுவியவர்களிலொருவர்.

 ஆங்கிலம் வழித் தமிழாக்கம்: வ.கீதா 

மனு எங்களைச் சுத்தமற்றவனாக்கினான்
உனது காழ்ப்பேறிய மனம் காரணமாக
சாதிப் பெயர்கள், ஒதுக்குதல்
ஆகியவற்றின் வாடை என் உடம்பில்.
புண்களின் நாற்றத்தில் நான் ஒளிர்கிறேன்
நான் நாறுவது என் மீதான  ஒடுக்குமுறையால், 
உனது மலத்தால் அல்ல.

உனது எசமானனைத் திருப்திப்படுத்த
நீ எனக்கு சோப்பும்  ஷாம்பூம் இன்று  வழங்கினாய்
நாற்றமடிக்கும் அந்த நாக்குகளை
சிறுபான்மை மக்களைப் பாலியல் வன்முறை செய்வோம், 
வெட்டுவோம் என்று
கூறும் அந்த நாக்குகளைக் கழுவவோ
மனுவாதத்தையும் வருணதர்மத்தையும் போதிக்கும்
 அந்த மூளைகளைச் சுத்தம் செய்யவோ
அவற்றை என்றைக்கேனும் பயன்படுத்தியுள்ளாயா?
  
 நீ எனக்கு வழங்கியுள்ளவையால்
எனது மாண்பை அவமதித்துள்ளாய்
நான் உனக்கு வழங்குவதன் மூலம்
உனது தற்செருக்கை அவமதிக்கிறேன்.

எனது பாபாசாகெபை  அபகரித்துள்ளவர்கள்
நிலையற்ற துப்புரவாளர்களாக ஆகியுள்ளனர்

 சாதி ஒடுக்குமுறை, ஒதுக்குதல்
என்ற எனது காயங்களை
உனது சோப்பு கிளறிவிட்டுள்ளது
எனக்கு உனது அனுதாபம் வேண்டாம்
உனது வெறுப்பையே வேண்டுகிறேன்
ஓங்கி ஒலிக்கும் எதிர்ப்புக் குரல்களில்
எனது எழுச்சி கீதம்
அது எனக்கு மாண்பைத் தருகின்றது
விடுதலையைத் தருகின்றது
போராடிப் பெறத்தக்க விடுதலையை.

இரண்டு வேளைச் சோற்றுக்காக
உனது மலத்தை அள்ளுகிறேன்
அதைச் செய்யாவிட்டால்
இந்தக் குடியரசில்
நான் பட்டினியுடன் உறங்க வேண்டும்
சோப்பும் ஷாம்பூவும்
உனது அறியாமையை வளர்க்கின்றன
எனது வயிற்றை அல்ல.

உனது எசமானன்
இந்த தேசத்தின் ஒளிவட்டத்தில்
நாங்களோ அவனுக்கு உகந்தவர்களாக
வெளிறிய சருமத்துடன்
அடிவருடிகளைப் போல்
கரவொலி எழுப்ப வேண்டுமாம்
எனக்குள் இருக்கும்
மௌனம் உடைபட்டு வெளிவருகையில்
அதிரப் போவது எது?

ஐயனே! வா, எனது வீட்டைப் பார்
நீ போர்த்தியிருக்கும் காவி அங்கியைக் காட்டிலும்
அது சுத்தமானதாக இருக்கும்
ஆனால் உனது  மனம் சுத்தமான பிறகு  பேசு
உன் மனதில் தாண்டவமாடிக் கொண்டிருக்கும்
மனு எரிந்த பிறகு சிரி
ஏனெனில்
எனது மௌனம் கலையப் போகிறது
ஏற்கனவே விடிந்தாகிவிட்டது.

நீ எனக்கு உன் முதுகைக் காட்டிவிட்டு
விலகுவதற்கு முன்
நான் வழங்குவதைப் பெற்றுக் கொள்:
எனது சோப்புகள்
அம்பேத்கரும் புத்தரும்
போ, உனது அடிமை மனதைச் சுத்தமாக்கு
போ, சாதியை அழித்தொழி
உனது அறிவில் மண்டிக்கிடக்கும் மனுவையும்தான்.
உனது காவி அங்கியை வெண்மையாக்கு
இங்கு இரு சூரியன்கள் இருக்க முடியாது
எங்களுக்கு எங்கள் கதிரவன்
உனது ஞாயிறைச் சுட்டுப் பொசுக்க.

https://thewire.in/141345/dalit-poet-adityanath-government/


புதன், மே 24

சொல்லவே முடியாத கதைகளின் கதை - ஆதவன் தீட்சண்யா

என் கதையை நானே சொல்லணும்னு ஆசைதான். ஆனா யார்ட்ட சொல்றது? 'உம்' கொட்ட யாரிருக்கா... அவவங்களுக்கு அவவங்க கதையே பெருசு. இதுல அடுத்தாளு கதையைக் கேக்க யாருக்கு ஏலும்...? அதனால தான் யாரும் யார்க்கிட்டயும் எதையும் சொல்றதில்ல. உப்பரிகை மஞ்சத்துல ஒய்யாரமா படுத்திருந்தது, அண்டரண்ட பட்சிக்கிட்ட அளவளாவிக் கிடந்தது, அகிலும் சந்தனமும் பூசி அரண்மனைத் தடாகத்துல நீராடினது, தாதியும் சேடியும் தங்கக் கிண்ணத்துல சோறூட்டினதுன்னு பெருமையா சொல்றதுக்கு நாம என்ன ராசகுமாரியா? மந்திரிமகளா...? கோடுகொடுமையா கெடக்குற பொழப்புல கும்மாளமேது கொண்டாட்டமேது...? சின்னப்பட்டது சீரழிஞ்சதுன்னு நல்லத்தங்கா கதையாட்டந்தான் நம்ம கதையும்.

கதை சொல்றதில் எங்க பாட்டிக்கு ஈடா இன்னொருத்தர் பொறந்து வரணும். அவ்ளோ கதை சொல்வா. தெருப்புள்ளைங்க பூராவுக்கும் எங்க வளவுல தான் ராப்படுக்கை. மழைக்காலத்துல தான் அமுட்டுப்பேரும் படுக்க திண்டாட்டமாயிரும். அந்தா அங்க இடிஞ்சி குட்டிச்செவரா கெடக்கே அதுதான் அப்ப ஸ்கோல். ஸ்கோல்னா என்னா, ராமம்போட்ட வாத்தியார் ஒருத்தர் மாசத்துல ரண்டொருநாள் வந்துபோறதுதான். மத்தநாள்ல பூட்டித்தான் கெடக்கும். நான்கூட ஒருவருசம் போனேன்.

எங்கூர்லயே மொதமொத படிக்கப் போனவள்னுதான் எனக்கு பள்ளிகொடத்தாள்னு பேர் வந்தது. எனக்கப்புறந்தான் அஞ்சாறு பொண்ணுங்க சேந்தாங்க. நாங்க என்னா பண்ணுவம்னா பாட்டியோட அந்த ஸ்கோல் நடைக்கு போயிருவம். மழைக்கு பயந்து ஒண்டியிருக்குற ஆடுங்க தள்ளியிருக்கும் புளுக்கைய தொவரம்மார்ல ஒதுக்கித் தள்ளினப்புறம் சபை கூடும். செவத்தோரமா ஆரம்பிச்சு வட்டங்கட்டி ஒக்காந்தா நான்தான் உம் கொட்டுவேன்னு அடிபிடி நடக்கும். கரோமுரோன்னு கூச்சலாயிரும். பத்தாததுக்கு ஆடுங்களும் பயத்துல மொட்டவாலை ஆட்டிக்கிட்டு செருமும். அடங்கலைன்னா நான் போயிருவேன்னு பாட்டி ஒரு சத்தம் குடுத்தாள்னா போதும் அத்தினி கூச்சலும் அமிஞ்சிரும். அதுல அதிசியம் என்னான்னா ஆடுங்கக்கூட கம்முனு அடங்கிக் கேக்கிறதுதான்.

பாதிகதையில அஞ்சாறு பேருக்கு தலைசாய்ஞ்சிடும். கடைசிவரைக்கும் கதையைக் கேட்டு முடிச்சிட்டுத்தான் தூங்கினேன்னு சொன்னது ஒருத்தருமில்லை. ஏன்னா பாட்டி ஒருநாள்லயும் முடியற கதையை சொன்னதேயில்லை. மறாநாள் வந்து நேத்து எங்க நிறுத்தினேன்னு கேட்பாள் ஒருத்தருக்கும் சொல்ல வராது. எல்லாருமே தூங்கிப் போனப்புறமும் பாட்டி கதை சொல்லிக்கிட்டேயிருந்திருக்கிறா. ஆரம்பிச்சக் கதைய முடிக்கமாட்டாம நாங்கள்லாம் தூங்கிட்டோம்னு தெரிஞ்சிக்கிட்டே சொல்லிக்கிட்டிருந்தாளோ என்னமோ ... ஆனா கடைசிவரைக்கும் ஆடுங்க கேட்டிருக்கும்.

சின்னக்கதையா சொல்லு பாட்டின்னா ஒரு ஊர்ல ஒரு நரியாம் அதோட கதை சரியாம்னு சிரிப்பா. இல்லாட்டி, ஏக்கழுதைங்களா ஏழுசீமைய கட்டியாண்ட ராசாக் கதைய, பதினெட்டுநாள் பாரதத்த, அல்லிஅரசாணிய, அரவான் பலிதானத்த, பதனாலுவருச வனவாசத்த, சீதைய ராவணன் சிறையெடுத்தத, அரிச்சந்தரன் மசானங் காத்ததை, ஒங்களுக்கு ஒருராப்பொழுதுல சொல்லிறமுடியுமான்னு கோவிச்சுக்குவா. அப்புறம் மலையிலிருக்குற சாமிய மடுவுக்கு எறக்கறாப்லதான். காலைகைய அமுக்கி கெஞ்சிக் கூத்தாடினப்பறம் ராசியாவாள். இத்தினிக் கதைய சொன்னவ ஒரு நாளும் அவ கதைய சொன்னதுமில்ல. சொல்லுன்னு நாங்களும் கேட்டதுமில்ல. கதைன்னாலே அது சாமிங்க, ராசாராணிங்க இல்லின்னா மந்திரவாதிங்க, மந்திரத்தை தந்திரத்தால ஜெயித்த மதியூகிங்களைப் பத்திதான் இருக்கும்னு பாட்டியும் நாங்களும் நெனைச்சிருந்திருக்கோம்.

ஒவ்வொருத்தருக்கும் தனியா ஒரு கதை இருக்குன்னு நீ சொல்றது ஆச்சரியமாத்தான் இருக்கு. ஆனா அதையெல்லாம் மறுக்கா நெனைச்சுப் பாக்குற தகிரியமும் பலமும் வேணுமே...கதைன்னா பொழைச்சது மட்டுமா... ஆசைப்பட்டதையும் அடக்கிவச்சதையுமெல்லாம் கூட சொல்லிவரணுமே... அதையெல்லாம் சொன்னா தாங்குமா பூலோகம்... ஆம்பளையா பொறந்திருந்தா ஆகிருதியா பொழச்சிருக்கலாம்னும் பொம்பளயா பொறந்திருந்தா பொத்திபொத்தி வளத்திருப்பாங்கன்னும் ஆளாளுக்கு மாத்திமாத்தி ஆசைப்பட்டாலும் அததுக்கு அள்ளையில ஒரு சொள்ளையிருக்கு.

கனகம்பீரமான ஆம்பளையாள்கூட கழுவத்தெரியாத கவண்டப் பிள்ளைங்ககிட்டயும் கணக்கய்யரூட்டு பொம்பளைங்ககிட்டயும் கைகட்டி நிக்கவேண்டியிருக்கு. ஊரெல்லாம் ஒடுங்கிநடுங்கி வர்ற அப்பேர்ப்பட்ட ஆம்பளைக்கிட்ட கூட ஒருவார்த்தை தகிரியமா பேசமுடியறதில்ல பொம்பளைக்கு. மேலன்னத்துல நாக்கு ஒட்டிக்குது. அதுவே பரவால்ல. இல்லாட்டி குடிச்சுட்டு வந்து சரிக்குசரியா ஆம்பளையோட வழக்காடறியாடின்னு நெப்புநிதானமில்லாம அடிக்கிறதை வாங்கிக்க எவ ஒடம்புல தெம்பிருக்கு...?

ஏய்...ஈனசாதி நாய்களா...உங்க கதைய பேசத்தான் இங்க வந்தீங்களா.. சாயந்திரம் வரப்புமேல ஏறுறப்ப கூலியில கொஞ்சம் கொறைச்சுட்டா ஒத்துக்குவீங்களா... வேலை நேரத்துல வேலையப் பாக்காம கதைசொல்ல கிளம்பிட்டீங்க.... டேய், யார்டா நீ... மேயற மாட்டை நக்கற மாடு கெடுத்தாப்ல...

தப்பா நினைச்சுக்காதப்பா... நீ போய்டு... பண்ணாடி பாத்துட்டாரு... இதுக்குமேல பேசினா சாணிப்பாலா சவுக்கடியான்னு தெரியாது.. அவசியம் என்கதைய தெரிஞ்சிக்கணும்னா ராத்திரி சாப்பாட்டுக்கப்பறம் வளவுலத்தான் படுத்திருப்போம். அங்க வேணும்னா வாங்க...சொல்றேன்.

வரப்பில் பண்ணாடியும் கொத்துக்காரனும் வரும்போது எந்த வேலையாளும் பேசக்கூடாதுதானே... பொழுதுவிடிய வந்தால் பொழுதமரும் வரைக்கும் வேலையாட்கள் நேரம் கூலி தருபவர்க்கு மட்டுமே பாத்தியப்பட்டது. அதனால் பேச்சும் கதையும் இங்கேயே நிற்கிறது.

வா தம்பி, கொஞ்சம் சாப்பிடறியா... சாம சோறு, கொள்ளுப்பருப்பு தொவையல்... நல்லாருக்கும். சாப்புட்டே வந்திட்டியா ... சரி மறுக்கா வர்றப்ப சாப்டாம வா. நீ போனப்புறமும் பண்ணாடி வஞ்சிக்கிட்டுத்தான் இருந்தாரு... நான் ஒன்னும் பேசல. பேசிறத்தான் முடியுமா... தப்பித்தவறி பேசிப்புட்டா அப்பறம் எங்கப்போய் அண்டுறது... புலிப்பல் பதக்கம் போட்ட செயினும் சிலுக் ஜிப்பாவும் மாட்டிக்கிட்டு இந்தாளைவிடவும் அட்டூழியம் பண்ற பண்ணைங்களையெல்லாம் சவுக்கால வெளுத்து எங்களாட்டம் கூலிங்களுக்கு விமோசனம் தர்ற எம்சியாருக்காவத்தான் சூரியனுக்கு ஓட்டுப் போட்டம்... என்னா ரொணத்தைக் கண்டோம்...

நாயை அடிச்சாக்கூட வாயில்லாத சீவனை ஏண்டா அடிக்கிறேம்பாங்க நாலுபேர். ஆனா எங்காளுங்க 44 பேரை உசுரோட கொளுத்திப் போட்டாங்களே இந்த பண்ணையாருங்கெல்லாம் சேந்து... எங்களுக்காவ சாட்டையுந் தூக்கவேணா சவுக்கும் எடுக்கவேணாம் அனுசரணையா ஒரு வார்த்தை பேச எந்த எம்சியாரும் வரல. அதைவுடு. அந்த சனியத்தப் பேசி இப்ப என்னா வரப்போவுது...

பொழுதும் குனிஞ்சத்தலை நிமிராம களையலசினதால ஏகத்துக்கும் இடுப்புவலி. தண்ணியிலயே இருந்ததுல காலெல்லாம் ஜவஜவன்னு குஞ்ஜு இழுக்குது. அதோடயே வந்து கஞ்சி காய்ச்சறதுக்குள்ள பிள்ளைங்க பசிபசின்னு மொணங்கிக்கிட்டே சொணங்கிப் படுத்துருச்சிங்க. எழுப்பி ஆளுக்கொரு வாய் ஊட்டி படுக்க வைக்கறதுக்கே இவ்ளோ நேரமாயிருச்சு. இன்னம் சட்டிமுட்டி ஒதுக்கிவச்சு கட்டைய கிடத்தறதுக்கு வவுநேரமாகும். ச்சோன்னு ஓஞ்சு படுக்கறப்ப தூங்கிக்கிட்டிருக்கற ஆளுக்கு முழிப்பு தட்டிரும். தூரமாகி ரத்தம்நிக்காத நாள்லயும் பக்கத்துல படுக்காட்டி கொலையாட்டம் போடும் புத்தி அதுக்கு.

அதை கண்டுக்காம வுட்டுட்டு ஒரு வேத்தாளை ஒக்கார வச்சு என்கதைய சொல்லவந்தா வூட்டு ஆம்பளை ஒத்துக்குமா... எங்கூடப் படுக்காம எவனையோ இழுத்தாந்து இவ்ளோ நேரத்துக்கு என்னாடி பேச்சு... யாருடி அவன்... எமுட்டு நாளா நடக்குது இந்த கேப்மாரி வேலைன்னு பிலுபிலுன்னு சண்டைக்கு பிடிச்சுக்கும்... கள்ளப்புருசன் வச்சிருக்கிறவ புருசன் கமுக்கமா இருப்பான். எதுமில்லாதவளைப் புடிச்சிக்கிட்டு ஏலம்போடும் இந்த மனுசன். அடிஉதைன்னா பிரச்னையில்லை. எப்பவும் வாங்கறதுதான்... ஆனா அவுசாரி பட்டம் கட்டி அடிச்சா உடம்பு தாங்கினாலும் மனசு தாங்காதய்யா. நீ போயிட்டு இன்னொருக்க வாயேன்... அப்ப என் கதைய சொல்றேன்...

''பாதுகாக்கப்பட்ட இடம். அத்துமீறி பிரவேசிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்'' என்று மானசீக போர்டு தொங்கும் குடும்பத்திற்குள் வேற்றாள் நுழைய முடியாதாகையால் கதை தொடங்கப்படாமல் முடங்கியேக் கிடக்கிறது என்பதை அறிவீராக.

*****

ஏயப்பா... இவ்ளோநாள் கழிச்சும் ஞாபகம் வச்சிருந்து வந்துட்டியே... வயக்காட்டுலதான் ஒழப்பிக்கிட்டிருப்பாள்னு எங்கூருக்குப் போய் தேடிப் பாத்துட்டு இங்க வந்தியா... நான் ரோட்டுவேலைக்கு வந்துட்டேன்னு உனக்கு யார் சொன்னாங்க... ஊர்ல ஒரு குஞ்சுகுளுவான் கூட இருந்திருக்காதே... எல்லாருந்தான் ராத்திரியோட ராத்திரியா ஊரைக் காலிபண்ணிட்டு வந்துட்டமே.. பொறந்த ஊர் புகுந்த ஊருங்கறதுக்காக புள்ளைகுட்டிங்களோட பட்டினிகெடந்து சாகமுடியுமா.. உட்டுட்டு வரமுடியாதளவுக்கு நமக்குன்னு அங்கென்ன நஞ்சையும் புஞ்சையுமா கெடக்கு... சொந்த மடமில்லாதவங்களுக்கு, ஆனா அந்தமடம் ஆகாட்டி சந்தமடம்.

மழையா மாரியா... ஒருபருவம் தப்பினா உருட்டிபொரட்டி பிழைச்சுக்கலாம். முப்போகம் விளையற பூமியில புல்பூண்டு ஒண்ணுமில்ல.. என்னைத்தேடி போனப்ப நீயே பாத்திருப்பியே... கஞ்சியில்லாமக் கூட இருந்துடலாம். தண்ணியில்லாம இருக்கமுடியுமா... அய்யோ சாமி தாகத்துல உசிர்போகுதுன்னு கத்தினாலும் இந்தான்னு ஒருசொட்டு குடுக்க யார்க்கிட்ட இருக்கு...? கெணறுமுழுக்க வறண்டு தவக்களையும் மீனும் செத்து நாறுது...

தாதுவருசப் பஞ்சத்துலயும் இது கொடுமைன்னு பொலம்பிக்கிட்டேயிருந்த எம்மாமனார்ல ஆரம்பிச்ச வைசூரி பாதிசனத்தை அள்ளிக்கிட்டுப் போயிருச்சு... மிச்சமிருந்தவங்களுக்கு ஒரே கிலேசம்... நீஞ்சத்தெரியாத பிள்ளைய தண்ணிக்குள்ள அமுக்கினாப்ல தத்தளிச்சுப்போயிட்டம். பொணத்தை குளிப்பாட்டக்கூட தண்ணியில்ல. இடுகாட்டுல மேல்மண்ணையே பொறண்டியெடுக்க முடியல. அப்பறமெங்க குழியெடுத்து பொதைக்கறது... அதுக்காவ நாயோ நரியோ இழுத்துக்கிட்டுப் போகட்டும்னு விட்டுடமுடியுமா... சாதி வழக்கமில்லேன்னாலும் எரிச்சோம்...

காலக்கொடுமைய என்னன்னு சொல்றது... பசிதாங்காம பிள்ளைங்க எலி பிடிச்சு சுட்டுத் தின்னதை நெனைச்சா இப்பவும் நெஞ்சு பதறது. வயித்துக்கு சேரலையோ இல்ல மனசு ஒம்பலயோ என்னான்னு தெரியல, புள்ளைங்க கொமட்டி கொமட்டி வாந்தி எடுக்குதுங்க. வெளிய சொல்லமுடியுமா... மானம் போயிரும். ஆனது ஆகட்டும்னு இவங்கப்பன் அன்னிக்கு ராத்திரி கோயில்கலசத்துல பதனம்பண்ணி வச்சிருந்த வெதைதானியத்த களவாண்டு கொண்டாந்துருச்சி. ஆரியமும் கொள்ளும் தான்.

அஞ்சாறு படி சோளமிருக்கும். நெல்லையெல்லாம் ஏற்கனவே யாரோ களவாடியிருக்காங்க. ஊர் அடுப்பெல்லாம் அவிஞ்சுக்கெடக்கறப்ப எங்கூட்டு கூரையில மட்டும் பொகை எழுந்தா சந்தேகம் வந்துடுமேங்கிற பயத்திலயே பாதி உசுரு போயிருச்சு. அதில்லாம, மொதல்ல புள்ளையார் வாகனத்த பொசுக்கித் தின்னிருக்கு புள்ளைங்க, இப்ப அப்பன்காரன் பங்குக்கு கோயில்லயே கைவச்சாச்சு... இப்பிடி அடந்தாப்ல பண்ற தெய்வகுத்தம் அடுக்குமா குடும்பத்துக்குன்னு எம்மாமியா அனத்தல்வேற...

எங்கூட்ல தான் இப்படின்னுயில்ல. ஊரே ஒருவாக்கா முழிபிதுங்கிக்கெடக்கு. இன்னம் எத்தினி நாளைக்கு இந்த நிம்சைன்னு ஊர்க்கூட்டம் போட்டு எல்லாரும் பஞ்சம் பொழைக்க எங்காச்சும் போறதுன்னு முடிவுபண்ணி ஊரைவிட்டுக் கிளம்பினம். அஞ்சாறு குடும்பம் டும்கூர் போயிருக்கு. கொஞ்சம்பேர் ஆந்திராவுக்கு. பெங்ளுர் போலாமான்னு எம்மச்சாண்டார் சொன்னதை யாரும் ஏத்துக்கல.

அங்க ஏற்கனவே போன நம்மூர் சனங்க நாயோட மல்லுகட்டிப்பொழைக்குது. நாமளும் போட்டியா அங்க எதுக்குன்னுதான் திருட்டுரயிலேறி இங்க வந்தம். அந்தா தெரியுதே அந்த மரத்தடியில தான் இருக்கோம். ஒரு சம்சாரி தலைக்கு மூணுபடி ஆரியமாவு. சாத்துசெலவுக்கு சந்தைநாள்ல அஞ்சோ பத்தோ தருவாங்க. சம்பளம் கூலின்னு எதும் கணக்கா பேசல. இப்போதைக்கு கால்வயித்துக்காவது கஞ்சியும் காத்தாட கட்டையக்கெடத்த ஒரு எடமும் போதும்னு ஆயிருச்சு. அதுக்குமேல என்னா வேணும் ஒரு மனுசனுக்கு....

பழக்கமில்லாத வேலைதான். ஆனா கத்துக்கிட்டம். இந்தா இந்த புண்ணெல்லாம் தார் தெறிச்சு பழுத்ததுதான்... எனக்காச்சும் பரவால்ல, எங்கூட்டுக்காரருக்கு தார் சூடு ஒம்பாம வெளிக்கிருந்தா ரத்தரத்தமா போகுது. எதுக்கும் அசராத மனுசன் இப்ப தவியா தவிச்சுத் துடிக்கிறத கண்கொண்டு பாக்கமுடியல. பெரிய புள்ள இங்கதான் இருக்கா. களி கிண்ட தெரியல இன்னம். கட்டியும் புட்டையுமாயிடுது. ஆனா இங்க அக்கம்பக்கம் காட்ல பண்ணைரக்கிரி பறிச்சாந்து வயனமா அவ காய்ச்சுற சாறுதான் அவங்கப்பனுக்கு புடிக்குது. சின்னவ காளேஸ்பரத்துல என்தம்பியூட்ல இருக்கா.

மத்தியான சோறு போடறதால ஸ்கோல் போறா. அவளும் இங்க எங்களோடயே வந்திருக்க வேண்டியவதான். எம்மாமனார் சாவுக்கு வந்திருந்தவன்கூட கௌம்பிப்போனவ அங்கியே நின்னுட்டா. இந்த வைகாசி வந்தா மூணுவருசமாகப்போவுது. புள்ளை இந்நேரம் நெடுநெடுன்னு வளந்திருப்பா. கண்ணுலயே இருக்கற மாதிரியிருக்கு... அவளையும் கூட்டியாந்திருக்கணும் கையோட. அழாதீங்கன்னு சொல்றது உங்களுக்கு ரொம்ப சுளுவு. பெத்தவளால எப்பிடி முடியும்...? அய்யய்யோ... சளி மேல உழுந்துருச்சா... வெள்ளைசட்டையில அப்பிடியே தெரியுமே... அழுதுக்கிட்டே எதோ ஞாபகத்துல சிந்தி சொழட்டிட்டேன்... தப்பா நெனைச்சுக்காதப்பா... சரி...சரி...கிளம்பு... மேஸ்திரி வர்றான்... பேசிக்கிட்டிருக்கறதப் பாத்தான்னா வள்ளும்பான்...

''ஆட்கள் வேலை செய்கிறார்கள். வேறுபாதையில் செல்லவும்'' என்று மேஸ்திரி நிறுத்திச் செல்லும் அறிவிப்பு பலகையில் உள்ளதை கடைபிடிக்காமல் ஒரு சித்தாளிடம் பிறத்தியார் பேசுவதோ சித்தாள் பிறரிடம் பேசுவதோ நெடுஞ்சாலைத்துறையின் நடைமுறை விதிகளை மட்டுமல்ல, ‘பேச்சை குறைப்பீர் உழைப்பை பெருக்குவீர்’ என்ற இருபதம்சத் திட்டத்தையும் மீறுகிற குற்றமாகவும் கருத இடமுண்டாகையால் கதை இப்போதும் துவங்கமுடியாமல் நிற்கப் போகிறது என்பதை மடையர்களும் அறிந்துகொள்ளக்கூடும். கதை இல்லாவிட்டால் என்ன... கவியரசர் கண்ணதாசன் உங்களுக்காகவே எழுதியிருக்கும் இந்த பாட்டைக் கேளுங்களேன்...

அறுபதுகோடி வயிறு நிறைந்திட
இருபதம்சத் திட்டம் வந்ததம்மா...

இருபதம்சத் திட்டம் வந்து என்ன கிழித்தது என்று பாட்டைக் கேட்கும்போதே நீங்கள் யோசிப்பது அரசின் உளவுத்துறைக்கு தெரிந்துவிடும் பட்சத்தில் உங்கள் முதுகுத்தோலும் உதடும் கிழியும் அபாயமிருப்பதை அறியுங்கள். உயிர் வாழ்வதற்கான உரிமையே கிழித்தெறியப்படும் எமர்சென்சியில் நீங்கள் யோசிப்பது சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளது. சுதந்திரம், ஜனநாயகமெல்லாம் பறிபோய்விட்டாலென்ன ரயில்கள் தாமதமின்றி குறித்த நேரத்தில் வருவதற்காகவும் ரேசன்கடையில் எடைக்குறைவின்றி பொருட்கள் கிடைப்பதற்காகவும் சந்தோசமடையுங்கள்.

பிரயாணம் போகவும் ரேசன் வாங்கவும் மக்களிடம் காசில்லையே என்று தேசவிரோதமாக யோசிக்காதீர். அப்புறம் புல்டோசரோடும் விருத்தி நரம்பை வெட்டியெடுக்க கத்திரியோடும் சஞ்சய்காந்தி வரக்கூடும். ஆமாம், தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும். பசுவும் கன்றும் முட்டி பரலோகம் சேர்ந்தவர்களின் லிஸ்டை பார்க்க விரும்புவோர் அணுகவேண்டிய முகவரி: ஜெயபிரகாஷ் நாராயண், இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு மற்றும் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று அடுக்குமொழி பேசுவதற்கு முன்பிருந்த கருணாநிதி.

நாலைந்துநாள் தாடியை மழித்துக் கொள்ளப்போனவன் பெண்கள் தங்கள் கதையைச் சொல்வதற்கு எத்தனைத் தடைகள் பார்த்தீர்களா என்றான் பக்கத்தில் அமர்ந்திருந்தவனிடம். பாத்தா படிச்ச ஆளா தெரியறீங்க... சலூனுக்குள்ளாற அரசியல் பேசக்கூடாதுன்னு எழுதிப் போட்டிருக்கறதை படிக்கமாட்டீங்களா... அடுத்தவன் கொள்கைய மதிக்கற பண்பை வளத்துக்குங்க சார்... என்ற அறிவுரைக்கு கீழ்படிந்து வெளியே தலைகாட்டாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான் வெகுகாலம். அதனாலும் கதையின் கதி இப்படியானது.

வா கண்ணு.. நல்லாருக்கியா....கண்ணில்லேன்னாலும் உன்குரல் ஞாபகத்துல இருக்கய்யா. கடைசியா ரோட்டு வேலையில பாத்தது.. அவரு செத்தப்பறம் தனியா ஆம்பிளைத் துணை இல்லாம வெளிய எங்கயும் போகக் கூடாதுன்னிட்டான் தம்பி. சரின்னு அவன்வூட்லயே கொஞ்சநாள் இருந்தோம். காதுதான் கூடப்பிறந்துச்சு, தோடுமா கூடப் பிறந்துச்ச...? அவம்பொண்டாட்டி கண்டதுக்கெல்லாம் நொடுக்குநொடுக்குன்னா. அவங்களையும் பகைச்சுக்கிட்டு எங்கப்போறது வயசுக்கு வந்தப்புள்ளைங்களோட.... அரளிக்கொட்டையோ ஒடுவன்தழையோ ஆளுக்குக் கொஞ்சம் தின்னுட்டு மாஞ்சிரலாமான்னு கூட நெனைச்சேன்...

ஊரையே அழிச்சு முழுங்கின அப்பேர்பட்ட வைசூரி கூட பொழைக்கட்டும்னுதானே நம்மள உயிரோட விட்டுச்சு... அப்பறம் ஏன் நாம சாவணும்னு யோசிச்சுத்தான் பேசாம இருந்துட்டேன் இத்தினிவருசமா... ஆம்புளப்புள்ள வேணும்னு எந்தம்பியே பெரியவளை ரண்டாந்தாரமா கட்டிக்கிட்டான்... சக்காளத்தியாளா வருவான்னு தெரியாம கவுடத்து வூட்ல சேத்தினனேன்னு அவம்பொண்டாட்டி இன்னமும் சாபம்விடுறா... ஆனா எம்மவளுக்கும் பொட்டையாத்தான் பொறந்தது... அன்னையிலயிருந்து, மாமன் முன்ன மாதிரியில்லம்மா... போக்கே சரியில்ல, நாம வேற எங்கியாச்சும் போயிறலாம்னு சின்னவ நச்சரிச்சா.

படிச்சப்புள்ளை இல்லியா... கொஞ்சம் தகிரியம்... அவளாவே அங்க இங்க சுத்தி இந்த வேலையில சேந்துட்டா... தம்பிக்கு இதுல விருப்பமில்ல. அவனுக்கு வேற கணக்கு இருந்திருக்கும்போல.. டவுன்ல புள்ளை ஒத்தையா இருக்கப்படாதுன்னு சொல்லிட்டு நானும் வந்துட்டேன் சின்னவக்கிட்டே. பாவம் பெரியவ... இவன் குடிக்கும் கும்மாளத்துக்கும் அவ எங்கயிருந்து ஈடுகட்டப்போறா...

ஆமா நீ ஏன் இப்பிடி வலுக்கோலா என்கதையக் கேட்டுத் திரியறே... டவுன்காரங்க கதையெல்லாம் உனக்கு பிடிக்கலயா இல்லே கேட்டுக்கேட்டு புளிச்சிருச்சா... காலம்போன காலத்துல என்னைக்கேட்டா எந்தக் கதைய சொல்றது... திரும்பிப் பாக்கற மாதிரியா இருக்கு நான் பொழச்ச பொழப்பு... இல்லே இப்ப இருக்குற இருப்புதான் சொல்லிக்கறாப்ல இருக்கா... இந்தா ஊரே அடங்கிப்போச்சு, காத்தால போன புள்ளை இன்னம் வூடு திரும்பல. கண்ணவிஞ்ச இந்தக் குருடிக்கு அவ வந்தாத்தான் ஒருவாய் சோறு... எப்ப வருவாளோ மவ...

இந்த சின்னவ இருக்காளே, இவ இருக்கறதே பெரிய கதைதான்... இவ பொறந்ததும் எம்மாமியாக்காரி ரண்டாவதும் பொட்டையான்னு கறுவிக்கிட்டே இருந்தா. அப்பிடி இப்பிடின்னு நல்லதும் பொல்லதும் சொல்லி இவளை கொன்னுப் போடறதுக்கு வூட்டாளுகளை ஒத்துக்க வச்சுட்டா. எதுத்து என்னால ஒருவார்த்தை பேசமுடியல. மாலைமாலையா அழுதுகிட்டிருக்கேன். ஆம்பிளையாளுங்க வெளியப் போய்ட்டாங்க. மத்தியானம். தாவரத்துல கிடத்தி பால் குடுத்துக்கிட்டிருக்கேன். வெடுக்குன்னு சிசுவைப் புடுங்கிக்கிட்டு போனவ வூட்டுள்ளப்போய் தாள் போட்டுக்கிட்டா. கொழந்தை வர்வர்னு கத்துது.

கத்தறேன் கதறறேன் ஏன்னு கேக்க ஒரு நாய் வரல... ஆனதுஆகட்டும்னு கூரைத்தடுக்கை பிரிச்சுக்கிட்டு உள்ற எறங்கிப் பாக்கறேன்... சக்கரைத்தண்ணிய கொழந்தை உடம்பு முழுக்க பூசிவிட்டிருக்கா. அடித்தேவிடியா எறும்புக்கு படையல் போடறதுக்காடி எம்புள்ளை...ன்னு மயித்த இழுத்துப் போட்டு பொரட்டியெடுத்துட்டேன் அவளை. நான்மட்டும் அப்ப உள்ளாற போகாட்டி சக்கரைத்தண்ணி வாசத்துக்கும் ருசிக்கும் ஊர்லயிருக்குற அத்தினி எறும்பும் புள்ளைய கடிச்சிருக்கும். வலிதாங்காம கத்திக் கத்தி தொண்டை காய்ஞ்சு நாவடங்கி செத்திருக்கும். ம்ஹ¥ம்... என்னிக்கோ செத்திருக்க வேண்டியவ... அந்த புண்ணியவதிதான் இன்னிவரைக்கும் என்னைத் தாங்கிக்கிட்டிருக்கா.

இன்னங் கொஞ்சநேரத்துல அவ வந்துடுவா. கல்யாணமாகாத ஒரு பொண்ணு வூட்ல இப்பிடி இருட்டினப்பறம் ஒரு ஆம்பளை இருந்தா நாலுபேர் நாலுவிதமா சொல்வாங்க... தயவுசெஞ்சு நீ போயிருப்பா... என்கதைய திருத்தமா கோர்த்து சொல்லணும்னா அதுக்கு எம்மவதான் பொருத்தம். வேணும்னா நாளைக்கு அவளோட ஆபிஸ்ல போய்ப்பாத்து பேசு...பாத்து பத்திரமா போப்பா... வழியெல்லாம் இருட்டு...

கிழவி சொன்ன இருட்டு வழிமுழுக்க நிரம்பியிருந்ததால் திசைமாறிப் போய்விடக்கூடிய அபாயம் உண்டென்ற அச்சத்தோடேயே வீடுதிரும்பியதால் கதைகேட்க போனவனுக்கு மனநிலை பிறழ்ந்துவிட்டது என்ற டிரமாடிக் அல்லது சினிமாடிக் திருப்பத்தை நீங்கள் விமர்சனமின்றி ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். எனவே அவன் பரபரப்பாய் வெளியிட்டு பெயரெடுக்க விரும்பிய உண்மைக்கதை இன்னும் தொடங்கவேயில்லை. (இன்னொரு) எனவே எவ்வித மனவுறுத்தலுமின்றி நீங்கள் வழக்கமான அம்புலிமாமா அல்லது அக்ரகாரத்து அம்மாஞ்சிகளின் கதைகளையோ, கிராமியக்கதைகள் என்ற பெயரில் கம்மாயில் குளிக்கும் பெண்களின் கக்கத்தில் எத்தனை மயிர் என்கிற ஆய்வுகளையோ படித்து பொழுதை எப்படியாவது போக்குமாறு நேர்ந்துவிடப்படுகிறீர்கள்...

பிளாஸ்டிக் குப்பைகளை பொறுக்கிவந்து எடைபோட்டு லாரியில் ஏற்றி எங்கேயோ எதற்கோ அனுப்புகிற அந்த அலுவலகத்தை கண்டுபிடிப்பது அத்தனை கடினமில்லை. செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நம் செல்வம்... என்ற பெரிய பலகைக்குப் பின்னிருந்து வெளியே வந்தவள் கிழவியா அவளின் மகளா என்று துல்லியமாய் பிரித்தறிய முடியவில்லை. பின்கொசவம் முன்கொசவம் தாண்டி அம்மாவுக்கும் மகளுக்கும் அடிப்படையில் வேறெந்த வித்தியாசத்தையும் காணமுடியாமலிருந்தது. கிழவியின் முகத்திலிருந்த துயரத்தின் அத்தனை ரேகைகளும் இவளுக்குமிருந்தன. சிசுவிலேயே பதிந்துவிட்ட அச்சவுணர்வினாலோ என்னவோ மேலெங்கும் மொய்த்து ஊர்கிற எறும்புகளிடமிருந்து தப்பிக்கத் துடிப்பவளைப்போன்று பதற்றத்தோடேயே இருந்தாள். ஓயாமல் இருகைகளாலும் நினைவில் கடிக்கும் எறும்புகளை துரத்தியபடியுமிருந்தாள். குப்பைக்காகிதங்களின் வீச்சத்தை மீறி அவள் திரேகத்திலிருந்து சர்க்கரைத் தண்ணியின் வாசம் இப்போதும் வீசிக்கொண்டுதானிருக்கிறது.

அடுத்தநாளே நீங்க வருவீங்கன்னு எங்கம்மா சொல்லியிருந்தா. நீங்க ஏன்வரலேன்னு விசாரிச்சப்ப உங்களுக்கு மறை கழண்டுருச்சிங்கிற தகவல் கிடைச்சது. ஏற்கனவே நீங்க லூசாயிருக்கறதாலத்தான் எங்கம்மா கதையக் கேக்க நீங்க வந்துபோறீங்கன்ற என்னோட அபிப்ராயத்தில் எந்த மாற்றமுமில்லை. இருந்தாலும் இன்னிக்காவது வந்தீங்களேன்னு சந்தோசம். ஆனா என்ன பேசுறது...? ஏன் இவ்வளவு காலமா பேசமுடியாம இருக்கோம்கிறதை வேணும்னா பேசலாம். பேசமுடியாததுக்கு இன்னின்னார்தான் ஜவாப்தாரின்னு குற்றம்சாட்டலாம். இல்லேன்னா எங்களுக்கே தைரியமில்லாதப்ப, யாரைச்சொல்லி என்ன புண்ணியம்னு நொந்துக்கலாம். ஆனா முடிவு என்னன்னா நாங்க பேசவேப் போறதில்லைங்கறதுதான்.

மத்தவங்க எப்படியோ நானெல்லாம் ரொம்ப முற்போக்குவாதின்னு சொல்லிக்கிற உங்களாட்டம் ஆட்கள்கூட பெண்ணை என்னன்னு பாக்குறீங்க... அந்தா பாருங்க, அந்தநாய் கம்பத்துல ஒண்ணுக்கடிக்குது. அதே உபாதை உங்களுக்கு வந்துட்டா பஸ்ஸ்டேன்டோ பள்ளிக்கூட காம்பவுண்டான்னு பாக்கமாட்டீங்க... ஆயிரம்பேர் ஊர்வலம் போனாலும் அவுத்துக்கிட்டு நிப்பீங்க. ஆனா அப்படியொரு பொது இடத்துல புடவைய வழிச்சுக்கிட்டு நான் உட்காந்துரமுடியுமா.... என்ன இருந்தாலும் ஒரு பொம்பளைக்கு இவ்வளவு கொழுப்பும் ஆங்காரமும் இருக்கக்கூடாதுன்னோ தெனவெடுத்து திரியறான்னோ நினைக்கறதைத்தவிர உங்களுக்கு வேறென்ன யோசிக்கத்தெரியும்...?

இந்த ‘என்ன இருந்தாலும்’கிற வார்த்தைக்கு பின்னால் ஒளிஞ்சிக்கிட்டுத்தான் பெண்ணை வெறும் உடம்பா சதையா பாக்கற உங்க ஊளைப்புத்தியை களத்தில் இறக்குகிறீர்கள்.... இப்படி பேசறது தவிர்க்கமுடியாம ஆண்களை குற்றம்சாட்டுவதாகத் தானிருக்கும். தனிப்பட்ட ஆம்பளைகள் இதற்கு பொறுப்பேற்க முடியாதுன்னாலும் அதில் தானுமொரு அங்கம்னு நினைக்கிறதாலேயே நீங்கக்கூட எனக்கு எதிரா மாறுறதுக்கான வாய்ப்பிருக்கு. வேலைக்குப்போற பொம்மனாட்டிகள்ல 90 சதம்பேர் ஒழுக்கங்கெட்டவங்கன்னு பெரியவா (பெரியவான்னா காண்டாமிருகத்துக்கோ யானைக்கோ பொறந்தவர்னு நீங்க நினைச்சுக்க மாட்டீங்கதானே...) சொன்னது சரிதான்னு கொட்டையெழுத்துல போடுவீங்க... ‘பொம்பளைன்னா அடக்கஒடுக்கமா இல்லாம இப்படியா பேச வர்றது... அப்படியே பேசவந்தாலும் அடக்கஒடுக்கமா இருக்கறதைப்பத்தி பேசவேண்டியதுதானே... படிச்சிருக்கோம்கிற திமிர்ல என்னென்ன பேசுறா...’ன்னு எகிறுவீங்க.

எங்கம்மா காலத்திலாவது பகல் மட்டுந்தான் பண்ணாடிகளுக்கு சொந்தம். இப்பவெல்லாம் ராத்திரிகளும்கூட எங்களுக்கில்லை. நாங்கள் இப்போது நைட்ஷிப்டுகளுக்கும் வருகிறோம். அதனால் பகலோ இரவோ பூட்டியிருக்கும் நுகத்திலிருந்து நாங்கள் நிமிர்ந்துவிடமுடியாது. நிமிர்ந்து நிற்கிற இல்லேன்னா நிமிராமலேயே கூட பேசத்துணிகிற ஒரு காண்டிராக்ட் தொழிலாளியை - அதிலும் ஒரு பெண்ணை - விரும்புகிற முதலாளியோ ஆணோ இதுவரை பிறக்கவில்லை.

.நீங்க கேக்கறீங்களேன்னு இதையெல்லாம் நிஜமல்ல கதைன்னோ கதையல்ல நிஜம்னோ நீங்க போடுற மேடையிலயும் நாங்கவந்து பேசமுடியாது. ஏன்னா பேசிட்டு வந்தப்பறமும் நாங்க பழையமாதிரியேதான் வாழப்போறோம்.. பழசை மாத்தாத எந்தப்பேச்சும் வெறும்பேச்சு மட்டுமில்ல வெட்டிப்பேச்சும்தான். நேரத்தை போக்க வழியில்லாதவங்க பேசிக் கலையலாம். இல்லைன்னா யாரையாச்சும் பேசவிட்டு ரசிக்கலாம். அதுக்குன்னு பாப்பையாக்களும் சுகி சிவம்களும் லியோனிகளும் இருக்காங்க. எங்களை விட்டுடுங்க.

இப்போது கிளம்புங்கள்....

நாலெழுத்து படித்தாலே பொம்பளைகளுக்கு பொடனி சிலுத்துக்கும் என்று தான் உள்ளுக்குள் ரகசியமாய் வைத்திருக்கும் கருத்தை இந்தப் பெண்ணும் உறுதிபடுத்திவிட்டதாக கருதி மகிழ்ச்சியடைந்தவன் வழக்கம்போல் கதை எழுதத் தொடங்கிவிட்டான். ஏன் தங்கள் கதையை சொல்லமுடியவில்லை என்று ஒவ்வொரு பெண்ணும் சொல்ல விரும்புவதையே அவளின் கதையாக அவன் எழுதப்போகிறான் இனியும். நீங்களும் படித்துத் தொலைவீராக....‘ஒரே ஒரு ஊர்ல....’ . 



செவ்வாய், மே 23

நான் விரும்புவது… யெவ்கெனி யெவ்டுஷெங்கோ

 யெவ்கெனி யெவ்டுஷெங்கோ (10.07.1933 -01.04.2017) அவர்களின் இக்கவிதை "உங்கள் நூலகம்" இதழில் வெளியாகியுள்ளது. தமிழாக்கமும் விளக்கக்குறிப்பும்: தோழர் எஸ்.வி.ராஜதுரை.

ஒவ்வொரு நாட்டிலும் பிறக்கவும்
அயல்நாட்டுத்துறை அலுவலகங்கள் அனைத்தையும் பீதியில் ஆழ்த்துவதற்கு அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டைப் பெறவும் விரும்புகிறேன் ஒவ்வொரு பெருங்கடலிலும் உள்ள ஒவ்வொரு மீனாகவும் தெருவோரப் பாதைகள் அனைத்திலும் திரியும் நாயாகவும் இருக்க விரும்புகிறேன் எந்த விக்கிரங்களுக்கும் முன்னால் தலைவணங்கவோ ஆர்த்தடாக்ஸ் திருச்சபையால் ஈர்க்கப்பட்ட ஹிப்பியாக இருக்கவோ எனக்கு விருப்பமில்லை ஆனால், பய்கால் ஏரியின் ஆழத்தில் குதித்து தண்ணீரிலிருந்து வேறெங்கேனும் மேலெழும்பி மூச்சுவிட விருப்பம் அந்த இடம் ஏன் மிஸிஸிப்பியாக இருக்கக்கூடாது? எனது நேசத்துக்குரிய பேரண்டத்தில் தன்னந்தனியான காட்டுச் செடியாக இருக்க விருப்பம், ஆனால் கண்ணாடியில் தனது முகத்தையே முத்தமிடும் நுண்ணய நார்ஸிஸாக அல்ல. கடவுளின் பல படைப்புகளில் ஏதோவொன்றாக இருக்க விரும்புகிறேன் அசிங்கமான கழுதைப்புலியாகவும்கூட ஆனால் ஒருபோதும் கொடுங்கோலனாக அல்ல கொடுங்கோலனின் பூனையாகக்கூட அல்ல. எங்கும் எந்த இடத்திலும் மனிதனாகவே மறுஅவதாரமெடுக்கக விரும்புகிறேன்: பாராகுவே நாட்டுச் சிறைகளில் சித்திரவதைக்கு உள்ளானவனாக ஹாங்காங் நகரக் குடிசைப் பகுதிகளிலுள்ள வீடற்ற குழந்தையாக பங்களாதேஷில் உயிருள்ள எலும்புக்கூடாக திபெத்த்தில் புனித யாசகனாக கேப்டவுனில் கறுப்பனாக. ஆனால் ஒருபோதும் ராம்போவின் படிமத்தில் அல்ல. என்னால் வெறுக்கப்படுபவர்கள் மாய்மாலவாதிகள் மட்டுமே, கெட்டியான இனிப்புத்திரவத்தில் ஊறவைக்கப்பட்ட கழுதைப் புலிகள் அவர்கள். உலகிலுள்ள அனைத்து அறுவை சிகிச்சை மருத்துவர்களின்கீழும் படுக்க விரும்புகிறேன் கூன் விழுந்தவனாய், பார்வையற்றவனாய், அனைத்து நோய்களாலும் புண்களாலும் தழும்புகளாலும் அவதிப்படுவனாய், போரால் பாதிக்கப்பட்டவனாய் சிகரெட் துண்டுகளை அள்ளிப் போடுபவனாய் இருக்க விரும்புகிறேன் அசுத்தமான நுண்ணுயிரியாக மேன்மையாவன் என்ற எண்ணம் என்னுள் புகாமலிருப்பதற்காக மேட்டுக்குடியினருடன் சேர்வதை நான் விரும்பவில்லை கோழைத்தனமான மந்தையுடன் இணைவதையும் அந்த மந்தையின் காவல் நாயாகவோ அந்த மந்தையால் பாதுகாப்பளிக்கப்படும் இடையனாகவோ இருப்பதையும் விரும்பவில்லை. மகிழ்ச்சியை விரும்புகிறேன் ஆனால் மற்றவர்களின் மகிழ்ச்சியை விலையாகக் கொடுத்து அல்ல சுதந்திரத்தை விரும்புகிறேன் ஆனால் சுதந்திரமற்றவர்களை விலையாகக் கொடுத்து அல்ல. உலகிலுள்ள எல்லாப் பெண்களையும் நேசிக்க விரும்புகிறேன் நானே ஒரு தடவையாவது பெண்ணாக இருக்கவும் விரும்புகிறேன் இயற்கை அன்னை ஆண்களுக்குக் குறையொன்றைக் கொடுத்துவிட்டாள்… ஆண்களுக்கு அவள் தாய்மையைக் கொடுத்திருந்தால்? மாசுமருவற்ற குழந்தை அவனது நெஞ்சுக்குக் கீழே அசையுமானால் ஆண் ஒருவேளை அத்தனை கொடூரமானவனாக இருக்கமாட்டான். மனிதனின் அன்றாட உணவாக இருக்க விரும்புகிறேன் சொல்லப் போனால் துக்கம் அனுட்டிக்கும் வியத்நாமியப் பெண்ணுக்குக் கைப்பிடிச் சோறாக நேப்பிள்ஸ் நகரத் தொழிலாளர்களின் உணவு விடுதியில் மலிவான மதுரசமாக மனிதனின் அன்றாட உணவாக அல்லது வளையம் போல் நிலாவைச் சுற்றிவரும் மிகச் சிறிய பாலாடைக்கட்டித் துண்டாக: அவர்கள் என்னை உண்ணட்டும் அவர்கள் என்னைப் பருகட்டும் எனது சாவு மட்டுமே சிறிது பயன்படட்டும். எல்லாக் காலங்களையும் சேர்ந்தவனாக இருக்க விரும்புகிறேன் எத்தகைய சாமர்த்தியசாலி நான் என்று வரலாறு அதிசயிக்கும் அளவுக்கு அதைத் திகைக்க வைக்க விரும்புகிறேன். நெஃபெர்டிட்டியை ட்ரொய்காவில் உட்கார வைத்து பூஷ்கினிடம் அழைத்துவர விரும்புகிறேன் ஒரு கணத்தின் வெளியைப் பன்மடங்கு பெருக்கி ஒரே நேரத்தில் சைபீரிய மீனவனுடன் வோட்கா பருகவும் ஹோமர், தாந்தே, ஷேக்ஸ்பியர் ஆகியோருடன் அமர்ந்து கோகா-கோலாவைத் தவிர வேறு எதனையேனும் அருந்தவும் காங்கோவில் முரசுகளின் ஒலிக்கு ஆடவும் ரெனோவில் வேலை நிறுத்தம் செய்யவும் கோபாகபானா கடற்கரையில் பிரேஸிலியப் பையன்களுடனும் தோல்ஸ்தாயுடனும் பந்தைத் துரத்திச் செல்லவும் விரும்புகிறேன். ஒவ்வொரு மொழியையும் பூமிக்கு அடியில் பாயும் இரகசிய நீரோட்டங்களையும் அறியவும் அனைத்து வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்யவும் விரும்புகிறேன் ஒரு யெவ்டுஷெங்கோ வெறும் கவிஞன்தான் இரண்டாவது யெவ்டுஷெங்கோ தலைமறைவுப் போராளி,ஏதோஓரிடத்தில் அது எந்த இடம் எனச் சொல்ல மாட்டேன், பாதுகாப்புக் காரணங்களுக்காக மூன்றாவது யெவ்டுஷெங்கொ பெர்க்ளி பல்கலைக் கழக மாணவன் நான்காமவன், ஜாலியான ஜார்ஜியக் குடிகாரன், ஐந்தாமவன் அலாஸ்காவில் எஸ்கிமோ குழந்தைகளின் ஆசிரியனாக இருக்கக்கூடும் ஆறாமவன், ஏதோவொரு நாட்டில், அடக்கத்தோடு சொல்லப்போனால், ஏன் ஸியராலியோனிலும்கூட இளம் குடியரசுத் தலைவனாக ஏழாமவன், தொட்டிலில் இன்னமும் கிலுகிலுப்பையை ஆட்டிக் கொண்டிருப்பவனாக பத்தாவது…. நூறாவது… நான் நானாக இருப்பது எனக்குப் போதுமானதல்ல படைக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும் அதேபோன்ற இன்னொன்றுண்டு ஆனால், கார்பன் காகிதத்தைப் பயன்படுத்துவதில் கடவுள் கருமி அவரது விண்ணுலகப் பதிப்பகம் என்னை ஒப்பில்லாத ஒரே ஒரு பிரதியாக்கியது ஆனால், நான் கடவுளின் சீட்டுகளைத் தாறுமாறாகக் கலைத்துப் போடுவேன் அவரைக் குழப்பத்தில் ஆழ்த்துவேன் எனது வாழ்நாளின் இறுதிவரை ஆயிரம் பிரதிகளாக இருப்பேன் - என்னைக் கண்டு பூமியும் பரபரவென இயங்குவதற்கு, உலக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுகையில் கணினிகளுக்குப் பித்துப் பிடிப்பதற்கு. மனிதகுலமே உனது தடையரண்கள் எல்லாவற்றிலும் போர் புரிவேன் - சக்தி தீர்ந்து களைத்துப் போன நிலவாக ஒவ்வொரு இரவிலும் மரணித்து, புதிதாகப் பிறந்த சூரியனாய் ஒவ்வொரு காலையிலும் மீண்டும் பிறப்பேன் என் மண்டையோட்டில் சாகாவரம் பெற்ற மென்புள்ளியொன்றைக் கொண்டவனாய். சாதுரியமான ஸைபீரிய ஃப்ரான்ஸுவோ வியோனாக நான் இறக்கும்போது பிரான்ஸிலோ, இத்தாலியிலோ மண்ணுக்குக் கீழே என்னைக் கிடத்தாதீர்கள் ஆனால், ரஷிய ஸைபீரிய மண்ணில் இன்னும் பசுமையாக இருக்கும் குன்றில் - ஒவ்வொருவரும் நானே என்பதை நான் முதன் முதலில் உணர்ந்தது அங்குதான். ~~~ 1.ஆர்த்தடாக்ஸ் திருச்சபை: ரஷியாவிலும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் மிகவும் செல்வாக்குப் பெற்றுள்ள கிறிஸ்தவ மதப் பிரிவு 2.பய்கால்ஏரி (Lake Baikal) : ரஷியநாட்டின் ஸைபீரியப் பகுதியில் உள்ள மிகப் பெரும் ஏரி. 3.அமெரிக்காவின் தென் மாகாணங்களிலொன்று. 4. நார்ஸிஸஸ் (Narcissus): மிக அழகானவன் என்று கிரேக்க இதிகாசங்களில் சொல்லப்படும் வேடனான நார்ஸிஸஸுக்குத் தனது அழகைப் பற்றிய கர்வம்அதிகம். அதனால்தான் அவன் தன்னைக் காதலித்தவர்கள் அனைவரையும் உதாசீனப்படுத்தி வந்தான். இதனால் ஆத்திரமுற்ற கிரேக்கக் கடவுளான நெமெஸிஸ், தனது மந்திரசக்தியால் நார்ஸிஸை ஒரு குளத்துக்கு வரச் செய்தான். அந்தக் குளத்து நீரில் பிரதிபலித்த தனது முகத்தின் அழகிலேயே லயித்து மயங்கிய நார்ஸிஸால் அங்கிருந்து வரவே முடியவில்லை. அந்த பிம்பத்துக்கு ஈடான அழகிய முகம் வேறெங்கும் இல்லை என்று கருதிய அவனுக்கு உயிர் வாழும் ஆசை இல்லாமல் போய்விட்டது. சாகும் வரை அந்தப் பிம்பத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தான். தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்கிற சுயமோகிகளைக் குறிக்க ‘நார்ஸிஸஸ்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. 5. கேப்டவுன் (Cape Town): தென்னாப்பிரிக்காவின் தலைநகரம். 6. ராம்போ: அமெரிக்க ஆணாதிக்க, ஆண்-மைய, இராணுவ வல்லமைக்கான குறியீடு. ராம்போ பாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் ஸில்வஸ்டர் ஸ்டலோன் நடித்த படங்கள் 1960 முதல் 1980கள் வரைஅடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருந்தன. 7. நெஃபெர்டிட்டி (Nefertiti): மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட அரசி. 8. ட்ரொய்கா(Troika): கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டு தொடக்கம்வரை ரஷியாவில் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்பட்டுவந்த, மூன்று குதிரைகள் பூட்டப்பட்ட சக்கர வண்டி. 9. பூஷ்கின் (Alexander Pushin) உலகப் புகழ்பெற்ற 19ஆம் நூற்றாண்டு ரஷியக் கவிஞர். 10. ரெனோ (Renault): இதே பெயருடைய கார்களைத் தயாரிக்கும் பிரெஞ்சுத் தொழிற்சாலை. 11. கோபாகபானா கடற்கரை(Copacabana Beach): பிரேஸில் நகரமான ரியோ டி ஜெனிரோவிலுள்ள புகழ்பெற்ற கடற்கரை. 12. பெர்க்ளி பல்கலைக் கழகம்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள பெர்க்ளி நகரத்திலுள்ள பல்கலைக் கழகத்தின் சரியான பெயர் ‘கலிபோர்னியா பல்கலைக் கழகம்’.ஆனால், இது பொதுவாக ‘பெர்க்ளி பல்கலைக் கழகம்’ என்றே அழைக்கப்படுகின்றது. 13. ஸியராலியோன் (Sierra Leone) : மேற்கு ஆப்பிரிக்க நாடு. 14.இக்கவிதையின் ஆங்கில மொழியாக்கத்திலுள்ள ”the seventh would still be shaking a rattle in his stroller” என்பது “ ஏழாமவன், இன்னமும் தொட்டிலில் கிலிகிலுப்பை ஆட்டிக் கொண்டிருப்பவனாக” எனத் தமிழாககம் செய்யப்பட்டுள்ளது. ’ஸ்ட்ரோல்லெர்’ (stroller): என்பது குழந்தைகளை உட்காரவைத்து சிறிது நேரம் உலாவச் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் சிறிய (சக்கர) தள்ளுவண்டி. ஏழாவது யெவ்டுஷெங்கோ, இன்னும் குழந்தையாகவே இருக்கிறான் என்பதற்காக இக்கவிதையில்’ ஸ்ட்ரோல்லெர்’ குறிப்பிடப்படுகிறது. நம் நாட்டில்குழந்தைகளுக்கான ‘ஸ்ட்ரோல்லெர்’ மிகஅரிதாகவேஉள்ளது. 15. ஃப்ரான்ஸுவா வியோன் (Francois Villon): 15ஆம்நூற்றாண்டு பிரெஞ்சுக் கவிஞர்; துணிச்சலான குற்றச்செயல்களுக்காக சிறைவாசம் புரிந்தவர். 16. அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்திலுள்ள டுல்ஸா நகரத்தில் காலமான யெவ்கெனி யெவ்டுஷெங்கோவின் உடல் ரஷியாவின் சைபீரியப் பகுதியிலுள்ள அவரது சொந்த ஊரான ஸிமாவுக்கு (Zima) எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.

சனி, மே 20

வேட்டை - ஆதவன் தீட்சண்யா

அந்தியில் கிளம்புது சேனை பம்மி வருகிறது இருட்டு நிலவு வருமோ அமாவாசையாகத் தானிருக்கட்டுமே கண்கள் ஜொலிக்கிறது திமிர்க்கிறது கால்களும் தோள்களும் எங்கோ விலகி நெளிந்துக்கிடந்தப் பாதை அடங்கியசைகிறது பாதங்களுக்கடியில் இலக்கை முன்னறிந்து தாழங்குத்திலிருந்து ஓசையற்று இறங்கிவரும் பூநாகங்கள் தீண்டும் முன்பே மிதிபட்டுச் சுருள காரை சூரைப் புதர் விலக்கி கடக்கிறோம் வெந்துகொண்டிருக்கும் பிணத்தை எட்டுக்கையாலும் பிய்த்துத் தின்னும் ஓங்காரி எதிர் நேர்வோரை காவு கொண்டுவிடுமென்று பயங்காட்டி மறித்தோரை உதைத்தோட்டிவிட்டு சுடலைகள் வழியேயும் தொடர்கிறது பயணம் சில்வண்டுகளும் காட்டுராசிகளும் சதங்கையென ஜதியூட்ட மோகினியோவென அஞ்சிக் கிளர்ச்சியுற்று மல்லியப்பூ வாசத்துக்கு அலைகிறது நாசி கக்கிவைத்த மாணிக்கக்கல்லொளியில் இரைதேடிய முதிர்நாகம் அச்சத்தில் விழுங்கி மறைகிறது புற்றுக்குள் உருவிய உடைவாளை உறைக்குள் சொருகிக் கொள்ளவே நேரமில்லை குழியிலும் சுழியிலும் இறங்கிய புனித அழுக்குகளை சொந்த நதிகளில் கழுவிக்கொண்டு கடல்மேல் நடந்து மலைகளைப் பிளக்கிறோம் வெள்ளி முளைக்கையில் சிறகுகள் பொசுங்கப் பொசுங்க கிரணமண்டலத்துள் பாயும் எங்களது முகமும் காலடியும் தகித்து வரும் சூரியனில் தெரியும் சூரியனாகவும் நாங்களிருப்போம்.

வியாழன், மே 18

சுய விலக்கம் - ஆதவன் தீட்சண்யா

நகரத்தின் மோஸ்தருக்குள் முற்றாய் பொருந்திவிட்ட என்னை அத்தனை சுளுவாய் அடையாளம் கண்டுவிடமுடியாது எனக்கே தெரியுமன்றாலும் அறுந்த செருப்பை தெருவோர காப்ளரிடம் தான் தைத்துக்கொள்கிறேன் வீட்டுக்கே வந்து டோபி துணியெடுத்துப் போகிறான் முன்னொரு காலத்து என் அம்மா போல நீயமரும் இருக்கையிலேயே எனக்கும் சவரம் சலூனில் பரம்பரையின் அழுக்கு அண்டிவிடக்கூடாதென்று நகங்களைக்கூட நறுவிசாக வெட்டிக்கொள்கிறேன் அதீத கவனத்தோடு ஊரை மறக்கிறேன் புறப்பட்டுவந்த சுவடு தெரியாதிருக்க சண்டேக்களில் மட்டனோ சிக்கனோதான் பீப் என்றால் என்னவென்றே தெரியாது என் பிள்ளைகளுக்கு ரிசர்வேசனுக்கெதிரான உங்களின் உரையாடலின் போதும் "நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்..." என்கிற போதும் யாரையோ வைவதாய் பாவனை கொள்கிறேன் பதைக்கும் மனமடக்கி "உங்கம்மாளப் போட்டு பறையன் சக்கிலிப் போக..." என்ற வசவுகளின் போது அதுக்கும் கூட உங்களுக்கு நாங்க தான் வேணுமா என்றும் சாவு வீடுகளில் வதக்வதக்கென்று யாராச்சும் ஜதிகெட்டு கொட்டடித்தால் எங்கப்பனாட்டம் உன்னால அடிச்சி ஆடமுடியுமா என்றும் கேட்கத்துள்ளும் நாக்கை எத்தனைசிரமப்பட்டு அடக்கிக்கொள்கிறேன் தெரியுமா இருப்பினும், தடயங்களை அழிக்காமல் உள்நுழைந்தத் திருடனைப்போல் என்றாவதொரு நாள் எப்படியேனும் பிடிபட்டு அவமானப்படும் அச்சத்தில் உங்களோடு ஒட்டாமல் ஓட்டுக்குள் ஒடுங்கும் என் புத்தியிலிருந்து நீங்கள் என்னை கண்டுபிடிக்கக்கூடும்...

செவ்வாய், மே 9

பார்ப்பனரல்லாதார் சாதி இந்துக்களாக மாறிய கதை - வ.கீதா



டிசம்பர் 1917இல் பார்ப்பனரல்லாதார் அறிக்கை வெளியானது. இந்திய தேசிய இயக்கத்தின் ஒரு பிரிவாக அன்னி பெஸண்டின் தலைமையில் செயல்பட்ட ஹோம்ரூல் லீக் வெகுவீரியமாக இயங்கிக்கொண்டிருந்த காலக்கட்டம் அது. இந்திய தேசியம் தொடர்பான சொல்லாடல்கள், குறிப்பாக இந்து சமுதாயத்தின் பழம் பெருமை பற்றிய பேச்சு தீவிரமாக முன்னெக்கப்பட்ட தருணம். இந்த சூழ்நிலையில் தான் பார்ப்பனரல்லாத சமுதாயங்களை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் ஒன்றிணைந்து மேற்கண்ட அறிக்கையை வெளியிட்டனர். அறிக்கை வெளியானதை தொடர்ந்து 1917 ஆம் ஆண்டு முழுக்க சென்னை மாகாணம்தோறும் பார்ப்பனரல்லாதார் மாநாடுகள் கூட்டப்பட்டன. இந்திய தேசியம் குறித்த ஆழமான விமர்சனங்களை இந்த மாநாடுகளில் பேசியவர்கள் முன்வைத்ததோடு, வகுப்புரிமையின் தேவையையும் வலியுறுத்திப் பேசினர்.

சாதிகளாக பிரிந்திருக்கும் இச்சமுதாயம் எவ்வாறு ஒரு தேசமாக அமையமுடியும் என்ற கேள்வியை எழுப்பியதுடன் சாதிகளுக்கிடையே சமத்துவம் ஏற்பட்டாலொழிய இந்திய தேச உருவாக்கம் என்பது பார்ப்பனர்களின் நலத்தையும் மேலாண்மையையும் காப்பாற்றும் தேசியமாகத்தான் இருக்கும் என்றும் இவர்கள் கருத்துரைத்தனர்.  பண்டித அயோத்திதாசர் தான் இத்தகைய சிந்தனைகளை தமிழ் பொது சமுதாய வெளியில் முதன்முதலில் முன்வைத்தார். அவர் ஆசிரியராக இருந்து நடத்திய தமிழன் இதழில் சுதேசிய சீர்த்திருத்தம் என்ற தலைப்பில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதிவந்தார். திலகரின் தலைமையில் உருவாகியிருந்த தீவிர இந்திய தேசியத்தை குறித்த ஆழமான விமர்சனங்களை இக்கட்டுரைகள் உள்ளடக்கியிருந்தன. அவர் எழுதத்தொடங்கி 10 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கருத்துகள் பொருளாதார, அரசியல் செல்வாக்கு பெற்றிருந்த பார்ப்பனரல்லாத சமுதாயங்களை சேர்ந்தவர்களால் அரசியல்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இவற்றை பரப்புரை செய்தவர்கள் அனைவரும் செல்வாக்குடையவர்களாக இருக்கவில்லை.

அறிவுத்தளத்திலும் அதிகார உலகத்திலும் பார்ப்பனர்கள் செலுத்திவந்த ஆதிக்கம், அதனூடாக வெளிப்பட்ட அறிவுதிமிர், சமத்துவத்தைமறுக்கும் மனப்பாங்கு, பிறரிடமிருந்து தம்மை வேறுபடுத்திக்கொண்டு அத்தகைய வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் தேடிக்கொண்ட மேன்மை ஆகியவற்றை கண்டு சினமுற்ற பலருக்கும் - தலித்தலைவர்கள், சிந்தனையாளர்கள் பலருக்கும் – பார்ப்பனரல்லாதார் இயக்கம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. (தலித்துகளின் பங்கேற்பு, அவர்கள் நாடிய சமத்துவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தர மறுத்தால் பார்ப்பனரல்லாத இயக்கத்தின் அடிப்படையான ஜனநாயக கொள்கைகள் சீர்க்கெட்டுப்போகும் என்று எம்.சி. ராஜா போன்ற தலித்தலைவர்களும் ஓ. கந்தசாமி செட்டி போன்ற தலித் அல்லாத அறிவாளர்களும் அன்றே எச்சரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.)

இன்றைக்கு பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றி 100 ஆண்டுகள் ஆகியுள்ள சூழ்நிலையில் பார்ப்பனரல்லாதார் என்று இனியும் பேசுவதில் நியாயமிருக்க முடியுமா என்ற கேள்வியை பலர் எழுப்பிவருகின்றனர்.  100 ஆண்டுகளுக்கு முன் இத்தகைய கேள்விகளை எழுப்பியவர்கள் பார்ப்பனர்களின் மேலாண்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டதை சகிக்கமாட்டாது பார்ப்பனரல்லாதார் இயக்கம் பேசிய நியாயங்களையும் விமர்சனங்களையும் எள்ளி நகையாடினர். இன்றோ தலித் அறிவாளர்கள் இந்த கேள்வியை எழுப்பி வருகின்றனர். பார்ப்பனரல்லாதார் நலம், உரிமைகள் என்று பேசிக்கொண்டு சாதி இந்துக்களின் மேலாதிக்கத்தை தான் பார்ப்பனரல்லாதார் இயக்கம் நிறுவியுள்ளது என்று இவ்வறிவாளர்கள் வாதிடுகின்றனர். குறிப்பாக 1967இல் தொடங்கி இன்று வரை நடைபெற்றுவரும் திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்காலங்கள் இத்தகைய மேலாதிக்கத்துக்கான அரசியல், பொருளாதார அடிப்படைகளை உருவாக்கியுள்ளன என்றும் இவர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய விமர்சனம் முன்வைக்கப்படுவதற்கான காரணங்கள் இல்லாமல் இல்லை.  காலம் கிளர்த்தியுள்ள வரலாற்று மாற்றங்கள் பார்ப்பனரல்லாத சாதிகளின் பொருளாதார பலம், சமூகத்தகுதி, பண்பாட்டு அடையாளம் ஆகியவற்றில் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. பார்ப்பனர்களின் மேலாண்மையில் சிற்சில சேதாரங்கள் ஏற்பட்டிருப்பினும், அவர்களின் ஆதிக்கமானது பலநிலைகளில் இன்றுமே தொடர்கிறது. குறிப்பாக மதம், உயர்கல்வி, ஊடகத்துறை, மத்திய அரசுநிர்வாகம், வங்கித்துறை, தனியார் துறை – நமது பொருளாதார, பண்பாட்டு வாழ்வில் தீர்மானகரமான பங்கு வகிக்கும் துறைகளில் அவர்கள் தொடர்ந்து செல்வாக்கு செலுத்திவருகின்றனர். அதேசமயம், அவர்களின் மேலாண்மைக்கு சவால் விடுத்து அவர்களின் சாதி ஆணவத்தைச் சாடிய பார்ப்பனரல்லாத அறிவாளர்கள் சார்ந்திருக்கும் சமுதாயங்களும் சுதந்திர இந்தியாவின் அரசியல், பொருளாதார வாழ்வில் முக்கிய பங்காற்றவந்துள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை, நிலம், வர்த்தகம், அரசுநிர்வாகம், காவல்துறை, ஊடகத்துறை என்று எதை எடுத்துக்கொண்டாலும் இந்த சமுதாயங்களை சேர்ந்தவர்களின் பங்களிப்பும் அதிகாரமும் கூடியுள்ளன. குறிப்பாக இச்சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இந்த அதிகாரமானது எல்லா பார்ப்பனரல்லாத சமுதாயங்களுக்கும் போய் சேரவில்லை என்பது உண்மைதான் என்றாலும்,  குறிப்பிட்ட சமுதாயம் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் உள்ளூர் மட்டத்தில் அவர்களின் பிரதிநிதிகள் அரசியல் பலம் பொருந்தியவர்களாகவே இருக்கின்றனர்.

தலித் சமுதாயங்களை சேர்ந்தவர்களின் வாழ்க்கையில் ஒப்பீட்டளவிலான முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், அவர்கள் தனிப்பெரும் அரசியல் சக்தியாக வளர்ந்துள்ள நிலையிலும்கூட அவர்களின் இருப்புக்கும் உரிமைகளுக்கும் இன்றுமே சமூகத்தளத்தில் உத்திரவாதம் இல்லை. சட்டம் பேசும் உரிமைகளை மெய்யுலகில் செயல்படுத்த வருகையில் தலித்துகள் சந்திக்கும் சவால்களும் அவ்வுரிமைகளை நிலைநிறுத்த அவர்கள் மேற்கொள்ள வேண்டிய போராட்டங்களும் நாளுக்குநாள் கூடி வருகின்றனவேயொழிய குறைந்தபாடில்லை. அவர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் அதிகரிக்க தலித்துகளின் உரிமைசார் செயல்பாடுகளே காரணங்களாக உள்ள அவலநிலையும் தமிழ்நாட்டில் தொடர்கிறது. பழைய தீண்டாமை வகைகள் ஆங்காங்கு குறைந்துள்ளபோதிலும் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் கூடியுள்ளன. இன்னும் சொல்லப்போனால், பார்ப்பனரல்லாத சாதிகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகள், போட்டாபோட்டிகள் ஆகியன ஒருபுறம் இருந்தாலும், தலித் விரோத செயல்பாடுகள் என்ற இந்த ஒருபுள்ளியில் அவர்கள் இணையவே செய்கின்றனர்.  குறிப்பிட்ட பார்ப்பனரல்லாத சமுதாயத்திலுள்ள வர்க்க, வட்டார வேறுபாடுகளை சமன்படுத்தவும் ஈடுகட்டவும் இத்தகைய வன்செயல்களும் அவை முன்நிறுத்தும் சாதி பெருமித அரசியலும் உதவுகின்றன. 1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தலித்துகளுக்கும் பழங்குடியினருக்கும் எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை எதிர்த்தல், சாதி மறுப்புத் திருமணங்களையும் காதல் உறவுகளையும் சாடுதல், அவற்றை சகிக்கமாட்டாது சம்பந்தப்பட்ட இளைஞர்களை துன்புறுத்தல், கொலைசெய்தல், தலித்துகளின் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்கமுடியாது அவர்களின் சொத்துகளை சூறையாடுதல் என்பன போன்ற செயல்களில் பார்ப்பனரல்லாத சமுதாயங்களை சேர்ந்தவர்களின் அரசியல், சமுதாய தலைமைகளாக தம்மை அறிவித்துக்கொண்டு செயல்படுபவர்கள் ஈடுபட்டு வருவதைக் காண்கிறோம். அவர்களின் அரசியல் தலைமையை ஏற்று சாதி பெருமிதங்களைக் காப்பாற்ற இச்சமுதாயங்களைச் சேர்ந்த வறிய பிரிவினரும் களம் இறங்குவதும் நடைபெற்று வருகிறது. இழப்பதற்கு சாதி அடையாளத்தைத் தவிர வேறு ஏதும் இல்லாத சூழ்நிலைதான் இவர்களை இவ்வாறு செயல்படவைக்கிறது – எல்லாவிதமான இயலாமைகளையும் ஈடுகட்ட சாதிப்பெருமிதம் கைக்கொடுக்கிறது.

தலைமைகள், கட்சிகளை கடந்து சமுதாய மனநிலையில் மாற்றங்களேஏ ற்படவில்லை என்று கூறிட முடியாது. மாற்றங்களுக்கான அறிகுறிகள்இருக்கவே செய்கின்றன – சாதி எல்லைகளைக் கடந்த தோழமை, காதல், அரசியல் இணைவு, அறிவுலகத்தில் நடைபெறும் சிற்சில உரையாடல்கள் என்று பலநிலைகளில் இவை தம்மை வெளிபடுத்திக் கொள்கின்றன. ஆனால் புதியதொரு அரசியல், சமுதாய இலக்கை நிர்ணயிக்க வல்லவையாக இம்மாற்றங்களை அடையாளப்படுத்தி, அத்தகைய இலக்கை நோக்கி சமுதாயத்தை நகர்த்தும் அரசியலோ சிந்தாந்தமோ இன்று இல்லை. சாதியை அழித்தொழிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்தால் மட்டுமே இத்தகை நகர்வு சாத்தியப்படும். ஆனால் திராவிட இயக்கமாக பரிணமித்து ஆட்சியதிகாரத்தை நோக்கிய நீண்ட பயணத்தில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் இத்தகைய இலக்கை பற்றி சிந்திப்பதற்கான அரசியல் திண்மையையும் கற்பனையையும் இழந்துவிட்டது என்றே கூறவேண்டும்.

தமிழ் அடையாளம் என்ற செக்யூலர் புள்ளியில் சாதி, மத வேறுபாடின்றி அனைத்து தமிழ்பேசும் மக்களையும் இணைப்பதில் அவ்வியக்கம் வெற்றிகளை கண்டது என்பது உண்மைதான். மேலும் "தமிழ்" அடையாளம் என்பது சாதி இழிவை அகற்றி தலித்துகளுக்கும் பிறருக்கும் புதிய மனித வார்ப்புகளை அளிக்கவல்லது என்று அயோத்திதாசர் உள்ளிட்ட பலரும் நம்பினர். தலித்துகள்தான் ஆதிதமிழர்கள் என்று அவர் அறுதியிட்டுக் கூறியதற்கான நியாயங்களை மொழியிலும் இலக்கியத்திலும் தான் அவர் தேடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுமே "தமிழ், தமிழர் நலம்" என்ற பொதுக்கோரிக்கையை கனமானதாக திருமாவளவன் உள்ளிட்ட தலித் தலைவர்கள் முக்கியமானதாக கருதுகின்றனர். 
ஆனால் இந்த செக்யூலர் அடையாளமானது சாதி எதிர்ப்பு என்ற உள்ளீட்டை முதன்மைப்படுத்தும் போதெல்லாம், அதற்கான நியாயங்களை பேசியபோதெல்லாம் சாதி தமிழர்களுக்கு அது ஏற்புடையதாக இருப்பதில்லை. சாதிக்கு அப்பாற்பட்டதாக மொழி, பண்பாட்டு அரசியல் அமையவேண்டும் என்று அவர்களின் தலைமையும் ஏன் தொண்டர்களும்கூட இன்றுமே கூறிவருகின்றனர். அண்மையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டங்களின் போது இத்தகைய மனநிலை வெளிபட்டது. தமிழ் அடையாளத்தை சாதி எதிர்ப்பு அடையாளமாக உருமாற்ற செய்யவேண்டிய வேலைகளை குறித்து நாம் ஆக்கப்பூர்வமாக உரையாடத் தயங்குவதற்கும் மறுப்பதற்கும் காரணம், தமிழ் என்று சொன்னாலே, அதனளவில் அது அதிகாரத்தை எதிர்க்கவல்ல, பொது நியாயம் பேசவல்ல அடையாளம் என்று கொண்டுவிடுகிறோம், அல்லது அவ்வாறு நினைப்பது என்பது நமக்கு வழமையாகிவிட்டது. மத்திய அரசையும், பார்ப்பன- பனியா அரசியல், சமுதாய ஆதிக்கத்தையும் இந்திய தேசியத்தையும் எதிர்க்க தமிழ் அடையாளம் முன்வைக்கப்பட்ட நாளிலிருந்தே இந்தபிரச்சனை இருந்துவந்துள்ளது. இந்த எதிர்ப்பின் மொத்த உருவமாக தமிழ் அடையாளம் பாவிக்கப்பட்டதேயொழிய, தமிழ் சமுதாயத்தில் நிலவும் சாதி, பாலின, வர்க்க வேறுபாடுகளை களைய வல்லதாக, அவற்றை கடந்த சமத்துவமான, நீதியான சமுதாயத்தை உருவாக்கவல்லதாக அறியப்படவில்லை. அப்படியே அறியப்பட்டாலும் பழம்பெருமை பேச்சிலும் சங்க இலக்கியங்களை கொண்டாடுவதிலும் தான் தமிழ் மரபுக்குரிய சமூகநீதி வெளிப்பாடு கண்டது.

இன்றுமே இந்துத்துவ எதிர்ப்பின் முக்கிய அறிகுறியாக தமிழ் அடையாளம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் அவ்வடையாளத்தின் பெயரில் இந்துத்துவத்தை எதிர் கொள்ளமுடியுமா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, அதன் பெயரில் எதைஎதையெல்லாம் காப்பாற்ற விரும்புகிறோம், எதை எதையெல்லாம் சரிக்கட்ட மறுக்கிறோம் என்பன குறித்தும் நாம் சிந்திக்க மறுக்கிறோம். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை கைப்பற்ற பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு வருகிறது என்ற எச்சரிக்கை மணியை அடிப்பது முக்கியம்தான் என்றாலும் அக்கட்சியானது நம் சமுதாய, அரசியல் வாழ்க்கையிலும் அறவியல் சிந்தனையிலும் புகுத்தியுள்ள சீர்குலைவுகளைப் பற்றி பேச நமக்கு வாய்வருவதில்லை. இந்திய அரசு, இந்துத்துவம் ஆகியவற்றை எதிர்க்கும் தமிழ் ஆர்வலர்கள் பாசிச அரசியலுக்கு வழிவகுத்த அதிமுகவின் கையூட்டு அரசியலையும் ஜனநாயக விரோதச் செயல்பாடுகளையும் பற்றிய பொதுவிவாதத்தை ஏற்படுத்த தயாராக இல்லை. இது அரசியல் சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல – தமிழ் அடையாளம் என்பதன் உட்கூறுகள் குறித்து விமர்சனபூர்வமாக யோசிக்க நமக்கிருக்கும் தயக்கத்தையே காட்டுகிறது.

மற்றொரு முக்கியப் பிரச்சனை, பெண் விடுதலை தொடர்பானது. பெண்களின் உடல்களில் தான் சாதிகளின் அடையாளம் பொறிக்கப்படுகிறது. அவர்களின் கருவுறும் ஆற்றலின் மீது சாதி குடும்பமும் அதன் ஆணாதிக்கத்தலைமையும் இன்றுமே அதிகாரம் செலுத்திவரும் சூழ்நிலையில் பெண்களின் உடல் மாண்பு, சுய விருப்பம், காதல், மனவிழைவு, மணவாழ்க்கை, தாய்மை கடந்த வாழ்க்கையைத் தேர்தெடுத்துக் கொள்ள அவர்களுக்கு இருக்கவேண்டிய சுதந்திரம் ஆகியவற்றை தமிழ்ச்சமுதாயம் பொருட்டாக கருதாததோடு, இவை குறித்து அறிவுப்பூர்வமாக விவாதித்த சுய-மரியாதை இயக்க மரபையும் தொலைத்துவிட்டது அல்லது அதனை நினைவுகூர்வதை கவனமாக தவிர்த்து வந்துள்ளது. அப்படியே பேசினாலும் சாதிமறுப்பு திருமணங்களை ஆதரிப்பதுடன் தனது வேலை முடிந்துவிட்டது என்று கருதிவிடுகிறது. சாதி குடும்பம், சாதியால் கட்டமைக்கப்பட்ட பொதுவெளி, இவற்றை இயக்கும் ஆணாதிக்கச் சிந்தனை, மனப்பாங்கு ஆகியவற்றை குறித்து யோசிக்கக்கூட தயாராகவில்லை. சாதி அமைப்பை ஏற்காது அதன் பிடியிலிருந்து வெளியேற விரும்பிய பெண்களின் வாழ்வியலுக்கு ஆதரவாக நின்ற சுயமரியாதை இயக்க மரபின் நிழல் கூடு தம்மீது பட்டுவிடக்கூடாது என்ற அன்று முதல் இன்று வரை முற்போக்கு அரசியல் கருத்துகளை கொண்டுள்ள ஆண்களும் கவனமாக இருந்து வந்துள்ளனர்.

முற்போக்கு அரசியலின் முக்கிய கூறாக விளங்கும் இடதுசாரி இயக்கங்கள் சாதி எதிர்ப்பை கையில் எடுக்கத் தவறியதையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. தலித் தொழிலாளர்களின் பக்கம் நின்று பற்பல போராட்டங்களை நடத்தியபோதிலும், அவர்களின் சமூக மாண்பை நிலைநிறுத்த தீண்டாமையின் பல வடிவங்களை எதிர்த்து செயல்பட்டாலும், சாதி ஒழிப்பு என்பதை தமக்கான முக்கிய இலக்காக, வர்க்கப் போராட்டத்துக்கு இணையான, அதனுடன் சேர்ந்து நடைபெற வேண்டிய போராட்டமாக அண்மைக்காலம் வரை இவ்வியக்கங்கள் இனங்காணவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியவராகிறோம்.
----
கடந்த நூறு ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்காலங்களின் செயல்பாடுகளுடன் இணைத்துப் பார்க்கவும் வேண்டியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவுற்ற சூழ்நிலையில் இத்தகைய மதிப்பீட்டை நாம் மேற்கொள்வது என்பது பயனுள்ளதாக இருக்கும். திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்காலம் என்று நாம் கூறிக்கொண்டாலும், எம்.ஜி. ராமச்சந்திரனால் தொடங்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தான் அதிக நாட்களும் தொடர்ச்சியாகவும் ஆட்சி செலுத்தியுள்ளது.

திமுகவின் ஆட்சிக்காலத்தை எடுத்துக்கொண்டால் அது தொடக்கத்தில் மக்கள்நலம்சார் ஆட்சியாக அமையும் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மாநில சுயாட்சி, நீதியான பொருளாதார வளர்ச்சி, வகுப்புரிமையைப் பாதுகாக்கத் தேவையான சட்டத்திட்டங்கள், சாதி நீக்கம் செய்யப்பட்ட பண்பாட்டு உருவாக்கம் என்று பல விஷயங்கள் இங்கு சாத்தியப்படும் என்று பலர் அன்று நினைத்தனர். 

பொருளாதார வளர்ச்சியை எடுத்துக்கொண்டால் முன் ஆட்சிப் புரிந்த காங்கிரஸ் ஆட்சி பின்பற்றிய வளர்ச்சி, உற்பத்திசார் திட்டங்களை திமுகவும் பின்பற்றியது. குறிப்பாக வேளாண்துறையில் தொடங்கப்பட்டிருந்த பசுமைப்புரட்சியை இக்கட்சியின் ஆட்சியுமே தொடர்ந்து வளர்த்தது, விரிவுப்படுத்தியது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை அதிகார வலிமைக் கொண்டும் சமரச நடவடிக்கைகளின் மூலமும் இக்கட்சி எதிர்கொண்டது. விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை சமன்படுத்துவதிலும் நிலவுடைமையாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதையும் திமுகவினர் கைவிடவில்லை – வெண்மணி படுகொலை இதற்கு முக்கிய சான்று.

தொழில் வளர்ச்சிக்கு வித்திட்ட காங்கிரஸ் கொள்கைகளைப் பின்பற்றிய அதேவேகத்தில் தொழிலாளர்களின் போராட்டங்களை அடக்கியொடுக்கவும் திமுகழக ஆட்சியாளர்கள் தயங்கவில்லை. அன்று முக்கிய தொழிலாளர் தலைவராக இருந்த வி.பி.சிந்தனுக்கு நேர்ந்த கதியை அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. எந்த மாணவர்களின் போராட்டத்தை சாதகமாக்கிக் கொண்டு ஆட்சிக்கு வந்ததோ அதே மாணவர்களின் போராட்டங்களை மூர்க்கமாக கையாளவும் திமுக தயங்கவில்லை.

அதே சமயம் வளர்ச்சி, மக்கள்நலம் என்ற இரண்டு விஷயங்களிலும் தனக்குள்ள "அக்கறை"யை ஆட்சியாளர்கள் வெளிபடுத்திக் கொண்டும் வந்தனர். எடுத்துக்காட்டாக, சாலை, போக்குவரத்து துறைகளில் முதலீடு செய்தது, போக்குவரத்து துறையை அரசுடைமையாக்கியது. 1990களில் புதிய பொருளாதாரக் கொள்கை அமுலுக்கு வந்த பிறகு சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்கத் தோதான திட்டங்களை திமுக தான் செயல்படுத்தியது. இதையெல்லாம் செய்த அதேவேளை, வகுப்புரிமையை உத்திரவாதப்படுத்தியது. குடிசை மாற்று வாரியத்தின் செயல்பாடுகளை விரிவுப்படுத்தி நகரப்புற வறிய பிரிவினருக்கான வீட்டு வசதிகளை செய்து கொடுத்தது. மாநில சுயாட்சி தொடர்பான விவாதங்களை பொதுவெளியில் தொடர்ந்து நடத்தியது.  முக்கியமாக தமிழ்ச் சமுதாயத்தில் பார்ப்பன அறிவாளிகள் செலுத்தி வந்த மேலாண்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து திராவிட அறிவாளர்களின் வளர்ச்சியை சாத்தியப்படுத்தியது. தமிழ் அடையாளத்துக்கு செக்யூலர் உள்ளீட்டை வழங்கியதன் மூலம் தலித்துகளையும் கூட தன்வசப்படுத்தியது.

கையூட்டு அரசியலுக்கு அது வழிவகுத்த போதிலும், உள்கட்சி ஜனநாயகத்தை வளர்க்கத் தவறியபோதிலும் தேவைப்பட்ட போது மத்திய அரசுடனும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியுடனும், ஏன் ஒரு கட்டத்தில் பா.ஜ.க.வுடன் கூட அரசியல் கூட்டணி ஏற்படுத்திக்கொண்ட போதிலும் தன்னை தமிழர் நலம் காக்கும் கட்சியாக தொடர்ந்து நிலைநிறுத்திக்கொண்டது. – இத்தனைக்கும் ஈழ விடுதலைப் போராட்டத்தை பொறுத்தவரை சந்தர்ப்பவாத நிலைப்பாட்டினையே அதுமேற்கொண்டது.

திமுகவின் ஆட்சிக்காலத்தில் தான் சாதி இந்து சமுதாயங்களைச் சேர்ந்தவர்களின் ஒரு பிரிவினரின் ஒப்பீட்டளவிலான பொருளாதார, அரசியல் வளர்ச்சி என்பது சாத்தியப்பட்டது. அதேசமயம், நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியது போல, இந்த வளர்ச்சியானது இச்சமுதாயங்களின் சாதிய தன்னிலையை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்தது. வரலாற்றுப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம், சாதி எதிர்ப்பு என்பதை வகுப்புரிமையுடன் மட்டும் தொடர்புபடுத்திய அரசியல் சிந்தனையும் செயல்பாடும் இத்தகைய வளர்ச்சிக்கு வித்திட்டது எனலாம். மேலும், சாதியமைப்பை பத்திரப்படுத்தியுள்ள நிலவுடைமை முறை, சாதிய உளவியல், பண்பாடு, பொது வெளியில் சாதியைக் கடந்த உறவுகள் அவ்வப்போது சாத்தியப்பட்டாலும் பண்பாடு, காதல், குடும்பம் என்று வரும்போது சாதி அடையாளங்கள் தொடர்ந்து முன்நிறுத்தப்படுதல் ஆகியனவற்றை அரசியல்ரீதியாக அணுகுவதற்கான கருத்துநிலையும் அதையொட்டிய செயல்பாடும் முக்கியமானதாக கருதப்படவில்லை. எனவே, சாதி இந்துக்களின் வளர்ச்சியானது ஒப்பீட்டளவில் ஜனநாயகப் பரவலாக்கத்தை சாத்தியப்படுத்திய போதிலும் சமுதாய வெளியிலும் நமது அரசியல் ஊடாட்டங்களிலும் ஜனநாயகம் ஆழமாக வேர்க்கொள்ள வித்திடவில்லை – தலித்துகளுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்றுவரும் வன்முறைகளும், சுயவிமர்சனத்துக்கு இடங்கொடுக்காத "திராவிட" பெருமித அரசியல் சொல்லாடல்களும் ஒன்றுக்கு மற்றொன்று அரண் சேர்த்து உண்மையான ஜனநாயக வளர்ச்சியை தடுத்துள்ளன. முக்கியமாக தலித்துகளுக்கு எதிராக செயல்படும் சாதி இந்து சமுதாயத்தினருக்கு அரசின் பாதுகாப்பு தொடர்ந்து இருந்துகொண்டேவந்துள்ளது.

அடுத்து அதிமுகவின் ஆட்சிகாலங்களை எடுத்துக்கொண்டால், தமிழகத்தின் அரசியல், சமுதாய வெளிகளிலிருந்து ஜனநாயகப் பண்புகள் முற்றிலுமாக தூக்கியெறியப்பட்ட ஆட்சிக் காலங்களாக அவை இருந்தன என்று சொல்லலாம். மக்களுக்கான ஆட்சியாக தன்னை அறிவித்துக்கொண்டாலும் மக்களை மதிக்காத, அவர்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்ற அவ்வப்போது அவர்களுக்கு சலுகைகளை வழங்கும் ஆட்சியாகத்தான் ஆதி முதற்கொண்டே இக்கட்சியின் ஆட்சி அமைந்தது. அறிவுப்பூர்வமாக சிந்தித்து மாநிலத்தின் வளர்ச்சிக்கு திட்டமிடுதலுக்குப் பதிலாக மாநிலத்தின் நிதியாதாரங்களை கட்சித்தலைமையின் சொந்த கருவூலத்துக்குரிய சொத்தாக பாவித்தே அக்கட்சித்தலைமை செயல்பட்டு வந்தது.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு எழுதப்பட்ட முக்கிய மதிப்புரை ஒன்று அவரின் ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி முடக்கப்பட்டதன் விவரங்களையும், அவரின் ஜனநாயக விரோதச் செயல்பாடுகள் மாநிலத்தின் ஜனநாயக வாழ்வில் ஏற்படுத்தியிருந்த பாதிப்புகளையும் பட்டியலிட்டுக் காட்டியது. அவரின் ஆட்சியில் நடந்த என்கவுண்டர் கொலைகள், ஊடகத்துறையை கட்டுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்ட சட்டமாற்றங்கள், சிவில் உரிமைகளுக்காக பாடுபட்ட அமைப்புகளும் அவற்றின் உறுப்பினர்களும் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டது தொடர்பான செய்திகள் ஆகியவற்றை அந்த மதிப்புரை உள்ளடக்கியிருந்தது.  

எம்.ஜி.ஆர் ஆட்சியின் முக்கிய சாதனை சத்துணவுத்திட்டம் தான். அதை சிலாகித்து பேசுபவர்கள் அதற்கு வித்திட்டவர் காமராஜர் என்பதையும் அவருக்கு முன் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் சுப்பராயனின் அமைச்சரவை இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது என்பதையும் சுட்டிக்காட்டுவதில்லை. எம்.ஜி.ஆர். இத்திட்டத்தை பரவலாக்கினார் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதை செய்ததன் மூலம் குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு வருவதற்கான பெரும் வாய்ப்பையும் வெளியையும் அவர் ஏற்படுத்தினார் என்று கொண்டாலும், கல்வி தொடர்பான அவரின் பிற கொள்கைகளுடன் இதனை தொடர்புபடுத்தி பார்க்கவேண்டும் – குறிப்பாக உயர் கல்வி தனியார்மயமாவதற்கான திட்டத்தை தீட்டியவர் அவர்தான். தனியார் கல்லூரிகளில் வகுப்புரிமையை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், இங்குள்ள பிற்பட்ட, தலித் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அரசுக்கு இருக்கவேண்டிய முக்கிய பொறுப்பை அரசு கைவிடவும் இந்த முடிவு காரணமாக இருந்தது. 
கையூட்டு அரசியல் வளரவும் விரிவடையவும் புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாக அமைந்தது (இதற்கு முன் ஆட்சிகளும் கட்சிகளும் கையூட்டு அரசியலை பின்பற்றவில்லை என்று கூறிட முடியாது – திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஆணையத்தின் முடிவுகள் அக்கட்சித்தலைமைக்கு சாதகமாக அமையவில்லை என்பது வரலாறு). அக்கொள்கையை பின்பற்றி தமிழகத்தின் மூலவளங்களை சூறையாடும் மோசமான வளர்ச்சிப்போக்கை ஜெயலலிதா தலைமையில் பதவியேற்ற ஆட்சி முன்னெடுத்தது. இத்தகைய சூறையாடுதல் என்பது "இயல்பானதாக" ஆக்கப்பட்டு அதனால் இலாபம் ஈட்டிய தொழிற்குழாம்களும் குடும்பங்களும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களாக தங்களை கருதிக்கொள்ளவும் அவரின் ஆட்சி வழிவகுத்தது. இருந்தும் மக்களின் நல்லாசியையும் ஆதரவையும் பெற எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஏற்றம் பெற்ற சலுகை அரசியலை இவர் அருங்கலையாக உருமாற்றினர்ர் – குறிப்பாக ஏழைப்பெண்கள குறிவைத்து இவரின் சலுகை அரசியல் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது.

அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் தான் குறிப்பிட்ட சாதியினரின் செல்வாக்கை ஆதாரமாகக் கொண்ட அரசியல் வளர்ச்சி என்பது உத்தியாக கையாளப்பட்டது. நமது ஜனநாயக அரசியலில் சாதி சமுதாயங்களின் நலனே மக்கள் நலனாக அறியப்பட்டடு வரும் நிலைமையுள்ள போதிலும், குறிப்பிட்ட சாதியினரின் வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை மையமிட்ட அரசியலை அதிமுகதான் வெற்றிகரமாகவும் பட்டவார்த்தனமாகவும் கையிலெடுத்தது. சாதி கட்சிகளின் வளர்ச்சிக்கான நியாயங்கள் எவ்வாறானதாக உள்ளபோதிலும், அவற்றுக்கான அரசியல்ரீதியான ஒப்புதலை அதிமுகவின் செயல்பாடுகள் பெற்றுத்தந்தன. இதை செய்த அதேவேளை தலித்துகளுக்கு எதிரான போக்கை அரசு மேற்கொள்வதையும் இக்கட்சிதான் "இயல்பா"க்கியது. தன் பங்கிற்கு திமுகவும் ஆட்சியில் இருக்கையில் இந்தப் போக்கைக் கடைபிடிக்கத் தவறவில்லை.

----
பார்ப்பனரல்லாதார் இயக்கம் கண்டுள்ள மாற்றங்கள், அந்த இயக்கம் வழி உருவான அரசியல் கட்சிகளின் ஆட்சிக்காலங்கள் சாதித்தவை, செய்யாதவை, காலம் கிளர்த்தியுள்ள வரலாற்றுப்பூர்வமான மாற்றங்கள் ஆகியவற்றை குறித்த துல்லியமான நுணுக்கமான ஆய்வுகள் நமக்குத் தேவை. அவற்றை மேற்கொள்ளும் மனநிலையும் அவசியம் – வரலாற்று பெருமிதங்களை கடந்து இத்தகைய ஆய்வுக்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும்.

பெரியார் நமக்கு வலியுறுத்தியவற்றை இங்கு நினைவுகூர்வது அவசியம் - சாதி, பார்ப்பனியம், இந்துமதம், பணக்காரத்தனம் ஆகிய அனைத்தும் ஒன்றோடு மற்றொன்று பின்னிப்பிணைந்துள்ளவையாகும் என்பதை அவர் சளைக்காமல் கூறிவந்தார். பார்ப்பனர்களின் மேலாண்மை, பணக்காரர்களின் ஆதிக்கம், இந்துமதம் சாற்றும் சாதிக்கொரு நீதி ஆகியவற்றை எதிர்ப்பதும், அவற்றுக்கு மாற்றீடாக பொதுவுடைமை, சமதர்மம், பகுத்தறிவு பேசும் அரசியல், சமுதாயச் செயல்பாடுகள் ஆகியன தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதும் அவசியம் என்பதை தன் வாழ்நாள் முழுக்க சுட்டிக்காட்டினார். அதற்கான செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவரின் வாதங்களை புதிப்பித்து அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வதாக நமது ஆய்வுகளும் விவாதங்களும் அமைந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

புதன், மே 3

குறுக்குசால் - ஆதவன் தீட்சண்யா


நீங்களாகவே உங்கள் கோவணத்தை
உருவியெறிந்ததன் மூலம்
கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததோடு
கஜானாவிற்கு வருமான இழப்பையும் ஏற்படுத்தியதற்காக
உங்கள்மீது கடுங்கோபத்திலிருக்கிறது அரசாங்கம்

உல்லாசம் பீறிடும் கேளிக்கைக்கான ஆவலில்
தன் பரிவாரத்தோடு
உப்பரிகை மாடத்திலிருந்து
மைதானத்தைப் பார்வையிடும் மன்னர்பிரானுக்கு
துயரங்களும் குமுறல்களுமான மன்றாடுதலை
உயிருருகச் சொல்வதற்கு ஒத்திகைப் பார்ப்பதன் மூலம்
மற்றுமொரு குற்றத்தையும் இழைத்தவராகிவிடாதீர்கள் 

தின்பதற்கு எலியும் குடிப்பதற்கு மூத்திரமும்
தட்டுப்பாடின்றி கிடைக்கும் இத்தேசத்திற்கு
விசுவாசம் காட்டும் வாய்ப்புகளை
வேண்டுமென்றே தவறவிடுகிற நீங்கள்
விளைநிலம் வெள்ளாமை என்று உச்சரித்து
தேசவிரோதத்தின் அடர்த்தியை ஏன் கூட்டுகிறீர்கள்

பிடில் வாசித்துக்கொண்டிருப்பதில்
மன்னரோடு
மக்களும் போட்டியிட்டுவரும் நாட்டில்
சூழும் இக்கொடுநெருப்பை  அணைக்க
யாரும் வரப்போவதில்லை
பொசுக்கும் சூட்டுக்குள் சிக்கித் தவிப்போரே
சொந்தக்காலில் தப்பி வாருங்கள்

கிளம்பிப்போன தடம் மறந்துப்போவதற்குள்
சொந்த ஊர் திரும்புங்கள்
பாளம்பாளமாய் வெடித்துக்கிடக்கும் இந்தப் பாழ்நிலத்தில்
பட்டொளி வீசி பறக்கும்படியாய் நட்டுவையுங்கள்
நம் தேசியக்கொடியை
ஜப்தி செய்ய வருவோரின் கழுத்தை இறுக்குவதற்காவது
அது தேவைப்படும்.

நன்றி: ஆனந்த விகடன் 3.5.17

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...