ஞாயிறு, செப்டம்பர் 1

சாணிப்பத்தும் ஊதாங்குழல் ஒத்தடமும் - ஆதவன் தீட்சண்யா

    எங்கள் வீட்டிலிருந்து பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு நான்கு கிலோமீட்டர் தூரமிருக்கும்.  போகும் போதும் திரும்பும் போதும் நடக்கும் அலுப்பு தெரியாமல் இருக்க பலவித விளையாட்டுகள் எங்களிடையே உண்டு. அப்படி ஒருநாள் மாங்கொட்டையை உதைத்தடித்து விளையாடிக்கொண்டு வருகிறோம். சட்டடென பிசகி மாங்கொட்டைக்குப் பதிலாக தரையை உதைத்துவிட்டிருக்கிறேன், உதைத்த வேகத்தில் வலதுகால் பெருவிரல் நகம் பெயர்ந்து தொங்குகிறது. நகக்கண் என்று சும்மாவா சொன்னார்கள், உடல் முழுக்க காயமாகிவிட்டதுபோல அப்படியொரு வலி. ரத்தமும் கண்ணீரும் வழிந்தோட நொண்டியபடியே வீடுவந்து சேரும்போது இருட்டிவிட்டது. ‘‘கண்ணு என்ன பொடனியிலியா இருக்கு, ரோட்டப் பாத்து நடந்தாத்தான?’’என்கிற வாழ்த்துரை முடிந்த பின் வைத்தியப் படலம் தொடங்குகிறது. 

    மாநிலம் முழுக்க ரோடு போடும் வேலைக்கும் ஜல்லி உடைப்புக்கும் ஆட்களை கேங் சேர்த்து அழைத்துப்போகும் கொத்துக்காரியான எங்கள் தாத்தம்மா ஓரிடத்தில் வேலை முடிந்து வேறிடத்தில் வேலை தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் வீட்டில் வந்து தங்கும். நான் நகத்தைப் பெயர்த்துக் கொண்டு வந்த அன்றைக்கும் அப்படி வீட்டில் இருந்தது. பாறை, ஜல்லிக்கல், தார், சம்மட்டி,  கொட்லான் (சுத்தி), கடப்பாரை, பிக்காசு எனப் புழங்கி வேலைக்களத்தில் எத்தனையோ காயங்களைப் பார்த்திருக்கும் தாத்தம்மா, உலகத்திலேயே முதல்முதலாக தன் பேரனுக்குத்தான் நகம் பெயர்ந்திருக்கிறது என்பதைப்போல பதறிப்போய் வைத்தியத்தில் இறங்கிவிட்டது. 

    இருட்டிலேயே கட்டாந்தரைக்குப் போய் மாட்டுச்சாணத்தை எடுத்துவந்து நெருப்பிலிட்டு இளஞ்சூட்டுப் பதத்தில் எடுத்து வைத்துக்கொண்டு தாத்தம்மா என்னைக் கூப்பிட்டது. என்னை அருகில் உட்காரவைத்து காயம்பட்ட காலை தனது மடிமீது நீட்டச் சொன்னது. பெயர்ந்துள்ள நகத்தை விரலோடு அழுத்திப் பிடித்து அதன் மீது இளஞ்சூட்டிலான சாணத்தைப் பூசி பத்துபோட்டுவிட்டால் நச்சு வைக்காமல் காயம் சீக்கிரம் ஆறிவிடுமாம். (‘அதுக்கென்ன ஆதாரம்?’னு  கேட்டேன் என்று இந்த இடத்தில் ஒரு வரியை எழுதி நானெல்லாம் அப்போதிருந்தே பகுத்தறிவோடு இருந்தேன் என்று பொய்யாக பில்டப் செய்வதை தவிர்த்திருக்கும் எனது நேர்மையை பாராட்டாதவர்களுக்கு பெருவிரல் நகம் பெயரட்டும்) காற்று பட்டாலே கண்கலங்கும் அளவுக்கு வலியில் இருந்த எனக்கு நகத்தை அழுத்திப் பிடித்து அதன்மீது சூடான சாணத்தைப் பூசும் அந்தக் கணத்தின் வலி எவ்வளவு கொடியதாய் இருக்கும் என்று யோசித்ததுமே உதறலெடுத்துவிட்டது. வேணாம், வலிக்கும் என்கிறேன். வலிக்காம பூவாட்டம் பூசியுடறேன், காலை நீட்டு சாமி என்கிறது தாத்தம்மா. அப்படித்தான் சொல்லும், ஆனால் அழுத்திப் பிடித்துவிட்டால் வலியை யார் தாங்குவது என்கிற பயம். 

    அடுப்பெரிகிற வெளிச்சம் அப்படியொன்றும் பிரகாசமாக இல்லை. கிட்டத்தட்ட இருட்டுதான் என்கிற அந்த நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு அடிபட்டிருந்த வலது காலுக்கு பதிலாக அடிபடாத இடது காலை நீட்டிவிட்டேன். எனது ஏமாற்று வேலை தெரியாத தாத்தம்மா உண்மையிலேயே பூவாட்டம் தடவி தடவி அடிபடாத காலுக்கு சாணிப்பத்துப் போட்டுவிடும்போது நானோ ஆஊன்னு கொஞ்சம் அனத்தி நடிப்பை மெயின்டன் பண்ணி சமாளித்து விட்டேன். தப்பிச்சம்டா சாமின்னு நினைத்த அந்த நொடியில் காலில் நகம் பெயர்ந்திருந்த வலிகூட மறந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அந்த நிம்மதி அடுத்த நொடியே குலைந்தது. ‘நகம் கூடறதுக்குள்ள மறுபடியும் ஆடிட்டு திரியாதே’ என்று செல்லமாக கடிந்தபடியே சாணிப்பத்து போடாத வலது காலின்மீது லேசாக ஒரு தட்டு தட்டி ‘எழு’ என்றது தாத்தம்மா. அய்யோ அம்மான்னு கத்திக்கதறி கூப்பாடு போட்டு அம்பலப்பட்டுப் போக அப்படி லேசாக தட்டியதே போதுமானதாயிருந்தது. பிறகென்ன, எது நடக்கக் கூடாதென்று பயந்தேனோ அந்த விபரீதம் நடந்தேவிட்டது. ‘அந்தக் கால்ல தானே காயம்? இந்தக் காலை தட்டினதுக்கு எதுக்கு கத்துனே, இதிலயும் காயமா, இங்க காட்டு’ என்று பிடித்துக்கொண்டது தாத்தம்மா. வீட்டுக்குள்ளிருந்த விளக்கைக் கொண்டுவரச் சொல்லி எனது கள்ளத்தனத்தைக் கண்டுபிடித்தப் பிறகு அதற்கு ரெண்டு இழுப்பு முதுகில். போதாதற்கு நகம் பெயர்ந்த ஒரிஜினல் பெருவிரலுக்கு முரட்டு வைத்தியம். 

    வாழை படத்தில் முள் குத்திவிட்டதாக பொய் சொல்லும் சிறுவனுக்கு ஊதாங்குழல் ஒத்தடம் கொடுக்க அவனது அம்மா வரும்போது அவன் முழிக்கும் முழி இருக்கே... எங்க தாத்தம்மாவிடம் மாட்டிக்கொண்ட எனது சாயல் அவனுக்கிருந்தது. 

(இன்னும்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாணிப்பத்தும் ஊதாங்குழல் ஒத்தடமும் - ஆதவன் தீட்சண்யா

     எங்கள் வீட்டிலிருந்து பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு நான்கு கிலோமீட்டர் தூரமிருக்கும்.  போகும் போதும் திரும்பும் ...