வியாழன், பிப்ரவரி 3

அதிகாரத்தைப் பற்றிய உண்மைகளைப் பேசுவோம் - ஆதவன் தீட்சண்யா


“அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசு எனக் கூறுவது இப்போது தேய்வழக்காகிப் போனது. அதிகாரத்தைப் பற்றிய உண்மைகளைப் பேசுவதே இங்கு தேவையாக இருக்கிறது” என்கிறார் ஊடகவியலாளர் பி.சாய்நாத். மக்களிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் அவ்வதிகாரத்தை மக்களுக்கு எதிராகவே ஏவும் கொடூரத்தை துணிவுடன் அம்பலப்படுத்துவதற்கான ஓர் அறைகூவல் இது. இந்த அறைகூவலுக்கு ஓர் எளிய செயல்விளக்கமாக அமைந்துவிட்டது 2022 ஜனவரி 15 அன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியான சிறார் நிகழ்ச்சியொன்று. 

ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 என்ற அந்நிகழ்ச்சித்தொடரில் பங்கெடுத்த இரண்டு சிறார்கள் இம்சை அரசன் 23ஆம் புலிகேசியையும் அவனது மங்குனி அமைச்சனையும் நினைவூட்டும் விதமான தோற்றத்தில் வந்து தமக்குள் ஓர் உரையாடலை நிகழ்த்துகின்றனர். கருப்புப்பண ஒழிப்பு, பணமதிப்பிழப்பு, ஊதாரித்தனம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது என நாட்டின் நலனுக்கு விரோதமாக செயல்படும் மன்னன் அக்கெடுவழியில் மேலும் செல்லும் விருப்பத்தை வெளிப்படுத்துவதும் அதை அமைச்சன் தடுக்க முற்படுவதுமான இந்த உரையாடல் நிகழ்த்தப்படுகையில் அரங்கமே ஆரவாரித்திருக்கிறது. அந்நேரத்துப் பார்வையாளர்களும் கூட அதேயளவுக்கு நகைப்புடன் ரசித்துவிட்டு அடுத்தச் சேனலுக்கு ரிமோட்டை அழுத்தி கடந்துப் போயிருப்பார்கள். ஆனால் அப்படி நிகழாவண்ணம் தடுத்து இந்நிகழ்வை ஒட்டுமொத்த சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்து பெரும் பேசுபொருளாக்கிய பெருமை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையே சாரும். 

போலிஸ்துறையில் இருக்கும்போது அரசியல்வேலையும் இப்போது அரசியல்களத்தில் போலிஸ் வேலையும் செய்துவருகிற மேற்படி அண்ணாமலை, இந்த நிகழ்ச்சி பிரதமரின் மாண்பை குலைப்பதாக இருக்கிறதென்றும் அதற்காக இந்நிகழ்வில் தொடர்புடைய அனைவரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கதற ஆரம்பித்தார். அதன் பிறகுதான் “அடடா அப்பேர்ப்பட்ட அரிய நிகழ்ச்சியை எப்படி தவறவிட்டோம் என்ற அங்கலாய்ப்புடன் தமிழ்ச் சமூகம் விழுந்தடித்துப் பார்த்து பரவலாக்கியது. நமது பன்மொழிப்பாவலர்கள் அவசரடியாக பல்வேறு மொழிகளுக்கும் மொழிமாற்றி கொண்டாட்டத்தை உலகளாவியதாக்கி விட்டார்கள். குடிமக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதுதானே ஒரு பிரதமருக்கு மாண்பு. ஆனால் அறியாப்பிள்ளைகளின் ஐந்துநிமிட நிகழ்ச்சியினாலேயே பிரதமரின் மாண்புக்கு பங்கம் நேர்ந்துவிடும் என்றால் அது என்ன மாண்பு என்றெல்லாம் கேள்விகள் சுழன்றன. அதன் பிறகும் அடங்காத அண்ணாமலையும் அவரது கூட்டாளிகளும் இந்நிகழ்வு குறித்து ஜீ தமிழ் தொலைக்காட்சியிடம் விளக்கம் கேட்கும்படி ஒன்றிய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திடம் புகார் செய்தார்கள். அந்த அமைச்சகமோ பாரதிய ஜனதாவின் தகவல் ஒளிபரப்புத்துறையாக தரமிறங்கி அந்தப் புகாரின் தூண்டுதலில் ஜீ தொலைக்காட்சியிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. 

இந்தப் புகார் மற்றும் விளக்கம் கோரும் கடிதத்தின் சாரமும் தொனியும் அப்பட்டமான ஜனநாயகவிரோதமானவை. நிகழ்த்துனர்களாகிய சிறார்கள் மோடியின் பெயரையோ அல்லது இந்தியாவையோ நேரடியாக எங்கும் குறிப்பிடவில்லை; அப்படியே நேரடியாக குறிப்பிட்டுச் சொல்லியிருந்தாலும் அது நாட்டுநடப்பு பற்றிய விமர்சனம்தானேயன்றி அதில் அவதூறு ஏதுமில்லை. பெண் ஊடகவியலாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள் மீது அவதூறு செய்வதற்கு உரிமை கோரும் அண்ணாமலைகள், அரசினை விமர்சிப்பதற்கு குடிமக்களுக்குள்ள உரிமையினை மறுக்க முனைவதற்கு எதிராக ஊடகங்களிலும் ஊடகங்களுக்கு வெளியேயும் விவாதம் சூடுபிடித்தது. உடனே விமர்சனம் செய்யுங்கள், ஆனால் குழந்தைகளை வைத்து ஏன் செய்கிறீர்கள் என்று திசைதிருப்பினார்கள். குழந்தைகளை சங்கிகள் தமது கெடுதியான நோக்கங்களுக்கு பயன்படுத்தும்போது குழந்தைகளை வைத்து இப்படி விமர்சிப்பதில் என்ன தவறு என்று ஏட்டிக்குப்போட்டியாக வாதிடுவது அர்த்தமற்றது. குழந்தைகள் நடப்புண்மைகளை தம் சொந்தக்கண்  கொண்டு பார்த்து அவற்றின் மீது கருத்து சொல்லும் வல்லமையும் கூருணர்வும் கொண்டவர்கள் என்பதை நிறுவியதும்,  விளக்கம்தானே கேட்டிருக்கிறோம், நடவடிக்கையா எடுத்துவிட்டோம் என்று மழுப்புகிறார்கள். 

ஏழரையாண்டுகால மோடி ஆட்சியின் ஏழரைகளுக்கு எதிரான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத பாஜகவினர் தங்களது அரட்டல்மிரட்டல் அராஜகத்தால் மக்களின் குரலடக்கப் பார்க்கிறார்கள். ஒன்றிய இணையமைச்சராக முருகன் பொறுப்பேற்றதும் ஆறே மாதத்தில் ஊடகங்களை எங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிடுவோம், நாங்கள் ஆட்சியிலிருக்கும் 17 மாநிலங்களின் போலிசை வைத்து  தமிழ்நாட்டின் மாற்றுக் கருத்தாளர்களை ஒடுக்குவோம் என்றெல்லாம் கடந்தநாட்களில் கொக்கரித்து வந்ததன் தொடர்ச்சியில் தான் அண்ணாமலை இப்போது சிறார்களிடம் மல்லுக்கு நிற்கிறார். சிறுவர்கள் தான் தனக்கு சமதையானவர்கள் என்று அவர் வேண்டுமானால் நினைத்துக்கொள்ளலாம். ஆனால் அந்தச் சிறுவர்கள் அதை ஏற்க வேண்டுமே!    

நன்றி: செம்மலர், 2022 பிப்ரவரி 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...