செவ்வாய், ஆகஸ்ட் 19

மிபூ - ஆதவன் தீட்சண்யா

 


ஓவியம்: அரஸ், நன்றி: ஆனந்தவிகடன், 31.08.2025

மிதமான வெப்பத்துடன் தகதகவென சுடர்ந்துகொண்டிருந்த சூரியன் மறைந்து கொண்டிருந்தது. சற்றைக்கெல்லாம் தண்ணென்று ஒளிர்ந்தபடி மேலெழுந்து வந்தது நிலவு. கண்ணுக்கு இதமான அந்த ஒளியே தொட்டுத்தழுவது போல குளிர்ந்தக் காற்று எங்கும் பரவியது. மிபூ என்னும் அந்தக் கோளத்தின் மக்களாகிய மிபூக்கள் ஓய்வுக்கும் உல்லாசத்திற்கும் சற்றே உறக்கத்திற்குமாக ஒவ்வொரு நாளிலும் ஒதுக்கி வைத்திருக்கும் நேரம் அப்போதிருந்து தொடங்கிவிட்டது.     

தெருக்கள் குழந்தைகளின் விளையாட்டு மைதானங்களாய் மாறியிருந்தன. உற்சாகத்தில் பீறிடும் அவர்களது சிரிப்பும் கும்மாளச் சத்தங்களும் இரவின் ஒலிபோல கேட்கிறது. கடற்கரைகளும் பூங்காக்களும் காதலர்களின் கொஞ்சுமொழியால் கிறங்கித் தவித்தன. கலைஞர்கள் வெட்டவெளிகளிலும் அரங்குகளிலும் பாடியும் இசைத்தும் நடித்தும் நடனமாடியும் சூழலை பரவசமாக்கிக் கொண்டிருந்தனர். நேயர்களின் ஆரவாரம் வேறு எங்கெங்கோ இருந்தவர்களையும் அங்கு வரும்படி இழுத்தெடுத்து வந்து ஆடவைத்தது. கொஞ்சம்பேர் வீட்டின் முற்றங்களில் சாய்ந்து இரவுச்சூரியனின் குளிர்மையில் தோய்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். பசித்தபோது ஆங்காங்கே இருந்த பொது உணவகங்களில் ஏதேனுமொன்றுக்குப் போய் அங்கு ரோபோசெஃப்கள் சமைத்துத்தரும் வகைவகையான உணவுகளிலிருந்து தேவையானவற்றை உண்டு பசியாறினர். அளவுக்கட்டுப்பாடு ஏதும் இல்லையென்றாலும் மிபூக்களுக்கு குறைவான மதுவே போதுமாயிருந்தது.      

உறக்கம் என்பதையே அறிந்திராதவர்கள் போல மிபூக்கள் இரவுநேரக் கொண்டாட்டங்களில் திளைத்திருந்த அவ்வேளையில் யாரும் எதிர்பார்த்திராத வண்ணம் கோளதிர ஒலிக்கத் தொடங்கியது ஆனந்த மணி. மகிழ்ச்சிக்குரிய நற்செய்திகளைக் கேட்க மக்களை ஆயத்தப்படுத்தும் அந்த மணி ஒலிப்பது மிபூ வரலாற்றில் இதுவொன்றும் முதல்முறையல்ல. நினைவுக்கெட்டாத நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே தலைமுறை தலைமுறையாக அது சமையலறை ஒழிப்பு – பொது உணவுக்கூடம், கட்டணமில்லா மருத்துவம், கட்டாயக்கல்வி, சீரான வேலைவாய்ப்பு என்று எத்தனையோ நற்செய்திகளைச் சொல்வதற்காக அவர்களை அழைத்திருக்கிறது. கடைசியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒலித்தபோது குழந்தைகள் கற்பதுதான் முக்கியமே தவிர தகுதி திறமை என்கிற ஏமாற்றுத்தேர்வுகள் அவசியமில்லை என்று அரசு அறிவித்தது. அதற்கும் முந்தைய அழைப்பில், அதிரடியாக ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் சோபெ வரவு வைக்கப்பட்டிருக்கும் செய்தி அறிவிக்கப்பட்டது. சரக்கு மற்றும் சேவைவரி ரத்து, சுங்கச்சாவடி மூடல், புழக்கத்திலிருக்கும் பணநோட்டுகளை செல்லாதது என அறிவிப்பதற்கு நிரந்தரத் தடைவிதிக்கும் அரசியல் சட்டத்திருத்தம், வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் என்று ஆனந்த மணியோசைக்குப் பின்னே வந்த அறிவிப்புகள் ஒன்றா இரண்டா?   

இன்றைய அழைப்பு எதற்கானதாக இருக்கும் என்று யூகிக்கும் குறுகுறுப்பில் மிதமிஞ்சிய கற்பனையில் மிபூக்கள் மிதந்துகொண்டிருந்த அவ்வேளையில் மிபூ கோளாளுமன்ற வளாகம் பரபரப்பின் உச்சத்திலிருந்தது. இவ்வளவு அவசரமாக இந்த அகாலத்தில் அறிவிக்கும் நற்செய்தி என்னவாக இருக்கும் என்கிற குழப்பத்தில் கோளாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஹெலிகார்களில் பறந்து வந்திறங்கி கூட்ட அரங்கிற்கு விரைந்தனர். கோளாளுமன்றத்தின் நடவடிக்கைகளை நேரலை ஒளிபரப்பில் காண்பதற்காக மிபூக்கள் தகவல் தொடர்பு தொடுதிரையான உள்ளங்கையை உயிர்ப்பித்து உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். கையடக்கத் திரையில் பார்க்க விரும்பாதவர்களுக்காக ஆங்காங்கே வெட்டவெளியில் ஒளிரத் தொடங்கின அகன்ற மெய்நிகர் திரைகள். 

அமைச்சர்களும் மன்ற உறுப்பினர்களும் ஆர்வம் மேலிட காத்திருக்கும் கூட்ட அரங்கிற்குள் மிகுந்த உற்சாகத்துடன் நுழைந்தார் கோளரசுத்தலைவர் நீனெல். மிபூக்களின் வரலாற்றில் முன்னெப்போதும் கேள்விப்பட்டிராத ஒரு செய்தியை அறிவிக்கும் மகத்தான வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பது குறித்த பெருமிதம் அவருடைய முகத்தில் பிரகாசித்தது.  

“அடியும் முடியுமறியாத இந்த அண்டவெளியில் மிபூ என்கிற நம் கோளம் மட்டுமே உயிரினங்கள் வாழத் தகுதியானது என்று இதுகாறும் நம்மிடையே நிலவிவந்த பத்தாம்பசலியான கருத்தை விட்டொழிக்க வேண்டிய நற்தருணம் வந்துவிட்டது. அண்டவெளியில் சுழன்றுகொண்டிருக்கும் நம்முடைய ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளர்கள், நமது மிபூவைப் போலவே உயிரினங்கள் வாழும் சூழமைவு கொண்ட கோள் ஒன்று நம்மிடமிருந்து 1,127 லட்சம் கோடி கிலோமீட்டர் அருகாமையில் இருப்பதை சற்றுமுன் கண்டுபிடித்திருக்கிறார்கள். மிபூவை விட இரண்டரை மடங்குச் சிறியதான அந்தக் கோளுக்கு அவர்கள் – மிபூவை தலைகீழாக்கி - பூமி என்று பெயரிட்டிருக்கிறார்கள். தங்களது ஆய்வின் எல்லையை விரிவுபடுத்தியதன் மூலம் மிபூவின் எல்லையை பல லட்சம் கோடி கிலோ மீட்டர்களுக்கு அப்பாலும் விரிவுபடுத்தியுள்ள நமது ஆராய்ச்சியாளர்களுக்கு மிபூக்களாகிய நாம் கடமைப்பட்டுள்ளோம். அவர்களுக்கு நமது பாராட்டுகள்..” 

–நீனெல் இப்படி அறிவித்ததும் அமைச்சர்களும் உறுப்பினர்களும் மட்டுமல்ல, அவை நடவடிக்கையை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த மிபூக்கள் அனைவருமே எழுந்து நின்று கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.   

** 

மிபூவைப் போலவே காற்றும் ஒளியும் தண்ணீருமுள்ள பூமி என்கிற அந்த இன்னொரு கோளும் சேர்ந்து மிபூக்களின் நிலப்பரப்பு விரிவதைப் போன்ற கனவு இப்போதெல்லாம் நீனெலுக்கு அடிக்கடி வந்து அவரை திக்குமுக்காடச் செய்தது. அந்தப் பரவசத்தில், ஆராய்ச்சியாளர்கள் பூமியை நெருங்கிப்போய் கவனிக்கத் தோதாக விண்வெளி ஆய்வகத்தை நவீனப்படுத்துவதற்கு தாராளமாக பெருந்தொகையை ஒதுக்கினார். அண்டவெளியை ஊடுருவிப் போய் பூமிக்கு நேர் மேலாக நீள்வட்டப்பாதையில் நிலைநிறுத்தி தகவல் சேகரிக்கும் விண்வெளி தொலைநோக்கி ஒன்றை ஏவியிருந்தனர் ஆராய்ச்சியாளர்கள். அவர்கள் அல்லும்பகலும் அயராது ஆய்வுசெய்து பூமியைப் பற்றி திரட்டும் அரிதான பல தகவல்களை அறியும் ஆர்வம் மிபூக்களிடையே வேகமாக பரவிக் கொண்டிருந்தது. 

இதே வேகத்தில் ஆய்வுகள் நடக்குமானால் இன்றில்லாவிட்டாலும் இன்னும் சில ஆண்டுகளில் பூமிக்குச் சென்றுவரும் நிலைமை உருவாகிவிடும் என்கிற நம்பிக்கை நாளுக்குநாள் அதிகரித்தது. மிபூக்களின் இந்த ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் விதமாக ஒரு நிறுவனம் “பூமிக்குப் போய்வருவோம்” என்கிற பெயரில் இன்பச்சுற்றுலாவுக்கு மாதாந்திரச் சேமிப்புச்சீட்டு கட்டும் திட்டத்தை அறிவித்தது. போக்குவரத்து, சாப்பாடு, தங்குமிடம், பூமியின் முக்கிய இடங்களைச் சுற்றிக்காட்டுவது, பயணத்திற்கு உடலையும் மனதையும் தகவமைக்கும் பயிற்சி வகுப்பு ஆகியவற்றுக்கென அந்நிறுவனம் அறிவித்ததைவிடவும் சற்றே குறைந்த தொகையில் “பூமிக்குப் பொன்னுலா” என்னும் மலிவான திட்டத்தை மற்றொரு நிறுவனம் அறிவித்தது. எங்கு பார்த்தாலும் பூமியைப் பற்றிய பேச்சாகவே இருப்பதைப் பார்த்து உற்சாகமடைந்த நிலத்தரகு நிறுவனம் ஒன்று “இனி பூமியிலும் உங்களுக்கொரு வீடு!” என்னும் ஈர்ப்பான முழக்கத்துடன் களமிறங்கியது. அது “மிபூவுக்கு வெகு அருகில், பூமியில் உங்களது ஓய்வுக்காலத்தை இனிதே கழிக்க இப்போதே முதலீடு செய்யுங்கள்” என்று சொல்லி முன்பதிவுத் திட்டத்தைத் தொடங்கி தவணை முறையில் வசூலிலும் இறங்கிய போதுதான் கோளரசுத் தலைவர் நீனெலுக்கு விபரீதம் உறைத்தது. பூமியைப் பற்றிய ஆய்வுகள் முழுமையடையாத நிலையில் ஆர்வக்கோளாறில் அரைவேக்காட்டுத்தனமாக அறிவிக்கப்படும் எந்தவொரு திட்டத்தையும் யாரும் ஆதரிக்க வேண்டாம் என்று உடனடியாக அறிக்கையின் மூலம் மக்களை அவர் எச்சரிக்க வேண்டியதாயிற்று. ஆனாலும் ஆய்வுகளை துரிதமாக முடித்து உண்மை நிலையைச் சொல்ல வேண்டும் என்கிற கோரிக்கை மக்களிடையே வலுத்தது. இந்தக் களேபரங்களுக்கு விரைந்து முடிவுகட்ட வேண்டும் என்கிற பதைப்பில் விண்வெளி ஆய்வகத்திற்கு தானே நேரில் சென்று ஆய்வுநிலவரத்தை மேற்பார்வையிட விரும்பினார் நீனெல். 

மிபூ வரலாற்றில் விண்வெளி ஆய்வகத்திற்கு கோளரசுத்தலைவர் நேரடியாக வருவது இதுவே முதல்முறை என்பதால் ஆராய்ச்சியாளர்கள் அவரை விமரிசையாக வரவேற்றார்கள். அவர்கள் தங்களுடையதைப் போன்ற பிரத்யேகச் சீருடையை அவருக்கு வழங்கி அணியவைத்தபோது அவர் இந்தப் பொருத்தமற்ற அலங்காரத்தில் தான் கேலிக்குரியவனாகிவிட்டதைப் போல உணர்ந்தார். என்றாலும் அது அங்குள்ளவர்களின் ராஜ்ஜியம், அங்கு அவர்கள் சொல்படி நடப்பதே சரியென்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டு அவர்களோடு சேர்ந்து மிதந்தபடியே ஆய்வகத்தின் அதிரகசிய அறைக்குள் நுழைந்தார். 

அண்டசராசரத்தில் பல லட்சங்கோடி ஒளியாண்டுகள் தொலைவில் சுழலும் கோள்கள் பலவற்றையும் தொலைநோக்கியில் கண்டபோது அவருக்கு கலைடாஸ்கோப்பில் கண்குவித்துப் பார்த்தக் காட்சிகளும் வினோதமான சிறுவயதுக் கனவுகளும் நினைவுக்கு வந்தன. இவ்வளவு அதிசயங்களைக் கொண்டதா இந்த அண்டவெளி என்கிற ஆச்சர்யத்தில் திகைத்துப் போனார். அந்தக் கணமே ஓடிப்போய் மிபூவின் குழந்தைகள் அனைவரையும் கூட்டி வந்து இந்த அதிசயங்களைக் காட்டவேண்டும், அவர்கள் அடையும் ஆனந்தத்தைக் காணவேண்டும் என்று அவர் மனம் பரபரத்தது. காட்சியின்பத்தில் திளைத்திருந்த அவரை ஒருவாறாக சமநிலைப் படுத்திய ஆராய்ச்சியாளர் குழுவின் தலைவர், தொலைநோக்கியை துல்லியமாக பூமியின் மீது நிலைகுத்தி நிறுத்தி நீனெல் காணும்படி செய்தார். நீனெலிடம் பகிர்வதற்கென அவர்கள் திரட்டி வைத்திருக்கும் தகவல்களால் அவர்களது மனம் தளும்பித்தளும்பி உடைந்துவிடுவது போலிருந்தது.

விண்வெளி ஆய்வகத்தை மேற்பார்வையிட்டுவிட்டு தரையிறங்கிய கோளரசுத்தலைவர் நீனெலை மிபூக்கள் கட்டுக்கடங்காத உற்சாகத்துடன் வரவேற்றார்கள். பூமியைப் பற்றி அவர் அறிந்துவந்துள்ள புதிய செய்திகளைக் கேட்க அவர்கள் வெகுவாக ஆவல் கொண்டிருந்தனர். ஆனால் அவரோ அந்தக் கொண்டாட்டங்கள் எதிலும் பங்கெடுக்காமல் அவசரமாக அமைச்சரவையைக் கூட்டியிருந்தார். 

அமைச்சரவைக் கூட்ட அரங்கின் விளக்குகள் அணைக்கப்பட்டு அகன்ற திரை உயிர்ப்பிக்கபட்டது. விண்வெளி ஆய்வகத்திலிருந்து நேரடியாக ஒளிபரப்பாகும் காணொளியை அமைச்சர்கள் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அண்டத்தில் கொசகொசவென ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள், விண்கலங்கள், விண்வெளி ஆய்வகங்களுக்கிடையே சுழன்றுகொண்டிருக்கும் அந்தக் கோளம் தான் பூமி என்ற வாசகம் திரையில் தெரிந்ததுமே அமைச்சர்கள் உற்சாகமிகுதியில் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அண்டவெளியில் அந்தரத்தில் ஒரு அச்சின்மீது பொருத்தப்பட்டது போன்ற ஒழுங்கில் அது சுழலும் அழகைப் பார்க்கப்பார்க்க அவர்களுக்கு வியப்பாக இருந்தது. மேகமண்டலத்தை ஊடுருவி பூமியைக் கீழ்நோக்கிப் பார்த்துக் குவியும் நுண்ணோக்கியில் பிடிபடும் காட்சிகள் சட்டென திரையில் விரிகிறது. இன்னும் குவிந்து பூமியைக் கிட்டத்தில் காட்டும்போது அவர்களால் பூமியின் தரையைத் துல்லியமாக பார்க்க முடிந்தது.    

காணொளிக் காட்சியை இடைநிறுத்தி “இனிமேல் வரும் காட்சிகள், நம்மோட ஆராய்ச்சியாளர்கள் குழு பறக்கும் தட்டுகள் மூலமா பூமிக்கு நேரடியா போய் அங்கேயே பதுங்கியிருந்து படமாக்கி கொண்டுவந்தவை” என்கிற முன்னறிமுகத்தை நீனெல் சொன்ன பிறகு திரையிடல் தொடர்ந்தது. 

திரையிடல் முடிவடைந்து அரங்கின் விளக்குகள் எரியவிடப்பட்ட பிறகும்கூட அமைச்சர்கள் இயல்புக்குத் திரும்பாமல் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். ஒட்டுமொத்த அமைச்சரவையுமே வாயடைத்துப் போயிருந்த்து. அந்த மெளனத்தை உடைக்கும் விதமாக அறிவியல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் “உயிரினங்கள் வாழத்தகுந்த சூழமைவு இருக்கிறதா சொன்னப்பவே அங்க மரம், செடி கொடி, புல் பூண்டு, புழு பூச்சி, விலங்கினங்கள் இருக்கும்னு நான் யூகிக்கத் தான் செஞ்சேன். ஆனா இதுங்க எல்லாத்தையுமே வேட்டையாடுற “மனிதர்கள்”னு ஒரு விலங்கினம் அங்கு கடைசியா வந்து சேர்ந்திருக்கும்னு நான் நினைச்சிருக்கல” என்று விவாதத்தைத் தொடங்கி வைத்தார். 

அவரை குறுக்கிட்ட கோளரசுத்தலைவர் நீனெல் “அவங்களோட வேட்டை வெறிக்கு உயிரினங்கள் மட்டுமே பலியானதா நினைச்சுக்காதீங்க.  மலைகள், ஆறுகள், கடல்கள், காற்று எதுவும் தப்பல. பென்னம்பெரிய மலைகளையெல்லாம் வெடி வச்சு சிதறடிச்சிருக்காங்க. ஆறு கடல் ஏரின்னு நீர்நிலைகள் மொத்தத்தையும் மாசுபடுத்தி பாழடிச்சிருக்காங்க. ஆகாயத்தயும் கூட அவங்க விட்டு வைக்கல. நீங்களே பார்த்தீங்க தானே எங்கு பார்த்தாலும் எவ்வளவு செயற்கைக்கோள்கள்.. விண்வெளி ஆய்வுக்கூடங்கள்….”    

அமைச்சர்களின் கவலை தோய்ந்த முகங்களைப் பார்த்தபடியே தொடர்ந்த நீனெல், “பூமியில் இருக்கிறதையெல்லாம் அழிக்க ஆரம்பிச்ச அவங்க இப்போ பூமியவே பலமுறை அழிக்கக்கூடிய ஆயுதங்களை வச்சிருக்காங்க.  புதுப்புது ஆயுதங்களை அன்னாடம் கண்டுபிடிச்சிக்கிட்டே இருக்காங்க.” என்றார். அவரிடம் கேட்பது போன்றோ தனக்குள்ளேயே அங்கலாய்த்துக் கொள்வது போன்றோ குறுக்கிட்ட மூத்த அமைச்சர் ஒருவர் “ஆயுதங்களை கையில வச்சிக்கிட்டு எப்படி அமைதியா இருக்கமுடியும்?” என்று கவலை தெரிவித்தார். அதற்கு நீனெல் “உங்களோட கணிப்பு சரிதான்.” என்றார். 

அப்போது “இந்தப் பேச்சை இத்தோட நிறுத்துங்க” என்று சீற்றத்துடன் எழுந்தார் குழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர். “போர், மோதல், கொலை, சாவு, ரத்தம், பஞ்சம் பட்டினி, ஓலம், அலறல்… அப்பப்பா, திரையில பாத்ததுக்கே உடம்பும் மனசும் பதறுதே, அந்த அவலத்துக்குள்ளயே மனுசங்க எப்படி வாழுறாங்க? குழந்தைகளையும் கூட சித்ரவதை செய்து கொல்வதை வெற்றினு கொண்டாடுற அந்த மனுசங்கள பத்தின ஆராய்ச்சிய இத்தோட நிறுத்திக்குவோம்” என்றார் நடுங்கும் குரலில். 

அவரை ஆசுவாசப்படுத்திய நீனெல் “800 கோடிபேரா இருக்குற அவங்க மனிதர்கள்ன்ற ஒரு அடையாளத்தோட ஒற்றுமையா இல்லை. பாலினம், நாடு, இனம், மதம், சாதி, வர்க்கம்ன்னு பலவாறா பிளவுபட்டு பகையேறிக் கிடக்குறாங்க. யார் மேலானவங்க- புனிதமானவங்கன்னு ஓயாத சண்டை. இயற்கையா சாகுறதே அங்கே பெரிய கொடுப்பினை தான். அந்தளவுக்கு வெறுப்பும் வன்முறையும் உயிரழிப்பும்” என்றார்.   

“அவங்க வாடை பட்டால்கூட நம்ம மிபூ மாசடைஞ்சிடும்” என்று எச்சரிக்கும் குரலில் சொன்னார் உள்துறை அமைச்சர். வேறு சில அமைச்சர்களும் தங்களது அச்சத்தை கருத்தெனச் சொல்லி முடித்தப் பிறகு எழுந்த நீனெல் “இதுவரைக்கும் நீங்க பார்த்ததைவிடவும் படுபயங்கரமான ஒரு விசயம் இருக்கு” என்கிற பீடிகையுடன் ஆரம்பித்த அவர் குரலில் இருந்த பீதி அமைச்சர்களுக்கும் பரவியது. என்ன சொல்லப்போகிறாரோ என்று அவர்கள் திகிலுடன் பார்த்தார்கள். 

‘உயிரினங்கள் வாழத் தகுதியான வேறு கோள்கள் இருக்கான்னு நம்மள மாதிரியே அந்த மனிதர்களும் ரொம்பநாளா ஆய்வு செய்துக்கிட்டு இருந்திருக்காங்க. அதுல ஒரு டீம் 1,127 லட்சம் கோடி கிலோமீட்டர் அருகாமையில நம்ம மிபூ இருக்கிறதை எப்படியோ இப்ப கண்டுபிடிச்சிருக்கு.  பூமியைவிட இரண்டரை மடங்கு பெரியதான மிபூவுக்கு அவங்க K2-18bன்னு பேரும்கூட வச்சிருக்காங்க. மிபூவுல என்னென்ன உயிரினங்கள் இருக்கக் கூடும்னு அடுத்தக்கட்ட ஆய்வுல அவங்க மும்முரமா இறங்கினா அது நமக்கு பேராபத்தைக் கொண்டு வந்துடும். புதிய கிரகத்துக்குப் போய்வர முடியும்னு ஆயிட்டா அங்கயிருக்குற கனிமவளங்களை வெட்டியெடுக்கிற கான்ட்ராக்டை தனக்கே  தரணும்னு இப்பவே தொழிலதிபர் ஒருத்தர் தனக்கு வேண்டிய ஒரு பிரதமர்கிட்ட கோரிக்கை வச்சதா பூமியில ஒரு செய்தி இருக்கு. எப்பாடு பட்டாவது அந்த மனிதர்கள்ட்டயிருந்து நம்ம மிபூவையும் மிபூக்களையும் நாம காப்பாற்றியாகணும். அதுக்குண்டான ஆலோசனைகளை சொல்லுங்க…”. 

அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவு எதுவாயினும் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்குவதை தன் பணிகளின் ஒருபகுதியாக கருதுபவர் நீனெல். எனவே கூட்ட அரங்கத்திற்கு வெளியே புல்தரையில் வெகுநேரமாக செய்தியாளர்கள் ஆர்வம் மேலிட காத்திருந்தனர். பொழுது புலரும் வேளையில் கூட்ட அரங்கிலிருந்து அமைச்சர்கள் புடைசூழ வெளியே வந்த நீனெல் “நாம் புதிய வரலாற்றுக்கட்டத்துக்குள் நுழைகிறோம். நமக்கு வெளியே மனிதர்கள் என்பவர்கள் இருப்பதாக கண்டறிந்துள்ளோம். மனிதர்கள் ஊடுருவும் ஆபத்தைத் தடுக்க மிபூ கோளத்தைச் சுற்றி மின்வேலி அமைக்கவிருக்கிறோம். தற்காப்புக்காக பூமியை நோக்கி கண்காணிப்பு ரேடார்களையும் ஆளில்லா ஏவுகணைகளை நிறுவப் போகிறோம்” என்று அமைச்சரவை முடிவுகளை விளக்கிக்கொண்டிருந்தார். இந்த அறிவிப்பினை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த விண்வெளி ஆய்வுக்கூடத் தலைவர் “இவ்வளவு சீக்கிரத்தில் நமக்கும் மனுசப்புத்தி தொற்றிக் கொண்டதே” என்று தலையிலடித்துக்கொண்டார்.  

1 கருத்து:

  1. சிறப்பு.
    பூமியை அழிக்கப்,
    பிறந்தவன் மனிதன்!
    பூமி தன்னைப்
    புதுப்பித்துக் கொள்ளும்
    மனிதன் தான்
    இருக்க மாட்டான்!

    பதிலளிநீக்கு

எதிர்பார்க்கும் வடிவத்தில் எதிரி இல்லை - ஆதவன் தீட்சண்யா

குறிப்பிட்ட கொள்கையை முன்வைத்து அதன்பொருட்டு ஒட்டுமொத்த சமூகத்தையும் ஈர்த்து தன்பக்கம் திரட்டிக்கொள்வதுதான் எந்தவொரு அரசியல் கட்சியின் விருப...