புதன், ஜனவரி 25

இன்னும் இருக்கும் சுவர்களின் பொருட்டு... - ஆதவன் தீட்சண்யா

சுவற்றின் இந்தப் பக்கம் இருக்கும் என்பெயர் மனிதன்
அந்தப்பக்கம் யாரும் இருக்கிறீர்களா?

விடையிறுக்கப்படாத இந்தக் கேள்வியை எழுப்பியபடி
நானொருவன் எத்தனைக்காலம்தான் காத்திருப்பது?
உங்களில் ஒருவருக்கேனும் எனது குரல் காதில் விழுகிறதா?

என்னோடு உரையாடுவதை தவிர்த்துக்கொள்ளும் பொருட்டு
உங்களது குரல்வளையை
நீங்கள் இன்னும் அறுத்துக்கொள்ளாதிருக்கும் பட்சத்தில்
மறுமொழி சொல்லுங்கள் யாரேனும்

குலுக்குவதற்கு நீட்டப்பட்டிருக்கும் எனது கரங்கள் மரத்துப்போய்
தானே தொய்ந்துவிழ வேண்டுமென்று
காலந்தாழ்த்தும் தந்திரத்தை கைக்கொண்டிருக்கிறீர்களா
அல்லது,
இதோ நானிருக்கிறேன் என்று பதில்கூற
யாருமேயில்லாத பாழ்வெளியாய் கிடக்கிறதா அந்தப்பக்கம்?

சுவர் உங்களைக் காப்பதாய் சொல்லிக்கொண்டு
சுவற்றை நீங்கள் காக்கும் இழிகாலத்தில்
எந்தப்பக்கம் இருப்பவர் யார் என்ற வழக்கில்
இப்போது எழுதப்பட வேண்டியது தீர்ப்பு மட்டுமேயாதலால்
சுவற்றின் இந்தப் பக்கம் இருக்கும் என்பெயர் மனிதன்
அந்தப்பக்கம் யாரும் இருக்கிறீர்களா?
உஸ்பார் கொய் ஹை க்யா?
ஆக்கடே யாரு இதாரே?
திக்கடெ பாஜூ கோன் ஆஹே...?
அக்கட எவுரு உண்ணாரு? 
அப்பக்கம் ஆரெங்கிலும் இண்டோ?
எனிபடி ஈஸ் தேர்?

செவ்வாய், ஜனவரி 24

கண்ணுக்குக் கண் - ஆதவன் தீட்சண்யா

குளிர்ந்த தடாகத்து பூவுள் வாசமாக
மெல்ல ஆழ்கிறேன் சாந்தத்தில்

யார்மீதும் புகாரற்று விடிகிறது பொழுது

சேகேறிய மரத்தின் கிளைகளாய் விரிந்தோடி
பிரபஞ்சத்தையே தழுவ நீளும் என் கரங்களை
தோள்பட்டையிலிருந்து தசைகிழிய முறித்து
பின்புறமாய் நெறித்துக் கட்டிய
ஜென்மாந்திர எதிரிகளிடம் புன்னகைக்கிறேன்

ரோஷங்கெட்டவனென்று கெக்கலிக்கின்றனர் அவர்கள்

இயல்பாய் புன்னகைப்பதும்
வலிந்து கெக்கலிப்பதும்
அனிச்சையாகிவிடுகிறது பகல் இரவுபோல

ரத்தமல்லாத வேறொன்றாய்
உள்ளிருந்து முடுக்கும் வன்முறையில்
அவர்களே
அவர்களுக்குத் தளைபூட்டித் தவித்த பின்னொருநாளில்
மதில்தாண்டி விடுவிக்கப்போன என்னிடம்
புன்னகையோ கெக்கலிப்போ மிஞ்சியிருக்கவில்லை
நானும் அவர்களும் இல்லாததைப்போலவே.

ஞாயிறு, ஜனவரி 22

விசை - ஆதவன் தீட்சண்யா

றக்கக் கலக்கத்தில்
அரற்றும் குழந்தையை
அப்புறம் கொஞ்சலாமே

தாலியோடு
தளைகளையும் சேர்த்துத்தானே கட்டியிருக்கிறாய்
பத்திரமாயிப்பாள் மனைவியும்

பெற்றெடுத்த கிழங்களுக்கு
பிள்ளையுன் முகம்
மறந்துவிடுமா என்ன

வா
மேசையைத் துடை
இருக்கையை இழுத்துச் சீராக்கு
சித்ரகுப்த பேரேடுகளைப் புரட்டு
வருகிறவர்களிடம் "வள்ளென' விழு
தருகிறவர்களிடம் இளி
கொஞ்சமாய் நெளி

போ
உறங்கும் உன் குடும்பத்தை
ஓசையிட்டு எழுப்பிவிடாமல்
அதிகாரியின் அறைக்குள்
நுழைவதான எச்சரிக்கையில்
வீட்டுக்குள்

புழக்கடையில் கவிழ்த்த குழம்புச்சட்டியை
முகர்ந்துபார்க்கும் நாயென
எல்லோரது சுவாசத்தையும் உறுதி செய்
கனவுகள் ஏதுமின்றி
கட்டையெனத் தூங்கு

யாரும் எழுமுன்னே
ஓடு

ஓடாதே
நில்

பேனா
டை
ஷு
கோவணம்
நுனிநாவின் ஆங்கிலம்
அனைத்திலும் கவனம் கொள்

உறக்கக் கலக்கத்தில்
அரற்றும் குழந்தையை
திரும்பியும் பார்க்காதே

அப்புறம் கொஞ்சலாமே
சம்பாதித்து முடித்துவிட்டு
சாவகாசமாய்.

வெள்ளி, ஜனவரி 20

பாரத்மாதா கீ ஜே... மற்றும் ஜெ... ஆதவன் தீட்சண்யா

வியாழனில் நேர்ப்பட்ட விண்வெளி வீரனொருவன்
எந்த கிரகமென்றான் ஆங்கிலத்தில்
பூமியென்றதும் பொங்கவிட்டான் அன்பை

நாட்டின் பெயரைச் சொன்னதும்
நாமிருவரும் ஒரேதாயின் புதல்வர்கள் என்றான் இந்தியில்
பாராயணம்போல்
தனக்குள்ளே முணங்கிக்கொண்டான்
ஸம்ஸ்கிருதத்திலும்

மாநிலத்தை அறிந்ததும்
ஹோ... நானும் பச்சைத்தமிழன்தான்
ஊரெதுவென்று நெருங்கினான் வாஞ்சையோடு

ஒரே ஊர்க்காரர்களாயிருந்தும்
இத்தனைக்காலமும் சந்திக்காததற்கு   அங்கலாய்த்தபடியே
கீழ்ஸ்தாயில்
வீடு ஊரிலா சேரியிலா என்று
அவனிழுத்த முரட்டுக்கோட்டுக்கு அப்புறத்தே
அம்பேத்கர் நகரென்ற பதிலோடு நானிருக்க
உரையாடும் பொதுவிசயம் ஒன்றுமில்லாமற் போனது அவனுக்கு
ஊரென்ற ஒன்று
எனக்கும் சொந்தமாய் இல்லாதிருப்பதைப்போலவே.

வியாழன், ஜனவரி 19

நியதி- ஆதவன் தீட்சண்யா

குழிக்குள் சவம்
குனிந்தேன் கடைசியாய் பார்க்க

பிணம் கெக்கலியிட்டது:
எனக்கேனும் இந்த இடம்
உனக்கு...?

ஆழத்தின் ஆழத்திலிருந்து இன்னொரு குரல்:
என்மீது யார் படுத்திருப்பதையும் அனுமதிக்கமுடியாது
எழுந்திரு

அச்சத்தில்
அவசரமாய் குழிதூர்த்து நிமிர்ந்தேன்
அதோ
மகனின் கொள்ளிச்சட்டியோடும்
கொள்ளுப்பேரன்களின் நெய்ப்பந்தங்களோடும்
பிணங்களின் நீளும் வருகை

அழவேண்டியிருக்கிறதே என்ற துக்கத்தில்
சுடலையின் எல்லையில் சில பெண்களும்

பாவம்
வெட்டியானுக்கும் மருத்துவச்சிக்கும்
விடுமுறையே கிடையாது.



புதன், ஜனவரி 18

முன்கூட்டியே - ஆதவன் தீட்சண்யா

யாரில்லை
விரல்களினிடத்தில்
முள் முளைத்தவர்களின் கை குலுக்க

வற்புறுத்தாதீர்
பொம்மைகள் ராஜ்யத்தில் பிரஜையாகும்படி

வேண்டாம்
 உங்களது உலைகளில் வடித்தெடுத்த முகமூடிகள்

மனமொப்பவில்லை
நீங்கள் நடந்த தெருக்களில்
நானும் கால்பதிக்க

கோபிக்காதீர்கள்
கழிவறைக்குள் உண்ணும்
உங்கள் விருந்துகளில் பங்கேற்காமைக்கு

பொறாமைப்படாதீர்கள்
நான் நானாகவே இருப்பதற்கு

மன்னியுங்கள்
எப்போதும் எதற்காகவும்
மன்னிப்பு கோராததற்காக

விட்டுவிடுங்கள் தனிமையில்
ஆதாமும் ஏவாளுமில்லாத
ஆதிச்சூன்யத்தில்

மறுபடியும் உருவாகிற அமீபாக்களாவது
மனிதர்களினும்
நல்ல உயிரிகளைத் தரலாம்

உங்களுக்கொன்றும்
இழப்பில்லை

எல்லோரது
கல்லறைகளுக்குமான
மலர்க்கொத்தை
முன்கூட்டியே
தந்துவிட்டுச் செல்கிறேன்.

செவ்வாய், ஜனவரி 17

ஓடுமீன் ஓட.... ஆதவன் தீட்சண்யா

டர்ந்திறங்கும் பனியில் யாவும் உறைந்து கிடக்கின்றன உருவழிந்து. விரைத்து மொன்னையாய் நிற்கும் கம்பங்களின் உச்சியிலிருந்து கிளம்பும் விளக்கொளி பனியில் நமுத்து பாதியிலேயே விழுகிறது நிழல்போல கறுத்து. ஆங்காரமாய் வீசும் காற்றில் குளிரின் கடுமை கூடி விஷமெனக் கடுக்கிறது.

கதகதக்கும் குளிராடைகளுக்குள் தூந்திரபிரதேச வாசிகளைப் போல் பதுங்கி, நிறைந்து மலிகிறது கூட்டம். சொந்த ஊருன்னு சுத்தி சுத்தி வந்தா ஒரு கவளச் சோறு வந்துடுமா என்று வித்தாரம் பேசி இங்கே வந்தேறியவர்கள் ஊர் பார்க்க ஓடுகிறார்கள். அப்பன், ஆத்தாள், உடன் பிறந்தாரை வசக்கி வயக்காட்டில் பூட்டிவிட்டு, படிப்பை துருப்புச்சீட்டாக்கி பட்டணம் புகுந்தவர்கள். இவர்கள் ஓடியோடி பார்த்துவருவது ஊர்தானென்றால் ஊர் என்பது என்னவென்ற கேள்வி எழுகிறது.

இங்கே வந்து இத்தனைக் காலமான பின்னும் சொந்த ஊர் மண் கொஞ்சூண்டு உள்ளங்காலில் ஒட்டியிருக்கும் போல. இல்லையானால், குளிக்கப்போன இடத்தில் மறந்து வைத்துவிட்டு வந்திருந்த நகை பற்றி பாதிவழியில் ஞாபகம் வந்தவர்களைப்போல இப்பிடி ஓடமாட்டார்களே. தாளிடையில் வைத்த மயிலிழை, குட்டி போட்டிருக்குமாவென்று தினமும் தூக்கத்திலேயே துழாவும் வசுக்குட்டியின் ஞாபகம் வருகிறது. தூங்குடா செல்லம்...அப்பன் தோ... இப்ப வந்துடறேன்...என்று காற்றிலேயே தட்டிக் கொடுக்கிறான் முருகேசன். கசிந்த ஈரம் மீசையில் படிகிறது திவலையாய்.

மின்னாம்பூச்சியாட்டம் சன்ன ஒளிகிளர்த்தி வந்தடையும் பஸ்கள் கூட்டத்தால் திணறி புகை கக்கி நகர்கின்றன. இதுமாதிரியான விசேஷ நாட்களின் முந்தியும் பிந்தியும் கூடுதல் ஏற்பாடுகள் தேவை. ஒவ்வொரு வண்டி கிளம்பும் போதும் ஆரவாரமும் கூச்சலும் வசவும் அலைபோல எழுந்து வலையாகி சுருட்டியது ஜனத்தை.

நைட்ஷிப்ட் முடித்தவர்களும் ஊருக்கு கிளம்பி வந்து குவிகிறார்கள். வேலையின் அலுப்பு ஊர்பற்றிய நினைவுகளில் அமிழ்ந்து விட்டிருந்தது. பஞ்சம் பிழைக்க பரதேசம் போவதாட்டம் குழந்தைகள், கிழடுகிண்டுகள் மூட்டை முடிச்சுகளோடு பின்னும் பெருத்தக் கூட்டத்தால் இருமலும் பொருமலுமாய் நிறைந்திருந்தது பஸ் நிலையம்.

குழந்தைகளின் பாடு பாவமாயிருந்தது. உறவாளிகளின் சகவாசம் முறிக்கும் முயற்சியாக பொம்மைகளை ரகசியமாய் அணைத்தப்படி தூங்கி விழுகின்றன. சனியனே, முழிச்சிக்கோ...பஸ்சுல தூங்கவே...என்று உலுக்கி சிடுசிடுக்கின்றனர் பெற்றவர்கள். கலைந்த கனவில், அநாதையாய் விடப்பட்ட தேவதைகளையும் பதினேழு கால் கொண்ட சாதுப்பூச்சியையும் நினைத்து கலங்குகின்றன சிலதுகள். நடுநிசியின் வினோதரூபத்தில் பரவசமுற்று கேள்வியெழுப்பும் குழந்தைகளுக்கு பொறுமையற்று பதில் கூறினர். கேள்விகள் சிக்கலாகி வலுக்கும்போதுகளில், சும்மா தொணதொணக்காதே என்று சலித்துக்கொண்டனர். கேள்விகளும் கனவுகளும் தம் பிள்ளைகளை நடைமுறை உலகிற்கு பொறுத்தமில்லாதவர்களாக ஆக்கிவிடுமோ என்ற பயம் பெருகி குரல் நடுங்கியது. சிணுங்கும் குழந்தைகளை மெல்லிய குரலில் மிரட்டவும், நாலு சாத்து சாத்தினாத்தான் சரிப்படுவே என்று கையோங்கவும் அவர்கள் தயங்கவேயில்லை.
குளிர்தாளாது வெடவெடக்கும் வயோதிகர்களை வாய்விட்டு கடியவும் அவர்கள் அதிகாரம் கொண்டோராயிருந்தனர். சற்றும் தேவைப்படாத சுமையோடு ஓடித் தொலைக்க வேண்டியுள்ளதே என்று பீறிய வெறுப்பிலும் தகிப்பிலும், வூட்லயே மொடங்கிக் கெடக்காம வயசான காலத்துல நமக்கு பாரமா...என்று காதுபடவே முனகினர்.

இப்படி பண்டிகை, விசேஷம்னு ஊர் போறப்பவாவது சொந்த பந்தங்களை பாத்துட்டு பொறந்து வளந்த மண்ணுலயே பொட்டுனு போயிடமாட்டமா... என்று பெரியவர்கள் ஒவ்வொரு முறையும் முயன்று தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள். சம்பாதிக்கும் பிள்ளைகளை நம்பி வேர்களை அறுத்துக் கொண்டு முண்டம்போல வந்துவிட்டமைக்காக அவர்களது உட்கண்கள் ஓயாது அழுதவண்ணமுள்ளன. கிராமத்திலிருந்து வந்தவர்களின் பாடுதான் திண்டாட்டமாதிவிட்டது.

பரந்தவெளியில் புழங்கிய வாழ்க்கையை, ரத்தம் சுண்டிய முதுங்காலத்தில் நாலு சுவற்றுக்குள் ஒடுக்கும் நகரத்தை நரகமென்றுணர்ந்து மருண்டனர். டவுன்னா அப்படித்தான் என்று எத்தனை சமாதானம் சொல்லிக்கொண்டாலும், சாப்பாட்டிலிருந்து ஜலவாதி வரை சகலமும் வீட்டுக்குள்ளேயே என்பது ஒவ்வாமல், சாப்பிடும் போதெல்லாம் குமட்டுகிறது. மூப்பினால் அஜீரணம் என்கின்றனர் வாலிபங்களும் வைத்தியர்களும்.

உயிரினொரு பாகம் ஊரிலேயே தங்கிவிட்டதான தவிப்பு பிடித்தாட்டியது பெரியவர்களை. ஊரம்பலத்திலும் கோயிலடியிலும் கூடி கலகலக்கும் கொண்டாட்டமெல்லாம் கனவுபோல் மெல்லியப் படலமாகி, கண்மேல் படர்ந்து கரைகிறது நீராக.

ஊரென்றால் பொழுதுபோக எத்தனையோ மார்க்கமுண்டு. வயலடிக்கு மடைதிருப்புவது, விழுந்த நெற்றுகளை பொறுக்குவது, கிணத்தோர வாய்க்காலில் திமிர்த்து வளரும் காஞ்சிரம் பூண்டுகளை பிடுங்குவது, கட்டாந்தரையை சுத்தம் பண்ணுவது என்று வேலைகள் பலதுமிருக்கு. எதுவுமில்லாத போது கோயிலடிக்குப் போனால் அங்கே நாள் பத்தாது. பயலுகள் ஆடுபுலி ஆட்டம், தாயம், அஞ்சாங்கரம், கோலி என்று ஆடாத ஆட்டமில்லை. வெயிலமரும் நேரங்களில் சின்னது பெரிசென்று கணக்கில்லாமல் கரம்பக்காடுகளை திமிலோகமாக்கிவிடுவார்கள். சில்லோடு வைத்து நொண்டியாடுவது, பாண்டியாட்டம், பல்லாங்குழி என்று பொண்டுகளுக்கும் ஆட்டத்துக்கு பஞ்சமில்லை. இங்கே நகரத்தில் என்ன இருக்கிறது... வெறிக்க வெறிக்க கட்டிடங்களைப் பார்த்து சோர்ந்துவிடும் கண்கள் தூக்கத்தில் விழு கின்றன.

குருவிகள் பழத்தை தின்றுவிட்டு விதைகளை வீசிவிட்டுப் போகின்றன. சடக்கென முளைவிட்டு கணப்போதில் செடி திமுதிமுவென்று வளர்ந்து தோள்மீறுகிறது. தழைத்த செடி பூமி முழுக்க கிளைபரப்பி பெரீய்ய மரமாகிப் படர்கிறது. ஊர்க்குழந்தைகள் அத்தனையும் ஆளுக்கொரு கிளையேறி தூரியாடுகிறார்கள். குரங்காட்டம், ஒளியாமட்டம், தொடுவாட்டம் என்று விளையாட்டாய் கழிகிறது வாழ்க்கை. சூரிய வெளிச்சம் பரவாதபடிக்கு பச்சைக்குடையாய் நிழல் பாவிய மரத்தடியில் கண்ணயர்ந்து கிடக்கிறார்கள் பெரியவர்கள். கெட்டவாடை போல் எங்கிருந்தோ வரும் சதியாளர்கள் அடிமரத்தில் குறிவைத்து கோடாலி வீசுகிறார்கள். பதறியெழும் பெரியவர்கள் மரம் மேலே விழுமென முதலில் ஓட நினைத்தாலும், மரமில்லாத ஊர் எப்படியிருக்குமென்ற பயத்தில் கோடாலியால் இவர்களையும் மரத்தையும் ஒருசேர வெட்டிச் சாய்க்கிறார்கள்.

இப்படியான கனாக்களிலிருந்து அரண்டெழுந்த பின்பு தூக்கம் வருவதில்லை. ஊரின் பசுமையில் கிளர்ந்தலறும் மனசு இங்கே வீட்டுக்குள் வளரும் தொட்டிச்செடிகளை தழுவி அடங்குகிறது. பெற்றத்தாயை கொன்றுவிட்ட குற்றவுணர்வில் யாரோ ஒரு சவலைக்கு கஞ்சியூத்துவதை தர்மம் என்று நினைத்து திருப்திகொள்ளும் நகரமிது. காடுகளை அழித்து வீடு கட்டியவர்கள், பின்பு தவறுக்கு பரிகாரம்போல வீட்டுக்குள் ஏதேனும் ஒரு சாண் செடி வளர்த்து சமாதானம் கொள்கின்றனர். செடியும் கொடியும் வேர் பரப்பவியலாத இந்த கான்கிரீட் தளங்களில் எப்படி பச்சை வரும்... மண்ணிருந்தால் தானே உயிர் வளரும்...

இங்கே யாரும் யாரோடும் கூடுவதில்லை. யாரும் யாரையும் நெருங்கிவிடாதபடி மாயக்கூண்டுகளை மாட்டிக் கொண்டுள்ளனர். எதிர்வீட்டான் முகத்தை சரியாக அடையாளம் காண தெரிந்து வைத்திருப்பவன் உலக விசயமறிந்தவனுக்கு ஒப்பானவன். எப்போதும் சிறைபோல் மூடிக்கிடக்கும் கதவுகளுக்குப் பின்னால், இக்கணத்தில் உயிரோடிருப்பதன்றி இவர்களுக்குள் ஒப்புமையான அம்சம் யாதென்றுமில்லை. வீட்டினுள்ளும், குடும்பமாய் வாழாமல் ஒரு கூரையின் கீழ் குடியிருப்பவர்களாக மாறிவருகின்றனர் என்ற உண்மையின் அச்சத்தை யாரோடும் பகிரமுடியாமல் தொண்டை வலிக்க வலிக்க விழுங்கிக் கொள்கிறார்கள். தப்பித்தவறி இங்கே உயிர்போனால் தூக்கிப்போக நாலுபேருக்கு எங்கே போவான் பிள்ளை என்கிற பயத்திலேயே சாவு தள்ளிப் போகிறது பெரியவர்களுக்கு.

திறந்தவெளியின் அலாதியை ரசிக்கவோ, மொட்டை மாடியேறி நட்சத்திரம் பறிக்கவோ பேரக்குழந்தைகள் கூப்பிடுவதேயில்லை. மழைப்பொழுதுகளில் கூட அவர்கள் வெளியே வருவதில்லை. கப்பலோடாத தெருவெள்ளம் வீணே சாக்கடையில் வீழ்ந்து அழிகிறது.

பள்ளிக்கூடம், வீடு, விடுமுறை நாட்களில் கம்ப்யூட்டர், கராத்தே பயிற்சி வகுப்புகள், டியூசன் என மாற்றி மாற்றி ஏதேனுமொரு கதவின் பின்னே அடைபட்டுக் கிடக்குமாறு தமது பேரக் குழந்தைகள் சபிக்கப்பட்டவர்களாயிருப்பது கண்டு பெருகும் துயரத்தை ஆற்றுப்படுத்தும் வழியறியாது அரற்றினர். எஞ்சியப் பொழுதுகளில், கொடிய சர்ப்பத்தின் விஷம்சொட்டும் நா போல நீண்டு உள்ளிறங்கும் கறுத்த ஒயரில் வழியும் வண்ணமயமான மகுடியோசைக்கு மயங்கிக் கிடக்கிறார்கள். பால்யத்திலிருந்து கோர்த்து வைத்த அனந்தக்கோடி கதைகளை பேரர்களுக்கு சொல்ல முடியாமல் தாம்பலத்தோடு கடைவாயில் அடக்கியபடி, தாத்தா பாட்டிகளும் கண்ணவிந்து கிடக்கிறார்கள் அந்த டி.வி பெட்டி முன்பு.

இன்னும் சில வயசாளிகளுக்கு வேறுமாதிரியான உளைச்சலிருந்தது. நகரத்தின் புறத்தே ஒடுங்கிய நண்டு வலைகளில் வாடகைக்கிருந்த நிலைமாறி இன்று சொந்தவீடும், வீட்டின் எவ்விடத்தும் நிரம்பிக் கிடக்கும் நவீனச் சாதனங்களும் பொருட்களும் தம்பிள்ளைக்கு எப்படி சொந்தமாயின என்ற சந்தேகம் பிராண்டுகிறது சதாவும். வருமானம் மீறிய வசதிக்கும் ஆடம்பரத்திற்கும் பின்னே சூதும் களவும் விபச்சாரமும் உண்டாவென விசாரித்தறியும் துணிச்சல் வயதோடு சேர்ந்து உலர்ந்துவிட்டிருந்தது. நட்சத்திர விடுதிகளின் மங்கிய வெளிச்சத்தில், பிரகாசமான தமது மேனியை யாருக்கோ திறந்து காட்டிவிட்டு, மனசை மூடிக்கொண்டு இருளைப்போல் வந்துவிழுகிற இளம் பெண்களின் சோகம் எங்கும் கவ்விக் கிடக்கிறது. ஆண்பிள்ளைகளில் சிலர் 'உழைப்பால் உயர்ந்த உத்தமர்' என்ற அடைமொழி சூழ, நாகரீக கிளப்புகளில் உரையாற்றி, மனைவியை எதிர்கொள்ளும் யோக்யதையிழந்து நடுநிசியில் வீடடைகிறார்கள் வேசியைப் போல. மறுபடியும் குமட்டுகிறது பெரியவர்களுக்கு. இங்கிதம் தெரியாமல் இப்படியா வாந்தியெடுத்து அசிங்கம் பண்ணுவது என்று திட்டுவார்களே என்ற பயத்தில் அதையும் விழுங்கிக் கொள்கிறார்கள்.

பஸ்சில் இடம் பிடிப்பதானது, தமது ஆண்மைக்கு விடப்பட்ட மாபெரும் சவாலென அங்குமிங்கும் புஜம்தட்டி அலைந்தனர் ஆண்கள். நானில்லாது உன்னால் ஊர் போய்ச்சேர முடியாதென மனைவிக்கு இப்போது உணர்த்துவதன் மூலம் வேறுபல வகைகளிலும் தனது அவசியத்தை அவள்மீது நிலைநிறுத்த முடியுமென ஒவ்வொருவரும் அந்தரங்கமாய் நம்பினர். இதன் பொருட்டு அவர்கள் நானாவித சாகசங்களுக்கும் பயிற்சி எடுத்தோர் போல் தயாராகிக் கொண்டிருந்தனர். வேட்டுச் சத்தத்திற்காக காதுவிடைக்க காத்திருக்கும் பந்தய மிருகம் போல் உடலெங்கும் கண் கொண்டு துடித்துக் கிடந்தனர் பஸ்சுக்காக.

இடம் பிடிக்கமுடியாத அவமானத்தில் குலைந்தவர்கள், ''இந்த இம்சையில மாட்ட வேணாம்னுதான் ரெண்டு நாள் முன்னாடியே புள்ளைங்களோட கிளம்புடின்னேன். கேட்டாத் தான...'' என்று தத்தம் மனைவியைப் பார்த்து பல்லைக் கடித்தனர். பெண்கள் அதற்கொன்றும் செவிமடுப்பதாயில்லை.

அவர்கள் போனவாட்டி ஊருக்குப் போய்வந்ததிலிருந்து இன்றுவரை தவணையிலும் தள்ளுபடியிலும் வாங்கிய துணிமணிகள், நகைகள், பண்ட பாத்திரங்களை சுமந்து கொண்டிருக்கிறார்கள் மனசிலும் உடம்பிலும். ஊரில் கொண்டு போய் காட்டி, 'ஆஹா ஓஹோ' என நாலுவார்த்தை சொல்லக் கேட்டால்தான் அந்த பாரம் குறையும். பார்த்த சினிமாக்கள்-சீரியல்கள், புதிதாய் கற்ற கோலம், சமையல் குறிப்பு, ஒயர் பின்னல் டிசைன், புருசன் பண்ணிய சேட்டை, பிள்ளைகள் கற்ற ரைம்ஸ், சிறுவாட்டில் வாங்கிய மூக்குத்தி, கட்டுகிற சீட்டுகள், ஓடிப்போன சீட்டுக் கம்பனியானிடம் ஏமாறாமல் தப்பிய சாமர்த்தியம் என்று ஆதியோடந்தமாய் சொல்லப்படவேண்டிய செய்திகளை அவர்கள் மௌனமாய் தொகுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தளவுக்கு கோர்வையாய் திட்டமிட்டுச் சென்றதாலும், சில விசயங்கள் ஊரிலிருந்து திரும்பிய பிறகு தான் ஞாபகம் வருகிறது. மறவாமல் இருக்க முந்தானையிலும் கொசுவத்திலும் சிலபல முடிச்சு போட்டு வைத்தாலும், எந்த சேதிக்கு எந்த முடிச்சு என்ற குழப்பம் சூழ்ந்ததில் பனியை மீறி வியர்த்தது.

பனியின் மூர்க்கத்தில் நேரம் இறுகி மெதுவாய் கரைகிறது. போலிசுக்கு பயந்தமாதிரி பாவ்லா செய்தபடி லைட்டுகளை அணைத்துவிட்டு, காடாவிளக்கின் புகையூடே டீக்கடையில் வியாபாரம் சுறுசுறுவென்று நடக்கிறது. அவ்வப்போது டீயும் சிகரெட்டும் பாராக்காரருக்கு போய்க்கொண்டிருக்கிறது கப்பம் போல. பால் கால்பங்கு பச்சைத்தண்ணி முக்கால் பங்கென ஓடும் டீ குடிக்க ஈயென மொய்க்கிறது கூட்டம். குளிரை விரட்ட நெருப்பை விழுங்கவும் சிலர் சித்தமாயிருந்தனர். எத்தனை டீ தான் குடிப்பதென்று சலிப்பாயிருந்தது முருகேசனுக்கு. அனைத்து வைத்திருந்த துண்டு சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டான். நாறியது.

வண்டி கிடைக்காத ஏமாற்றம், தூக்கமின்மை, அலைச்சல் எல்லாம் கூடி எல்லோரின் முகத்திலும் கடுமையேறிக் கொண்டிருந்தது. ஒருவர் முகத்திலும் சினேகபாவமில்லை. இறுக்கமானதொரு மனநிலை எங்கும் பரவியிருந்தது. சிரிப்பது கூட தனது பிடிநிலையை தளர்த்தி இளக்கிவிடுமோவென அஞ்சினர்.

இதே முகங்களைத்தான் ரேசன்கடையிலும், நேர்முகத்தேர்வுகளிலும் தெருக்குழாயடியிலும் திரையரங்கத்தின் நீண்டவரிசையிலும் பார்த்திருக்கிறான் முருகேசன். எங்கும் எங்கும் இந்த முகங்களே. எல்லோருக்குமான இடங்கள் ஏனில்லை என்று நெற்றி சுருக்கி யோசிக்காத முகங்கள். இருக்கும் சொற்பத்தில் தனக்கொரு இடத்தை உறுதியாக்குவது மட்டுமே இலக்காகி விட்டது அவர்களுக்கு. போட்டியின் தருணங்களில், ஏதோவொரு மாயாவினோதத்தால் எல்லோரும் செத்துப்போய் தான்மட்டுமே மிஞ்சியிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்குமென ஆசை கொண்டலைகிறார்கள். அது நிராசையென அறிய நேர்கிற உண்மையின் கணத்தில், சட்டதிட்டங்களை புறந்தள்ளி குறுக்குவழிகளில் ஓடிப்போய் இலக்கடைகின்றனர். குறுக்கு வழியில் செல்லும் சூட்சும நுட்பங்களறியாதவரும் இயலாதவரும், விரும்பாதவரும் கூடி நேர்வழியே நித்தியப்பாதை என்று தத்துவம் பிதற்றி வரிசையில் நின்று வயோதிகமடையாமலே மாண்டு போகின்றனர் மனசளவில்.

கூட்டத்தினூடே கைவரிசை காட்டிய ஜேப்படித்திருடன் ஒருவனைப் பிடித்து வெளுத்து வாங்கினார்கள். யார் யார் மீதிருந்த கோபமோ அவன் மீது இறங்கியது. பெருத்த தொந்தியின் மூலமாக குற்றங்களை குறைத்துவிட முடியுமென்று நம்பிக்கை கொண்ட போலீஸ் ஒருவர், சினிமாவில் கடைசி சீன் வசனமேதும் பேசாமல் அவனை இழுத்துப் போனார்.

இம்மாதிரியான விசேஷ நாட்களில் திருடர்களுக்கு கொண்டாட்டம். கச்சிதமாய் கன்னமிடுவதும் கத்திரிபோடுவதுமாய் கனஜோராய் தொழில் நடக்கும். சாதாரணமாகவே, சனிக்கிழமை ஷிப்டு முடித்து ஊருக்குப் போய் திங்கள் காலை திரும்புவதற்குள் அனேக வீடுகளின் பூட்டு பிளந்து தொங்கும். தீபாவளி, பொங்கல், கோடைவிடுமுறைக் காலங்களில் கேட்கவே வேண்டாம். முக்கால் வாசிப்பேர் ஊருக்கு கிளம்பிவிட, வீடுகள் அனாதையாகிவிடும். இது போதாதா திருடர்களுக்கு? ஊருக்குள் நடமாட்டம் முற்றாக ஒழிந்துவிடும். உறக்கக் காலத்தை துல்லியமாய் அளந்து காரியத்தில் இறங்குகின்றனர்.

வெளியூர் போவோர் வீட்டைப் பூட்டி சாவியை தங்களிடம் ஒப்படைத்துவிட்டு போகுமாறு சினிமா தியேட்டரில் சிலைடு போட்டு உபாயம் சொன்னது காவல்துறை. மக்கள் கமுக்கமாய் சிரித்துக் கொள்வார்கள். திருட்டுகள் மிக நுட்பமாகவும் நூதனமாகவும் நடக்கின்றன.

முன்பெல்லாம் நிறைய ஒண்டிக்கட்டைகள். இப்போது நிலைமை மாறிவிட்டது. புதிதாக தொழிலாளர் யாரும் வருவதில்லை. இருப்பவர்கள் தான் காலி பண்ணி போய்க்கொண்டிருக்கிறார்கள். நகரம், வெளியேறுவதற்கான ஒருவழிப்பாதையை மட்டும் திறந்துவைத்துவிட்டு மற்றெல்லாவற்றையும் மூடிக்கொண்டது. வெளியூர் கிளம்புவதென்றால் வீட்டில் படுக்க வைக்க ஆள் கிடைப்பது பெரும்பாடாகிவிட்டது. எதற்கிந்த வம்பென்று எங்கும் கிளம்பாதவர்களுக்கு அவரவர் வீட்டை பத்திரமாய் பார்த்துக் கொள்வதே ஏழு பூதங்களின் வேலையாக கனக்கிறது.

தொழிற்பேட்டையாக்கும் பொருட்டு இங்கிருந்த பூர்வமக்களின் நிலம் சாரமற்ற விலைக்கு பிடுங்கியெடுக்கப்பட்டது. சுற்றுப்புற கிராமங்களின் நிலம் பண்ணை வீடுகளாகவும், வீட்டுமனைகளாகவும் இழிந்து அழிந்தது. வாழ்வின் ஆதாரமாயிருந்த நிலம் கைவிட்டுப் போன பிறகு அவர்களின் வம்சாவழிகளில் சிலர்தான் வேறுவழியின்றி திருடுகிறார்கள் என்றொரு குற்றச்சாட்டு நிலவுகிறது. நிறைய கம்பெனிகள் மூடப்பட்டு விட்ட நிலையில், ஊர் திரும்பமுடியாத அயலூர்க்காரர்களே வேறு வழியின்றி இத்தகைய துர்க்காரியங்களை நிகழ்த்துவதாகவும் குற்றச்சாட்டுண்டு. நகரத்தில் தொடர்ந்து பெருகிவரும் வழிப்பறி, வன்முறை, விபச்சாரம், போதைப்பொருட்கள், மோசடிகளுக்கும் கூட இப்படியான காரணங்கள் கூறப்படுகிறது. உள்ளூர்க்காரரோ அசலூராரோ, கஷ்டப்பட்டாவது கண்ணியமாய் வாழ முயலும் எத்தனையோ பேரை முருகேசன் அறிவான். இதுவரை தற்கொலை செய்துகொண்ட ஆறேழு குடும்பங்களை, இதன்பொருட்டு இன்னும் வாழ்வதாகவே அவன் கருதுகிறான்.

கடைசி வண்டியிலிருந்து கிளம்பிய கரும்புகையில் கூட்டம் காணாமல் போயிருந்தது. அந்தவண்டி ஊரையே சுருட்டிக்கொண்டு சூன்யத்தை நிறைத்துவிட்டுப் போனது போலிருந்தது. மிச்சம் சொச்சமாய் ஓரம்சாரம் ஒதுங்கியிருந்த கொஞ்சம்பேர் வேறு மார்க்கங்களில் செல்ல காத்திருப்பவர்கள்.

கூட்டம் ஒழிந்த பஸ் ஸ்டான்டைப் பார்க்க பார்க்க கூட்டத்தின் மீதிருந்த வெறுப்பு மெல்ல மெல்ல தணிந்து அனுதாபம் விரவியது முருகேசனுக்குள். இப்படி அடைத்துக் கொண்டு ஏறியவர்கள் எவ்வளவு தூரம் இடிபாட்டில் சிக்கியவர்களாய் பயணம் செய்ய முடியும்...? அந்தக் குழந்தைகள்... பெரியவர்கள்... சீக்காளிகள்... இரக்கமும் பெருந்தன்மையும் யார் மீதும் பொழிய யாரும் தயாரில்லாத நிலையில் எல்லோருமே வெறும் டிக்கெடுகளாக போய்க்கொண்டிருக்கின்றனர்.

தானும் ஊர் போய்ச் சேரவேண்டியவன் என்ற நினைவு வந்ததும் வெடுக்கென எழுந்து கொண்டான் பெஞ்சிலிருந்து. மணி இரண்டரை. இங்கிருந்து ஆறுமணி நேரப் பயணம்.

பார்வதி காத்திருப்பாள். சருகு விழும் சத்தத்தைக் கூட உன்னிப்பாக கவனித்து கேட்பாள் காலடியோசையா என்று. விடிய விடிய நடையாய் நடந்தாவது புருசன் வந்து சேர்ந்துவிடுவானென்று அவளுக்கு தெரியும். வசுக்குட்டிக்கும் ராமுவுக்கும் எடுப்பான நிறத்தில் துணி எடுக்கணும். நோம்பி நாளில் பிள்ளைகள் அக்கம்பக்கம் பார்த்து ஏமாறக்கூடாது. அந்த ஏக்கம் கடைசிவரை கண்ணோரம் தங்கிவிடும். பெற்றவர்களின் கஷ்டம் பிள்ளைகளை பீடித்துவிட்டால் அதுகள் குன்றிவிடும். பார்வதிக்கு வெள்ளையும் கத்திரிப்பூ நிறமும் கலந்த புடவை அழகாயிருக்கும். நைந்த பழசை உடுத்திக்கொண்டு பஞ்சையாய் நிற்பாளா நல்ல நாளில்...?

சட்டென்று ஞாபகம் வந்தவனாய் கக்கத்திலிருந்த பையை தொட்டுப் பார்த்துக் கொண்டான். எந்தப் பூட்டையும் எளிதில் திறக்கும் சாதூர்யமறிந்த அவனது தளவாடங்கள் ஓசையெழுப்பாது செல்லமாய் உள்ளிருந்தன.

சனி, ஜனவரி 14

பயணம் -ஆதவன் தீட்சண்யா

மதளத்தில் முகடுகளில்
காற்றுவெளியில்
கடல்நீர்ப்பரப்பில்
நரம்பென கிளைக்கும்
தடங்கள் வழியே
கொடிவழி நேர்வழி
தனிவழி பொதுவழி
விதிவழி புதுவழி
சஞ்சாரம்
வண்டிவாகனத்தில்
குதிரையில் கழுதையில்
கொழுப்பெடுத்து யானையில்
ரதத்தில் பல்லக்கில்
அடுத்தவன் தோளில்
சொந்தக்காலில்
கனவில் நனவில்
கால்பாவாக் கற்பனையில்
  
பயணம் :2

விலாசம் தொலைத்து
வெளிப்போய்
மூளை சிதறி
முகமும் சிதைந்து
விபத்து விபரப் பலகை நிரப்ப
அகாலத்தில் மரணித்தவர்
இங்கு
தேவையற்ற தகவலாய்...

என்ன இருக்கிறது
கடிகார முட்கள் கூடும்
கணமேனும் ஓயாமல்
போக்கற்றுத் திரிந்து
பொட்டென்று சாவதில்

மார்க்கமறிந்து
சூட்சுமம் தேர்ந்து
லாவகமாய் ஒதுங்கி
முன்பாய்ந்து அம்பென
இலக்கடையும்
சாதுர்யத்தில்தான் எல்லாமே.























வியாழன், ஜனவரி 12

வஞ்சம் - ஆதவன் தீட்சண்யா

சங்கல் இளகின விடிபொழுது. கொய்யக் காத்திருக்கும் சாமந்திக்காடாய் மீன் சிரிச்சுக் கிடக்கு ஆகாசம் முழுக்க. தோள் நழுவிய துணியாட்டம் கள்ளமா தரையிறங்குது பனித்தாரை. வரப்படியில் அண்டின பூச்சிப்பொட்டுக குளுர்தாங்காம சில்லாய்க்கிறதில் காதடையுது.

 காவாயில் ஜதிபோட்டு ஓடியாரும் தண்ணி வெதுவெதுன்னு பாயுது. வெடிப்புல மண்டியிருந்த தாகம் ஈரம் பட்டதும் இளஞ்சூடா கரையுது காத்தில். சாரையும் நாகமும் விரியனும் மிலுமிலுக்கும் வயக்காடுன்னு தாத்தாவும் தருமனும் சொன்னது நெசந்தான். சீத்துசீத்துனு சீறிக்கிட்டு எலி விரட்டி அலையும் சத்தம்.

ஆள் பொழக்காட்டம் அருகின இப்படியான ராப்போதுகள்ல ஆகாசம் தொட மரமெல்லாம் ரகசியமா வளரும் போல. ரயில் ரோட்டோர பனைமரங்க செஞ்செவிக்க நிக்குதுங்க தலைசிலுப்பி. சாரியா ஒசந்ததில் மூனாம் மரம் தாத்தாவுது. ஒத்தமரத்துக் கள் குடிச்சா ஒடம்பு கனியும்னு தாத்தாவுக்கு தனிச்சியுட்ட மரம். கடேசி மடக்கை உறிஞ்சினதும் மீசையொதுக்கி செருமறாப்ல இருக்கு இப்பமும். குளுகுளுன்னு கள் உள்ள இறங்கினதும் ஆளை கிளப்பியுட்ரும் போல. மடி முட்டுன கன்னுக்குட்டியா கும்மாளம் பொங்கிரும் அவருக்கு. கோமணம் தொங்கறது தெரியறாப்ல வேட்டிய நெஞ்சுவரைக்கும் மடிச்சி ஏத்திக் கட்டிக்கிட்டு மரத்தடி சேக்காளிங்க ஒவ்வொருத்தர் கிட்டயும் ஞாயம் நீளும். மப்பு சாஸ்தியாகி கண் சொருகி அங்கயே கமுந்தடிச்சிக் கெடக்கறது சகஜம். தெளிஞ்சு எழுந்து வர்றப்ப வாடை அவருக்கே குமட்டுமோ என்னமோ, வரப்புல துளசி கிள்ளி மோந்துகிட்டே வருவார். வெண்ணங்கொடி முனியாட்டம் செவந்து பிதுங்குன முழிங்க பயங்காட்டும்.

அந்தமரத்துக் கள் மேல அனேகம் பேருக்கு ஆசை. கிழவன் மூச்சிருக்கிற வரை கிடைக்காது யாருக்கும்னு பேசிப்பாங்க. அதென்னமோ நெசந்தான். முட்டியில ஒருசொட்டு தங்காது. ஒறம்பரைசரம்பரையே வந்தாலும் வேற மரத்தடிக்கு நகந்துட வேண்டியதுதான்.

இப்ப யாரும் அந்தமரத்துல பாளை சீவறதில்ல. முட்டிக்கு பத்து ரூவா சேத்துத் தாறேன்னு முன்சீப் மவன் கேட்டதுக்குக்கூட தாத்தாம்மா முடியாதுன்னிட்டா. தாத்தா ஞாவகார்த்தமா நுங்குக்கு விட்டாச்சு. சடைசடையா குடுவையாட்டம் பத்திருவது குலையிறங்கி மினுங்கும். முத்தின கடுக்கா நுங்கு கூட தனிருசி. தப்பின கொட்டைங்கள மேங்காட்டுத் திட்டுகள்ல மொளைக்கப் போட்டு ஊராருக்கு கெழங்கெடுத்து குடுக்கறதுல தாத்தாம்மாவுக்கு நிம்மதி. ஊர்ல பசங்க உருட்டி வெளையாடற வண்டிக்கெல்லாம் இந்தமரத்து புருடைங்கதான் சக்கரம். பழம் சுடறப்ப வாசம் ஆளைத்தூக்கும். வெந்து கருகுன மேந்தோலுக்குள்ள மஞ்சமசேல்னு மாம்பழமாட்டம் இருக்குற பனஞ்சேகை நார்நாரா போறமுட்டும் மென்னுகிட்டேயிருக்கலாம். அவ்ளோ இனிப்பு.

தாத்தா மரம்போக மத்தது மன்னானுக்கு. தாத்தாவுக்கு நல்ல சேக்காளி. இப்பமும் குடும்பத்துக்கு நல்ல ஒத்தாசை. தொழில்ல மகா கெட்டிக்காரன். பாகு காய்ச்சும் வாசனைக்கு பக்கம்பராந்திரி பிள்ளைங்கல்லாம் வந்துடுவாங்க. வஞ்சனையில்லாம வழிச்சுக் குடுப்பான் கொட்டமுத்துத் தழையில. முறுகக் காய்ஞ்ச ஓலைய செல்லக்கரண்டியா உடைச்சு பாகு வழிச்சு சப்பும் பிள்ளைங்க, கொப்பரையச் சுத்தி ஈயா மொச்சுக்கிடப்பாங்க. கொதிக்கிற பாகு தெறிச்சு கொப்பளம் எழுந்தாலும் அச்சுல வார்க்குற வரைக்கும் அடுப்பச் சுத்தியே அலையுங்க.

பாகு காய்ச்சி பதம் எடுத்தான்னா அப்படியொரு பக்குவம். வருசம் நாலானாலும் வெல்லத்துக்கு வில்லங்கமில்ல. அம்பது உண்டை வெல்லமும் வேணும்கிறப்ப தெளுவும் பருவத்து ஈடா குடுக்கறான்.

கொப்பரைக்குப் போக மிச்சமரத்துல கள்ளுக்கு வழி பண்ணிட்டான் மன்னான். தாத்தா காலத்திலிருந்தே இது வழமை. காலங்காலைல ஜனமான ஜனம் குமியும். குருத்தோலைல தெத்தின கோட்டையில ஊத்தியூத்தி குடிச்சிட்டு வயனம் பேசி வம்பாடி கரம்பக்காட்ல வுழுந்து கெடப்பாங்க. நெதானந்தப்பி ரயிலுக்கு வேட்டியவுத்துக் காட்ற வேடிக்கைக் கூத்துக்கும் பஞ்சமில்ல.

தாத்தா போனதிலிருந்து ரஞ்சிதம் வர்றதில்ல. அவ வந்துபோன கொடித்தடத்துல அவளுக்கப்பறம் யாரும் நடக்காம அனாதையா நெளிஞ்சிருக்கு அவளாட்டமே. எப்ப வேணும்னாலும் அவ வந்துடுவாள்னும், இனிமே அவ வந்துபோறதுக்கு முகாந்திரமேயில்லைன்னும் இருகூறா அயிப்ராயமிருக்கு. இப்பவும் அவளோட பலகாரக்கூடை வாசம் பனைமரத்துச் செதில்ல படிஞ்சிருக்குன்னு நம்பறவங்க இருக்காங்க.

முன் கொசவம் வச்ச செவத்தா தான் இப்பவெல்லாம் கூடையெடுத்தாறா. பேருதான் செவத்தா. நெருப்புமேல தண்ணியூத்தினாப்ல ஆளு காக்கா செவப்பு. நெறத்துல என்னயிருக்கு? ம்ஹூம்... முந்தானைல கோலின சும்மாடு மேல கூடைய வச்சிக்கிட்டு கை ரெண்டையும் கரகாட்டக்காரியாட்டம் வீசிவீசி வர்றப்ப கெழவன் கூட கெறங்கிருவான். கூடைக்காரிங்கறதால கூப்புட்ற முடியுமா? மானம் போயி மந்தைல நிக்கமுடியுமா? வம்பு பண்ணினான் வாயாடினான்னு நாளைக்கு ஊர்ப்பொதுவுல ஞாயம் கீயம் வெச்சுட்டாள்னா...? எதுக்கு பொல்லாப்புன்னு ஆளாளுக்கு வுட்ட பெருமூச்சுல இன்னம் கறுக்குறா செவத்தா.

செவத்தா, சந்தை நாள்ல ரத்தப்பொரியலும் வறுத்தக்கொடலும் கொண்டாருவா. மத்த நாள்ல சுருக்குனு காரமேத்துற போண்டா, வடை, தாளிச்ச காரமணி, அவரை, நரிப்பயறு சுண்டல்னு கமகமக்கும். இருந்தாலும் ரஞ்சிதம் கைப்பக்குவம் யாருக்கு வரும்கிற அங்கலாப்பு இருக்கு நெடுநாளா மரத்தடியில.

மக நட்சத்திரம் இன்னம் கீழ இறங்குல. அதுக்கும் தாழ ஒத்தையா ஜொலிக்கற மீனுதான் உன் தாத்தான்னு காட்டுவா தாத்தாம்மா. வளவுல படுத்துக்கிட்டு வச்சக்கண் வாங்காம அதையே பாத்திருப்பா. திடும்னு உசுரு வந்தவளாட்டம் வெத்தலச்சாற பீச்சித் துப்பிக்கிட்டே கொசுறு கொசுறா எதாச்சும் பேசுவா தாத்தா பத்தி. பின்னயும் கண்ணொழுக்கி சிலையா படுத்திருப்பா. காசத்துக்கும் அவளுக்கும் தொலவு மங்கி மறஞ்சி புருசன் கைபிடிச்சி தனிச்சி வாழறாப்ல தெரியும். பொதையலக் காக்குற பூதமாட்டம் அது நம்பளையேத்தான் பாத்திருக்கும்னு தணிஞ்சக்குரல்ல அவளுக்கே ரகசியம் சொல்றாப்லா முணுமுணுப்பா. ஊரடங்கி நாய்ங்களும் மொடங்குன பிற்பாடு வாடா எஞ்செல்லமேன்னு என்னை இழுத்து வயித்துச்சூட்டுல தழையவுட்டுத் தூங்கிருவா.

செத்ததுக்குப் பின்னயும் அல்லாரையும் பாத்துக்க தாத்தா மீனுரு பூண்டு அங்கயிருந்து காக்குறாராம். அதும்பக்கத்துல துக்கிலியா தெரியற ரெண்டுமீனுந்தான் உங்கொப்பனும் உங்கம்மாளும்னு தாத்தம்மா சொல்வா. நடுவூட்டு சாமிமாடத்துல போட்டாவா தொங்கறாங்க ரெண்டுபேரும். ரயில்ரோட்ட தாண்டறப்ப வண்டியில சிக்கி அவங்க சாகறப்ப நான் ஒருவருச சிசுவாம்.

மீனுரு மாத்திரமில்ல எந்த அவதாரமும் எடுக்கற சாத்ரீகமுண்டு தாத்தாவுக்கு. கையூனி கரணம் போட்டு அந்தரத்துல மிதக்கற மந்தரமும் தந்தரமும் அறிஞ்சவர். நெனைச்சதை சாதிக்க எந்த ரூபமும் கைக்கூடும் அவருக்கு.

இன்னிக்கும் கூடயிருந்து குடும்பத்த நடத்தறாப்லதான் தோணுது. இவ்ளோ காலத்துக்கப்பறமும் காத்தாட்டம் இங்கயேதான் காடு முழுக்க நெறஞ்சிருக்கறதா நெனச்சிருக்கோம். அதனாலயே ஒருமாதிரி பயமும் தைரியமும் ஒழுங்கும் தானா படிஞ்சிருக்கு எதுலயும். பாக்கப்பாக்க அந்தமீன் தாத்தாவோட சுருட்டாட்டம் கனலுது. அவர் சொடக்கு போட்டு உதுத்துவிட்ட சுருட்டுச் சாம்பலா பனி படியுது மேல. வயக்காடு முழுக்க பொகலை கருகுற நெடி வீசுது இப்ப.

காவாக்கரை தென்னமரத்துலயிருந்து முத்தின நெத்து காத்து தாங்காம அத்து வுழுந்த சத்தம் கேட்டு கொட்டாய்க்கிட்டயிருந்து செவலையன் கொலைக்குது. அகாலத்துல அந்த சத்தம் எதையெதையோ ஞாபகம் பண்ணச் சொல்லுது.

தாத்தா செத்தன்னிக்கு ராத்திரி இப்பிடித்தான் செவலையன் 'ஓ'ன்னு கூப்பாடு போட்டு கொலைச்சிக்கிட்டிருந்தது. என்ன ஏதுன்னு யாராச்சும் மாமரத்தடிக்கு ஓடிப் பாத்திருந்தா தாத்தா சாகறதைக்கூட தடுத்திருக்கலாமோன்னு எப்பவாச்சும் தோனும். அன்னம்தண்ணி காரமில்லாம நாலஞ்சு நாள் குழிய சுத்திசுத்தி திரிஞ்சிக்கிட்டிருந்திச்சு செவலையன். வாயில்லா சீவனுக்கும் பேசறத்துக்கு விஷயமிருக்கும் போல.

அத்தினி வயசுல பிறத்தியாரானா நாயா பேயா நாண்டு நாறித்தான் செத்திருப்பாங்க. சவமாயிருச்சா கிழம்னு எட்டயிருந்து மோந்துப் பாத்து ஏன் இன்னமும் சாகலேன்னு ஊரும் உறவும் பஞ்சாங்கம் பாக்கும் விடிய விடிய. எறும்புக்கும் ஈய்க்கும்கூட எளக்காரமாகி ஒரு கவளம் சோத்துக்கு உயிரலைஞ்சு சாகும். தளந்து தள்ளாடி தாவாரத்துல கெடக்கறப்ப ஏன்னு கேக்க எந்த நாயும் பக்கம் வராது. தாத்தா அப்பிடியில்ல. கடைசிவரைக்கும் கைத்திடத்துல இருந்தார். கண் தெரிஞ்சு நடந்தார். நோவுநொடின்னு ஒருநாளும் சாய்ஞ்சதில்ல. கொட்டப்பாக்கை நொடக்குனு கடிக்கிறப்ப மத்தங்களுக்கு பல் வலிக்கும். இவர் தாடைய பிடிச்சிக்கிட்டு கேலி பண்ணுவார்.

ஆனது ஆகாததுன்னு எதுவுமில்ல. ருசியாயிருந்தா வெஷத்தையும் தின்னு, முறிக்கிற மருந்து இல்லாமயாப் போயிரும்பார். கோழியாட்டம் தீனியெடுத்தா குக்கநோவு வந்து செத்துப்போயிடுவே, நல்லாத் தின்னுடா கண்ணும்பார். வெங்கலக் கிண்ணியில விழுற சோத்துல ஒரு பருக்கை சிந்தாது சிதறாது. சாப்பாட்ல அவ்வளவு கவனம். கறி ஆக்கும் நாள்ல கதை தனி.

நெனைக்கற நாள்ல கறி வேணும். வெள்ளிக்கிழம, நடுசனி, பொரட்டாசின்னு யாராச்சும் சொன்னா தீந்தாங்க. பச்சப்பொணத்த பிச்சித் திங்கற சாமியக் கும்புடற ஒனக்கும் எனக்கும் என்னாடா சாங்கியம்... காவு போட்டு படையல்ல கவுச்சி படைக்காதப்ப தன்னோட நாக்கையே கடிச்சி ரத்தம் சப்புற சாமிடா நம்புளுது. நாளாம்...கெழமையாம்... ஓடிப்போய் ஒரு கூறு கறி வாங்கியாம்பார். எந்தஊர் சந்தையில யார் யார் கசாப்புக்காரன்னு கச்சிதமாத் தெரியும். எனக்கு-சாக்கனுக்குன்னு சொல்லு. சுக்கூர்பாய் பதமா குடுத்தனுப்புவான்னு போற ஊருக்கும் ஆளுக்கும் தக்குனாப்ல சொல்லிடுவார். எங்கயும் ஆப்படாத நாள்ல களத்துமேட்டுல கிளைக்கிறக் கோழி வயித்துக்குள்ள இரையெடுக்கும்.

பக்கத்துல உக்கார வச்சுக்கிட்டு எலும்பில்லாத செங்கறியா நிமிட்டி எடுத்து தருவார். நான் திங்கவா இதெல்லாம், உனுக்காவத்தாண்டா கண்ணு. தின்னு சாமி.. இந்தா ஈரல்னு ஊட்டுவார். ஏண்டி, மிச்சக்கறிய சட்டியா தின்னும் ... எடுத்துப்போட்டு அதக்கி முழுங்கேன்னு தாத்தம்மாளை செல்லமா சீண்டுவார். மப்பு உச்சியேறிட்டா நாய்க்கும் ஊட்டிவிட்டுட்டுத் தான் மறுவேலை. வேஷம் கட்டி கூத்தாடுன ஞாபகம்லாம் வந்து ஹோன்னு படுகளத்துல பாடுற பாட்டு கிளம்பிடும்.

பத்துப் பவுனழுச்சு
படுக்கக் குறிஞ்சிசெஞ்சு
படுத்தால் அழுந்துதுன்னு
பக்கம் வந்தாக் காந்துதுன்னு- நீங்க
பரமனோட பஞ்சு மெத்தெ
படுத்தா சொகமுனு
பறந்தோடிப் போனீங்கொ

எட்டுப் பவுனழுச்சு
இருக்கக் குறிஞ்சி செஞ்சு
இருந்தா அழுந்துதுன்னு - நீங்க
எமனோட பஞ்சு மெத்தெ
இருந்தா சொகமுனு
எழுந்தோடிப் போனிங்கோ

..........................................
.............................................

அடே காலா, யாரென்று தெரியாமல் உன் பாசக்கயிறை வீசிவிட்டாயா?
குலத்துக் கொடி விளங்க கொழுந்தாய் தழைத்த சிசுவை
நீ கொண்டு போன சூதென்ன மாயமென்ன... ஹோ...
அடே கிங்கரா, இதோ உன்னை வாள் கொண்டு கிழிப்பேன்
உன் வம்சத்தை அழிப்பேன்..தத்தாங்...தித்தாங்...

முன்னூறு மூங்க வெட்டி - என் ராசா
ஒனக்கு மூனு முக தேரு கட்டி
எம் மவனே நீ போற ரதம்
அந்த வெள்ளி ரதம் நம்ம ரதம் - னு

பாட்டும் வசனமும் கூத்துக்கதையிலயிருந்து பொரண்டுத்தாவி மவனும் மருமவளும் செத்ததுல நிக்கும். அக்கம்பக்க கொட்டாய்க்காரங்க வந்து கெழவனுக்கு வாழச்சாறு ஊத்தி படுக்கவையுங்கன்னு பக்குவம் சொல்லிப் போவாங்க. எச்சக்கையோட எழுந்து அடவு பிடிச்சு ஆடறதுமுண்டு. புத்திர சோகம் பொறத்தால நழுவி பபூன் பாட்டுகூட வந்துடும். கெழவனுக்கு இப்பந்தான் பிராயம் திரும்புதும்பாங்க.

பனங்கறுக்குல கீறினாக்கூட சொட்டு ரத்தம் வராத கெட்டித் திரேகம், திடகாத்ரம். அவரோட வாட்டசாட்டமும் வளச்சிப்போடற பேச்சும் எதுக்கும் துணிஞ்ச ஆகிருதியும் தான், வயசுப்பசங்க வலைக்கெல்லாம் வழுக்கித் தப்பின ரஞ்சிதத்தை தாத்தாக்கிட்ட இழுத்து நிறுத்தியிருக்கும்னு தோணுது. சிக்கிக்கெடந்தாளா சொக்கிக்கெடந்தாளான்னு சொல்லிற முடியாது. சாகறன்னிக்கு கூட மொதக்கோழி கூப்புடறதுக்கு முன்னாடி மாமரத்தடியில ரஞ்சிதம் வந்து கொஞ்சிட்டுப் போனாள்னும் அதுக்கப்புறம்தான் தாத்தா உசுரு பிரிஞ்சதுன்னும் ஊர்ல ஒரு பேச்சிருக்கு.

அவங்க வழமையா கூடுற இடம் அதுதான். அந்நேரத்துக்கு அமுட்டுத் தொலவுல இருந்து ஒண்டியா கௌம்பி வர்றதுன்னா தெகிரியம் இருக்கிறதால மட்டுமில்ல, அவரைப் பாக்காம அவளால இருக்க முடியாதுங்கறதும் தான். இன்னிவரைக்கும் அவர் செத்த நாள்ல மாமரத்தடிக்கும் குழிக்கும் வந்து படையல் போட்டுட்டு வெடியறதுக்குள்ள அவ போயிடற விசயம் ஊருக்கே தெரியும்.

ஏரிக்கு அந்தாண்ட இருக்கும் மண்ணப்பாடியில, மல்லிகக் கொடியோடி கூரையே பச்சையா மாறி ராவும் பகலும் மணக்குற குடிசல்ல இருந்துதான் ரஞ்சிதம் வருவா. மஞ்சளும் பூவும் பவுடரும் சேர்ந்து குழைஞ்ச வாசனை அவளுக்கும் முன்னயே வந்து கமகமங்கும். மாயக்கல்லுல செஞ்சாப்புல சின்னமூக்குத்தி. வெயில்ல அது மின்னுறப்ப பொறி கலங்கி கண்ணும் நெனப்பும் கனாவுல மெதக்கும். ஈரக் கொண்டையிலயிருந்து சொட்டும் தண்ணி நெகுநெகுன்னு முதுகுல கோடு பிடிச்சு கொசுவத்துக்குள்ள எறங்குறதைப் பாத்து எதேதோ நெனப்பு பொங்கி எத்தினியோ நாள் தூக்கம் மடிஞ்சிருக்கு.

தாத்தாவுக்கு தொடுப்பா இருக்கறவளைப் பத்தி இப்பிடி தாறுமாறா நெனக்கலாமான்னு யோசிச்சா, தொடுப்பா இருக்கறவளோட என்னத்த உறவுமுறை பாக்குறதுன்னு எதிர்கேள்வி வந்துருது. தாத்தா முந்திக்கிட்டார். இல்லாட்டி அவளை சுண்டிப் பிடிச்சிருக்க முடியும்னுதான் இப்பவும் தோணுது. இதையெல்லாம் வெளியில சொல்லிற முடியுமா? நெனச்சு நெனச்சு நெஞ்சுக்கூடே நெருப்புமேடா கருக வேண்டியதுதான்.

அவ புருஷன் மூணுவேளை கஞ்சிக்கும் வருசத்துல ரெண்டு வேட்டித்துண்டுக்கும் ஆயிரம் ரூவா ரொக்கத்துக்கும் மாரப்பக் கவுண்டரோட பண்ணையத்துல ஆளிருந்தான். கொழுத்தப் பண்ணையம். ஆம்பளன்னா நாலுவேலை இருக்கும். அங்கயிங்க போய்வரணும். பொழுதும் உன்னைய அள்ளையில மல்லாத்தி கொஞ்சிக்கிட்டிருக்க முடியுமாடின்னு பொண்டாட்டி வாயைப் பொத்திட்டு கவுண்டர் போய்ச்சேருமிடம் புதுப்பட்டி வலசக்கவுண்டன் மகள்கிட்ட தான்னு ஊருக்கே தெரியும். ஆளில்லாத காட்டுக்கொட்டாய்ல தனியாயிருக்க பயந்து மாட்டுக்கொட்டாயிலும் மோட்டார் ரூம்லயும் ஆளுக்காரனோட தூங்கியெழுந்தா கவுண்டர் பொண்டாட்டி. சந்தேகந்தட்டி அவர் ஜாடைமாடையா வேவு பாக்கறது தெரிஞ்சு உஷாரா ரெண்டுபேரும் எங்கயோ ஓடிப்போயிட்டாங்க.

புருஷனப்பத்தி இத்தினி வருசத்துல ஒரு தகோலுமில்ல ரஞ்சிதத்துக்கு. வயித்துப்பாட்டுக்கு வழி வேணுமேன்னு பலகாரக்கூடை தூக்கினவ அங்கயிங்க அலைஞ்சி கடைசியா தாத்தாகிட்ட அண்டிட்டா. கள்ளெறக்குற மரத்தடிக்கு அவ வர்றதுக்கு முந்தியே தாத்தாவோட தொடுப்பாயிருச்சுன்னும், அதுக்கப்பறம் தான் இங்க வந்து போக ஆரம்பிச்சாள்னும் கூட ஒரு பேச்சிருக்குது. அது நெசமா இருந்தாலும் இருக்கும். ஏன்னா, அதுக்கும் முன்னாடியே கூட அவளோட பொட்டலம் தாத்தா கையில மணந்திருக்கு.

தாத்தா சாவுக்கப்புறம் அவ கூடை எடுத்தாறதில்ல. வெளி நடமாட்டமேயில்லாம குடிசல்லயே மொடங்கிக் கெடக்காளாம். மல்லியக்கொடியில பறிக்காமயே பூவுங்க உதுந்து காய்ஞ்சு பூஞ்சருகு மூடி குடிசலே மணந்து கெடக்காம். எப்பவாச்சும் நேர்ப்படறப்ப சின்னவங்க எப்படியிருக்காங்கன்னு என்னையப் பத்தி செவத்தாகிட்ட கேக்கறதுண்டாம். போய் பாத்துட்டு வரணும்னு ஆசையிருந்தாருலும் என்னமோவொன்னு இழுத்துப் பிடிக்குது காலை. தாத்தம்மாளுக்கு இந்த நெனப்பு தெரிஞ்சா ராக்காசியாயிருவா.

தாத்தாம்மாவுக்கும் ரஞ்சிதம் தொடுப்பு சமாச்சாரம் தெரியாமயில்ல. ஆனா கண்ணுங் காதும் இல்லாதவளா இருந்தாள். ரஞ்சிதம்னேயில்ல. மேங்காட்டு சின்னப்பன் பொண்டாட்டி கனகி, வகுரன் மவ பொன்னுருவி, முத்தம்பட்டி பிரிவுரோடு பொட்டிக்கடைக்காரி வசந்தா, வண்டிக்காரன் கொழுந்தியா ஜெயக்கொடின்னு யாராச்சுமொரு வாளிப்பான பொம்பளைங்களோட அப்பப்ப அவருக்கிருந்த சகவாசம் பத்தியும் அறிஞ்சேயிருந்தா. ஆடறது ஒரு காலம்னா அடங்குறது ஒரு காலம்னு பொறுமையாத்தானிருந்தா. ஆனா, அடங்கற பிராயம்னு ஒண்ணு நேரவேயில்ல தாத்தாவுக்கு.அழிஞ்சி அம்பலம் ஏற மேல்பந்தயம் கட்டுற மனுசனை என்ன பண்ணி என் கட்டுக்குள்ள நிறுத்தறதுன்னு தெரியலையேன்னு வெம்பி பொலம்பி வெகாளம் பிடிச்சித் திரிவா தாத்தம்மா.

மத்த சிறுக்கிங்களாட்டம் இவளும் கூடி கும்மாளம் போட்டுட்டு கைக்கு சிக்கறத சுருட்டிட்டு போயிடுவாள்னு லேசாத்தான் நெனச்சா தாத்தம்மா. ஆனா ரஞ்சிதம் அவங்க ஜதையாயில்ல. அவ, கட்டுன பத்தினியாட்டம் வேத்து ஆம்பளை நெழல்ல வெயிலுக்கும் ஒதுங்காதவளா இருந்தாள். எத்தினி நாளைக்குத்தான் இப்பிடி கூடை தூக்கி அலையறது.... இங்கயே வந்துடறதுக்கு ஒரு வழி பண்ணுங்களேன்னு தாத்தாவ அவ நச்சரிக்கற விசயம் எப்பிடியோ தெரிஞ்சி பதறிட்டா தாத்தம்மா. ஆளக் கவுத்தது பத்தாம குடும்பத்தயே கூறு போடணும்னு கேக்குறாளா சக்காளத்தின்னு பொரிஞ்சி திரிஞ்சா. ஆத்துல சுழி இருக்குன்னா எறங்காம இருந்துடலாம், வூட்லயே இருக்குன்னா எப்பிடி பொழைக்கறது? பேரன் நிக்கறான் கண்ணால வயசுல, நீ பிப்பெடுத்து அலையறயேன்னு தாத்தாகிட்ட சண்டை போட ஆரம்பிச்சா. சண்டை வந்துட்டா தாத்தா திண்ணையில ஒக்காந்து வெடிய வெடிய சுருட்டு புடிச்சிக்கிட்டிருப்பார். வெடியக்காலம் மாமரத்தடியில இருமுவார்.

நோய்நொடி எதுவுமில்லாமயிருந்த தாத்தா எப்பிடி செத்தார்னு யாருக்குமே புரியல. தூங்கறாப்ல தான் சவமிருந்துச்சி மாமரத்து அடிவேர்ல தலைசாய்ச்சி. கெழவன் பிடிகொடுக்காததால ஆத்திரப்பட்டு ரஞ்சிதமே கொன்னிருப்பாளோன்னு சிலவங்க சொன்னத என்னால ஏத்துக்க முடியல. எனக்கு தெரியும் அவளால அவருக்கு எதிரா சின்னத்துரும்பக்கூட கிள்ளறதுக்கு மனசு வராதுன்னு.

நெஞ்சு நோவுல, இல்லாட்டி பூச்சிப்பொட்டுங்க தீண்டி செத்திருக்கலாம்னும், கெழவி அனத்தலும் ரஞ்சிதம் புடுங்கலும் தாங்காம ஒடுவன் தழையவோ அரளிக்கொட்டையவோ அரைச்சி முழுங்கியிருக்கலாம்னும் ஆளாளுக்கொரு யூகமிருந்தது. ஏதோவொரு வகையில ரஞ்சிதத்துக்கு சாவுல சம்பந்தமிருக்குன்னு இப்பமும் சொல்றான் சாணான். அதுக்கும் காரணம் இல்லாமயில்ல. ஆத்தங்கரையில மேஞ்சாலும் அரமணையில வளந்தாலும் ஆட்டுக்கு வாலு அளவாத்தாண்டா இருக்கணும்... நீ கெட்டக்கேட்டுக்கு எங்க ஜாதியில கூத்தியா வேணுமா... வெட்டி பொலி போட்டுருவோம்ணு அவளோட சொந்தக்காரங்க ஆறேழு பேர் போறப்ப வர்றப்ப தாத்தாவ ஏரியில குறுக்காட்டி நிறுத்தி ஏகத்துக்கும் வம்பிழுத்திருக்கானுங்க. வாய் வார்த்தை வாய்ல இருக்கறப்பவே கை நீட்டியிருக்காங்க ஒருவாட்டி. தாத்தா தாட்டிகம் தான் ஊரறிஞ்சதாச்சே... கைக்கு சிக்குனவங்கள பொரட்டி எடுத்திருக்கார். தோதறிஞ்சப் பயலுக கண்ணுக்கு மொளகாப்பொடி அடிச்சிட்டு சுதாரிக்கறதுக்குள்ள உள்ளடி ஊமையடியா தாத்தாவ மொத்திட்டு ஓடிட்டானுங்க.

அன்னைய சண்டைக்கப்பறமும் அவனுங்க அடங்காம பொங்கித்தான் இருந்தாங்க. தாத்தா மாத்திரம் மசியற ஆளா... இமுட்டு நாளா இல்லாத வழக்கமா அவ வூட்டுக்கே போக்குவரத்துன்னு மாறிட்டார். ஒருநாள் வூட்ல இருக்கறப்ப வெளிய தாழ் போட்டுட்டு ஊரையே கூப்புட்டு காறித்துப்ப வைக்கிறம் பாருன்னு கறுவுன ஒருத்தனைக் கூப்பிட்டு ரஞ்சிதம் நாலுபோடு போட்டப்புறம் அவனுங்க யாரும் அந்த தெசைக்கே திரும்பாம திரிஞ்சாலும் ஆத்திரம் கொறையாமத்தான் அலைஞ்சானுங்க. அவனுங்க தான் தாத்தாவ தீத்துக் கட்டியிருக்கணும்கிறது தான் சாணான் கணக்கு.

வெளிச்சமே இல்லாம பாம்பாட்டம் நீண்டு கடக்குது வண்டியொன்னு. ஒத்தக் கண்போல முன்னாடி மட்டும் சன்ன வெளிச்சம். கூட்ஸாயிருக்கும். மெயிலுக்கு இன்னமும் நேரமிருக்கு. ஆறு மணிக்கு கரண்ட் நின்னுரும். அதுக்குள்ள ரண்டு வயலும் ஒரு குண்டுக்காலும் பாய்ஞ்சாகணும்.

பனியில நமுத்து துப்புட்டி சில்லுன்னு ஆயிருச்சு. குருத்தெலும்பு வரைக்கும் நடுக்குது. செத்தைங்கள பத்தவச்சு சூடு பாக்கவும் வழியில்ல. பனி ஈரம். தாத்தாவாட்டம் சுருட்டு பிடிக்கப் பழகியிருந்தாலாவது கொஞ்சம் சூடு கெடைக்கும்.

தாத்தா இருந்தமட்டுக்கும் ஒரு வேல பாக்கவிட்டதில்ல. ராத்திரி கரண்ட்டோ பகல் கரண்ட்டோ அவரேதான் மடைதிருப்புவார். "புதுப்பெண்ணின் மனதைத்தொட்டுப் போறவரே உங்க எண்ணத்த சொல்லிவிட்டு போங்க" இல்லாட்டி "சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா"ன்னு சீக்கையடிச்சு பாடிகிட்டே வரப்புல நடந்தபடியே எல்லா வேலைங்களையும் முடிக்கிற மாயம் அவர்க்கிட்ட இருந்தது. ராத்திரியில பாட்டுச்சத்தமும் பேட்ரி வெளிச்சமும் ஓயறப்ப ரஞ்சிதத்தோட கால்தண்டை சிணுங்கற சத்தம் கேட்கும். அந்நேரமுட்டும் தூங்கறவளாட்டம் திண்ணையில கெடக்குற தாத்தம்மா தூத்தேறி...ன்னு அந்த தெசையில ஓங்காரிச்சு துப்பிப்புட்டு உள்ளவந்து படுப்பா. விடிஞ்சி மரத்தடிக்குப் போய்ப்பாத்தா ஒடஞ்ச கண்ணாடிவளையல் துண்டு செதறிக் கெடக்கும்.

தாத்தாவுக்கப்புறம் காட்டுவேலையப் பாத்துக்க வச்சிருந்த தொப்பளான் மவன் தருமன், அவங்கக்காளுக்கு கண்ணாலம்னு ஒருவாரமா வரல. வயிலெல்லாம் தண்ணியில்லாம பாளம்பாளமா வெடிச்சுப்போயிட்டதால ராத்திரிக்கு நானே மோட்டார் எடுத்துவுட்டு மடைதிருப்பறேன்னா "வேணான்டா கண்ணு, விடிஞ்சா உங்க தாத்தனுக்கு வௌக்கு வைக்கிற நாளு. செத்தநாள்ல படையலெடுக்க வரும்டா அது"ன்னு நைநைன்னு தாத்தம்மா தொணக்க ஆரம்பிச்சிட்டா. தோது சொல்லி வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு. மொதத்தடவையா கொட்டாய்ல தாத்தம்மா தனியா கெடக்குறா.

கொட்டாய் வளவுல செவலையன் கொலைக்கறது மெயில் சத்தத்த மீறி இங்க கேக்குது. அது ரொம்ப சுட்டி. ஒரு அன்னி அசலை அண்டவுடாது எல்லையில. ஆனா தெரிஞ்சவங்கன்னா மேல தாவி மூஞ்சிய நக்கிரும்.

செவலையன் சத்தம் வளவுல இருந்து கம்பங்காட்டு வழியா ஓடி அது நெட்டுக்கும் ரயில்ரோட்டோரம் கேக்குது. எங்கக் காட்டோரம் எதுக்கு ஓடறேன்னு ரயிலப்பாத்து கொலைக்கறதும் அதுக்கு வழக்கந்தான். ஒவ்வொரு வண்டியோடயும் இந்தச் சண்டை ஓயாம நடக்கும். வண்டி போனப்பறமும் அந்தத்தெசையப் பாத்து கொஞ்சநேரம் கொலைச்சிட்டுத்தான் திரும்பும்.

பளபளன்னு விடியறப்ப கரண்ட் நின்னுருச்சி. அப்பவும் அந்த குண்டுக்கால்ல பாதி கொறையா தங்கிருச்சி. இன்னிக்கு ராத்திரி இதுக்குப் பாய்ச்சிட்டுத்தான் குச்சிக்காட்டுக்கு திருப்பணும்.

மமுட்டியக் கழுவி கொய்யாக்கெளைல மாட்டிட்டு தொட்டித்தண்ணில முங்கியெழுந்து கொட்டாய்க்கு திரும்பறப்பவும் செவலையன் அங்கயே நின்னு கொலைச்சிக்கிட்டிருக்கு. இவ்ளோ நேரமாகியும் ஆங்காரம் மங்காம சத்தம் கூடி வருது. கிட்டப்போய் ஒரு அதட்டு போட்டாத்தான் அடங்கி திரும்பும்னு போய்ப்பாத்தா... ரயில்ரோட்ல சில்லாப் பில்லையா செதறிக் கெடக்கா பொம்பள ஒருத்தி. ரயில்ல இருந்து வுழுந்துட்டாளோ இல்ல குறுக்கப் பாய்ஞ்சாளோ எவனாச்சும் தள்ளிவுட்டுட்டானோ... அட கோரமே நெஞ்சு நசுங்கி கொதகொதன்னு இன்னமும் ரத்தம் பொங்கிட்டிருக்கு. அதங்கி வெளிய தொங்குற கண்ணுங்க காசத்துல எதையோ தேடறாப்ல இருக்கு. துண்டாகி தூரத்தள்ளி கெடக்குற செவத்த கெண்டைக்கால் சதையில 'சாக்கன்'னு பச்சைக்குத்தி... ஐயோ ரஞ்சிதம்... நீயா இப்பிடி...

வெடவெடன்னு நடுங்குது திரேகம். அங்கயிருந்தே தாத்தம்மாள கூப்புடறேன். நான் கூப்புடறது எனக்கே கேக்கல. கேட்டாலும் அவ எழமாட்டா. ராத்திரி முழுக்க தாத்தாவப் பத்தி பெனாத்திக்கிட்டிருந்துட்டு விடியறப்பதான் கர்ருபுர்ருனு கொரட்டைவுட்டுத் தூங்குவா. தூங்கிட்டாள்னா எழுப்பறது அசகாய வேலை. எழுப்பிக் கூட்டியாந்து இப்பவாச்சும் உனக்கு நிம்மதியான்னு கேக்கணும்னு ஆத்திரத்தோட ஓடிப்பாத்தா திண்ணையில கொரவளி அறுந்து கெடக்கா தாத்தம்மா. பக்கத்துல ரத்த ஈரம் காயாம கெடக்குற அருவாமனையில ஈ மொய்ச்சி எரையுது.

தாத்தா சாவுக்கும் தாத்தம்மா சாவுக்கும் காரணம் பிடிபடறாப்ல இருக்கு. யார்க்கிட்ட நின்னு அழறதுன்னு புரியாம கொட்டாய்க்கும் ரயில்ரோட்டுக்கும் பித்துபுடிச்சாப்ல ஓடியோடி திரும்பறேன். எல்லாம் தெரிஞ்சிருந்தும் எதுவுஞ் சொல்லமுடியாம என்கூடவே செவலையன் அலையுது நெழலாட்டம்.

புதன், ஜனவரி 11

கொல்வதற்கான குறிப்புகள் - ஆதவன் தீட்சண்யா

ல்லதொரு நண்பனாக முடியாத பலத்திற்கும்
திட்டவட்டமான எதிரியாக முடியாத பலவீனத்திற்குமிடையே
என்னைக் கொல்ல வாய்க்காத துர்லபத்தில் தத்தளிக்கிறாய்

உன் ஞாபகத்தில் உலவும் என் கழுத்தை நெரிக்காமல்
நேரில் கொல்லமுடியாதென்ற சூத்திரம் புரியாமல்
கை குலுக்கவும் ஆரத்தழுவுவதுமான
நாடகத்தை நீட்டித்து
சுயவாளின் கூர்முனையில் தலைசாய்த்து பலியாகிறாய்

வீழ்ந்து மாய எனக்குத் தோண்டிய கபடச்சுழிகள்
உன்னையே இழுக்க
கலங்கியோடி கால்பாவும் வெளியெங்கும்
நீயே புதைத்த கண்ணிவெடிகள்
இனி சாவது நம்மில் யாராகவும் இருக்கக்கூடும்

இருள் குடித்து வற்றிய நெஞ்சின் எதிர்முகமாய்
நுரைத்துப் பொங்கும் மதுக்கோப்பை கிணுங்க
உரையாடிய கணங்களின் பகட்டில்
யாரும் காணவியலா தோற்றம் காட்டி ஜொலித்தாய்

இயல்பான வெளிச்சத்தில்
யாவும் சமநிலைக்குத் திரும்பிவிட
ஒளியின் றெக்கைகளில் சிக்கி கீழிறங்கத் தவிக்கிறாய்
நீ மட்டும்

உயிர் வறளும் தகிப்பில் ஊரே அவிந்துபோக
ஏழுகாதத் தொலைவின் அப்புறத்தேயிருந்து
நீர் சுமந்து வளர்க்கும் சோலையின் விகாசத்தில்
உலகமே பச்சையாய்த் துலங்கும் கனவைச் சாய்க்க
மனசுக்குள் கோடாரி தீட்டுகிறாய் எந்நேரமும்

ஆயுதபாணியாய் மாறிய அக்கணத்திலேயே
வலுகுன்றிச் சூம்பிய உனது புஜங்கள்
இனி நிழல்வேட்டைக்கும்
தோதற்றுப் போனதறியாமல்
வெற்றுவெளியில் சுழற்றும் முன் யோசி
என் மரணத்தின் மீதுதான் கட்ட முடியுமா
உன் வாழ்வை?

காற்றை வெட்டி என்ன செய்வதாய் உத்தேசம்?

செவ்வாய், ஜனவரி 10

இரண்டகம் - ஆதவன் தீட்சண்யா

டுக்கையில் சாவதானமாய் ஏறி
போர்வைக்குள் நுழைந்து
கால்களால் என்னைப் பின்னிக்கொண்டு தூங்கும்
என் செல்லமகளின் உரிமையோடு
கொடிவாகாய் வாலைப் படரவிட்டு
கழுத்திலொரு மண்டலமும் சுற்றி
உடலோடு அணைந்து படுத்து
காதோரம் தலைசாய்த்து கதை அனந்தம் பேசி
தூங்கவொட்டாமல் விளையாடிக் களித்தது
சர்ப்பம்

கொசுவலையடித்த ஜன்னலையும் மீறி
உள்நுழைந்த மாயம் பிடிபடவில்லை இன்னமும்
உறங்க வரும்முன்
நேஷனல் ஜியாகரபி சேனலில்
கடைசியாய் பார்த்ததுதான் கனவில் வந்திருக்குமோ
நிஜமெனில்
அது
விலக்கப்பட்ட கனிக்கு இச்சையூட்டி
ஏவாளைத் தூண்டிய
முதல் கலகக்கார பாம்பாயும் இருக்கக்கூடும்
ஒருவேளை
பரமசிவனின் குண்டலமாய்
எந்நேரமும் விறைத்துக் கிடக்கப் பிடிக்காமலோ
ஆதிசேடனாய் திருமாலிடம்
அழுந்தியிருக்கத் தாளாமலோ
தப்பியோடி வந்து தஞ்சம் புகுந்திருக்குமோ
யோசனையிலும்
கொத்தி நஞ்சேற்றி கொன்றுவிடுமோவென்ற பீதியிலும்
தூக்கமற்று நான் நெளிந்துகொண்டிருக்க
பாம்போ
சீரான குறட்டையொலியுடன் தூங்கிக்கொண்டிருந்தது

விடிகையில்
இடுப்பிலிருப்பதே தெரியாத மென்மையில்
நெகுநெகுத்து மினுங்கும்
ஒரு புதிய பெல்ட் இருந்தது என்னிடம்
பாவம்
தோலுரிக்கப்பட்டது தெரியாமல்
நிணம் கசிய
அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறது பாம்பு.

திங்கள், ஜனவரி 9

காடெல்லாம் நெருப்பு கடலெல்லாம் காவல் - ஆதவன் தீட்சண்யா


திகாரத்தை நோக்கி உண்மையைப் பேசவேண்டும். ஆமாம் எப்படியாவது பேசித்தான் ஆகவேண்டும். ஆனால் அது ஒன்றும் எளிதல்ல. எனவேதான் அப்படியான இக்கட்டான நேரங்களில் பலரும் பம்மிப் பதுங்கி பல்லிளித்து நாவொடுங்கி நமத்துப்போய் விடுகிறார்கள். ஆனால் எளிய மக்கள் மீதுள்ள அக்கறைகளினால் மட்டுமே உந்தப்பட்டு களமிறங்குகிறவர்கள் உண்மையைத் துணிந்து பேசிவிடுகிறார்கள்- அதன் விளைவுகளை அறிந்திருந்தும் கூட. செங்கடல் படத்தை முன்முடிவுகளற்று பார்க்கிற எவரொருவரும் இவ்வாறே விளங்கிக்கொள்வாரென நினைக்கிறேன்.

தான் பேசவந்தப் பொருளோடு தொடர்புபட்டுள்ள இந்திய மற்றும் இலங்கை அரசுகள், இவ்விரு நாடுகளின் கடற்படை மற்றும் காவல்துறை, வாய்ச்சவடால் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், மதம் என்று சகல அதிகார மையங்களையும் அம்பலப்படுத்திவிடுகிற  இப்படத்திற்கு உடனடியாக தணிக்கைச்சான்று வழங்கப்படாதது இயல்பே. நெடும் போராட்டத்தினூடே ஒரு வெட்டுகூட இல்லாமல் தணிக்கைச்சான்று பெற்றுவிட்ட போதிலும் வெகுஜனத் திரையிடலுக்கு அனுமதி கிட்டாததும், அப்படியே ஒருவேளை கிடைத்தாலும் வெளியிட விநியோகஸ்தர்களோ திரையரங்குகளோ கிடைக்காமல் போவதிலும் ஆச்சர்யப்பட எதுவுமில்லை. எந்திரன், ஏழாம் அறிவு போன்ற பெருங்கேடுகளால் தனது நுரையீரலையும் இருதயத்தையும் அழுக விட்டிருக்கிற தமிழ்த்திரைத்துறை, செங்கடல் என்கிற - தலைப்பிலிருந்தே பிரச்னைகள் தொடங்கிவிடுகிற- ஒரு படத்தை வெளியிடுவதற்கான துணிச்சலை திடுமெனப் பெற்றுவிடாது. 

இது ஒரு கதையா என்று நினைப்பு வரும் தருணத்தில் இடைமறித்து- இல்லை நீ வாழும் காலத்தில் உன் கண்முன்னே நடந்து கொண்டிருப்பவை என்று செவிட்டிலறைந்தாற் போல சொல்லிவிடுகிற உண்மைச்சம்பவங்களும் ஆவணங்களும் இடம் பெறுவதும், இந்தப்பாடுகளிலிருந்து விடுபட்டு சாந்தமாய் வாழ்ந்துவிடும் மனிதப் பெருங்கனவு மணிமேகலை, சூரி, சித்தார்த் என்கிற ஆமை போன்றவற்றினூடாக குறியீட்டுத்தன்மை கொண்டதொரு புனைவாகி இழைவதுமான படமாக்கல் முறை, படம் பேசும் அரசியலுக்கு நம்பகத்தன்மையை வழங்குகிறது. ராமேஸ்வரம் மீனவர்களும் ஈழ அகதிகளுமே கதாபாத்திரங்களாக பங்கேற்பதும் அவர்கள் சினிமாவுக்கான தரப்படுத்தப்பட்ட மொக்கை மொழியில் அல்லாமல் தத்தமது மொழியிலேயே அதன் வீரியத்தோடு பேசுவதனாலும் படத்தின் இயல்புத்தன்மை கூடுகின்றது.

***

டெய்லி பொண்டாட்டி புள்ளைய பாக்குறமோ இல்லையோ, பொணத்தைப் பார்க்கிறோம்என்று போலிஸ்காரர்களும், ‘மீன் பிடிச்சக் காலம் போய் பொணம் பொதைக்கிற காலமா இல்லே ஆயிப்போச்சுஎன்று மீனவர்களும் சலித்துக் கொள்ளுமளவுக்கு சுட்டுத்தள்ளுவதும் வெட்டிக் கொல்வதுமாக 422 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை நரவேட்டையாடியிருக்க, சடலக்கூராய்வு செய்து மரண சர்டிபிகேட் வழங்கும் பொறுப்பை இந்திய தமிழக அரசுகள் ஏற்றிருக்கின்றன. இதோ இதை எழுதிக் கொண்டிருக்கும் இவ்வேளையிலும் 5 மீனவர்கள் இலங்கையின் சிறையில் கடந்த ஒருமாத காலமாக அடைபட்டுக் கிடப்பதாகவும் அவர்களுக்கு மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வமாக வெளித் தெரிந்து வெறும் எண்களாக சிறுமைப்படுத்தப்பட்ட இந்தப் படுகொலைகளுக்கும் கைதுகளுக்கும் சிறை வைத்தலுக்கும்  ஆளாகியுள்ள மக்களின் பாடுகளைப் பேசுவது என்கிற ஒற்றைப்புள்ளியிலிருந்து அதற்கான காரணங்களையும் தொடர்புடைய பிற விசயங்களையும் பேசத் தொடங்குகிறது படம். இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கொல்லப்பட்டு வரும் மீனவக்குடிகளின் துயரங்களை ஆவணப்படமாக்கச் செல்லும் மணிமேகலையிடமிருந்து பறிக்கப்படுகிற ஒளிப்பதிவு நாடாக்களை ஓடவிட்டுப் பார்க்கிற மாவட்ட காவல் கண்காணிப்பாளரோடு சேர்த்து நாமும் மீதிப்படத்தை படத்துள் படமாகப் பார்க்கிறோம்.
***


எரிபொருளும் ஆயுதமும் கடத்திவந்து விடுதலைப்புலிகளுக்கு தருவதற்காக ஒருசில மீனவர்கள் எல்லைத் தாண்டியிருக்கலாம். ஆனால் அதற்குரிய தண்டனை கொலையா என்ன? ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும் மே 2009ல் புலிகள் அழிக்கப்பட்டு- ஆயுதமோ எரிபொருளோ கடத்துவதற்கான தேவையே இல்லாத நிலையில் இப்போதும் ஏன் கண்ணில்படுகிற தமிழக மீனவர்களையெல்லாம் கொல்கிறது இலங்கை கடற்படை? நிராயுதபாணிகளான மீனவர்களை கடற் பரப்பில் மறித்து நிர்வாணமாக்கி, பச்சைமீனை தின்ன வைத்து, சிறுநீரை குடிக்க வைத்து, சித்திரவதை செய்து குற்றுயிரும் குலையுயிருமாக துரத்தியடிப்பதை அவர்கள் எதன் பேரால் நியாயப்படுத்திவிட முடியும்? முப்பதாண்டுகளாக இலங்கையில் தமிழர்களைக் கொன்றொழிக்கப் பழகிய சிங்கள வெறியூறிய ராணுவமனம் அங்கு  போர் முடிவுக்கு வந்த நிலையில் இப்போது தமிழக மீனவர்களைக் கொன்று தனது வெறியை தணித்துக்கொள்கிறதா? கொலைகார இலங்கையை அதட்டி தனது மக்களது உயிரைப் பாதுகாக்க இந்திய அரசாங்கம் ஏன் முன்வர மறுக்கிறது? இந்திய அரசாங்கத்திற்கு அப்படியொரு நெருக்கடியை உருவாக்க தமிழ்நாட்டின் வீராவேசக் கட்சிகள் ஏன் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்பதான கேள்விகளை பார்வையாளரிடம் தன்னியல்பில் உருவாக்கிச் செல்கிறது செங்கடல்.

இலங்கை ஆட்சியாளர்களின் இனவெறிக்குத் தப்பி ஐரோப்பாவுக்கும் கனடாவுக்கும் பறந்தோட கதியற்ற தமிழர்கள் தமிழ்நாட்டிலிருக்கிற அகதி முகாம்களில்தான் அடைக்கலம் புக வேண்டியிருக்கிறது. தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூரிலும் புதுச்சேரியிலும் ஒரு லிட்டர் பாலை 50 ரூபாய்க்கு விற்கிறவர்களைப் போன்றபச்சைத்தமிழர்கள் இலங்கையிலும் இருப்பார்கள் தானே? அவர்கள், உயிர் பிழைத்தால் போதுமென ஓடிவரும் தமிழரிடம்குழந்தைக்குக்கூட பத்தாயிரண்டு வாங்கிட்டுகள்ளத்தோணியில் ஏற்றி இந்தியக் கடற்பரப்பின் ஏதாவதொரு மணற்திட்டில் வீசிவிட்டுப் போய்விட, இரக்கமனமுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள்தான் தமது படகுகளில் ஏற்றி கரைக்கு கொண்டுவந்து சேர்க்கிறார்கள். இதில் வேறெந்த ஆதாயத்தை விடவும் சகமனிதர்கள் மீதான பரிவே பிரதானமாக தொழிற்படுகிறது என்பதற்கான உதாரணம்தான் அரிச்சல் முனையில் வந்திறங்கும் குடும்பத்தாருக்கு மீனவர் மாணிக்கம் தூக்குவாளியிலிருக்கும் தனது கஞ்சியைக் கொடுப்பது.

காத்த சுவாசிக்கப் போனா கந்தக நாத்தம், நீரெல்லாம் நெருப்பா ஓடுது, நிலத்துலகூட கண்ணிவெடி... அங்க எப்படிய்யா இருக்கிறது? இயலாமத்தான் இங்க ஓடிவந்தமய்யா...’ என்று கதறிக்கொண்டு இலங்கை எல்லையிலிருந்து தப்பி தனுஷ்கோடிக்கு வந்துவிட்டதைத் தவிர அந்த வறிய தமிழர்களுக்கு இங்கு வேறேந்த ஆறுதலுமில்லை. ‘இந்திய அரசாங்கம் உங்கள நல்லாப் பாத்துக்குமா?’ என்ற கேள்விக்கு கொன்றாதுன்னு நம்புறோம் என்று பதிலளிக்கிறார் ஒரு அகதி.  ஆமாம், கொல்லப்படவில்லையே தவிர மனித மாண்புகளுக்கு சற்றும் பொருந்தாத வகையில்தான் இந்திய/ தமிழக மண்ணில் நடத்தப்படுகின்றனர். ஆண் பெண் அனைவரையும் காவல் நிலையத்தில் நிர்வாணமாக்கிச் சோதனையிடுவது, ‘முட்டி பலமாக காய்ச்சியிருந்தாலே புலிகள்தான்என்று சந்தேகத்தில் சிறையிலடைப்பது, ஆபாசமாகத் திட்டுவது, முகாமை விட்டு வெளியே வந்து உலவினாலே பிடித்துவைத்துக்கொண்டு லஞ்சத்திற்கு விடுவிப்பது என்று கண்கொண்டு காணவியலாக் கொடுமைகள் நிகழ்வதை செங்கடல் சமரசமின்றி அம்பலப்படுத்துகிறது. ஏழேழு பிறப்பெடுத்தும் ஈழத்தமிழர்க்காகவே பேராடுவதாக கர்ஜிக்கிற மைக் முழுங்கிகளில் ஒருவரும் இந்த ஏழை அகதிகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. பிஸ்கட் இல்லாதவர்களிடம் குழைய வேண்டியதில்லை என்பதை தெரிந்துவைத்திருக்கிற நாய்கள் வாலை வேறு மாதிரியாக ஆட்டுவது உலகியல் வழக்குதானே. அகதிகள் மனிதர்களாக நடத்தப்படுவதை உறுதி செய்வதில் மனித உரிமை அமைப்புகளோ வேறு மக்கள் இயக்கங்களோ அக்கறை காட்டாததால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பும் ரோஸ்மேரி போன்றவர்கள் தமது மட்டுப்படுத்தப்பட்ட எல்லைக்குள் சுருங்கிவிடவே நேரும் என்பதை படம் ஒரு எச்சரிக்கை போல உணர்த்துகிறது.

பகலையில் நேவிக்காரங்கள் வர்றாங்கள், எந்த வட்டுல குமரிபுள்ளைக இருக்குன்னு பார்த்துட்டுப் போறாங்கள்...ராவுல வர்றாங்கல்... சத்தமும் போட இயலாது, கூக்குரகூரலும் போட இயலாது..காசு வாங்காத வேசிகள் மாதிரி கண்ணைப் பொத்திக்கொண்டு காதை மூடிக்கொண்டு பாயில படுத்துக்கிடக்க வேண்டியதுதான்... கற்பத்தடை மாத்திரைகூட கடையில் சரியான தட்டுப்பாடு... ’, ‘இளங்காளைப் பயலுகளயெல்லாம் கொல்றாங்க...’ என்று அகதிகளாக வந்திறங்குகிறவர்கள் போலிஸ் விசாரணையின் போது தெரிவிக்கும் தகவல்களிலிருந்து இலங்கையில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்புணர்வுகளையும்  தாக்குதல்களையும் கொலைகளையும் சொத்தழிப்புகளையும் அதன் தீவிரத்தோடேயே பார்வையாளர்களால் உணர்ந்துவிட முடிகிறது. ‘இலங்கை அரசாங்கம் ரசாயன குண்டு வச்சிருக்குன்னு நீங்க நம்பறீங்களா?’. ஒரு அகதியின் பதில்- நீங்க கொடுத்திருந்தா அவங்க வச்சிருப்பாங்க...’ இலங்கை ஆட்சியாளர்களின் இப்படியான அட்டூழியங்களுக்கு இந்திய அரசும் துணையாக இருந்ததை அம்பலப்படுத்த இந்த ஒரு காட்சி போதுமானதாக இருக்கிறது.

சர்வதேச நீதிமன்றங்கள் இலங்கை ஆட்சியாளர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்குமோ மாட்டாதோ, ஆனால் மக்கள் மன்றத்தில் நிரூபிப்பதற்கான ஆவணமாக செங்கடல் உருவாகியுள்ளது.  இறுதிக்கட்டத்தில் நடந்தது யுத்தமா படுகொலையா என்கிற கேள்வியை எழுப்பும் படம், அது படுகொலைதான் என்று நிறுவுவதற்கான பலத்துடன் இருக்கிறது. இவையெல்லாவற்றையும் புறந்தள்ளி இழிவுபடுத்துவார்கள் என்று தெரிந்திருந்தும்கூட புலிகளின் மீதான விமர்சனத்தையும் செங்கடல் முன்வைக்கத் தயங்கவில்லை. இலங்கை கடற்படையை எதிர்த்துப்போராட ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆயுதம் வழங்கவேண்டும் என்று தொடங்குகிற படம் அரசாங்கத்திடமிருந்தும் ஆயுதங்களைக் களைய வேண்டும் என்கிற கனவை வெளிப்படுத்துவதில் முனைப்பு கொள்கிறது. மனிதகுலத்தின் இந்தப் பெருங்கனவை திரைப்படுத்துவதற்காக லீனா மணிமேகலை-  ஷோபாசக்தி- ஜானகி சிவகுமார் குழுவினர் மேற்கொண்ட அயரா முயற்சியினால் இன்று பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் செங்கடல் திரையிடப்படுகிறது. மதிப்புமிக்க பல விருதுகளைப் பெற்றுக்கொண்டும் வருகிறது. இராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் ஈழத்தமிழ் அகதிகளின் பிரச்னைகள் சர்வதேச அரங்குகளில் விவாதப்பொருளாய் மாறுவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ள இப்படத்தை வெகுமக்கள் மத்தியிலே திரையிடுவதற்கான சாத்தியங்களை கண்டறிவதானது, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்ட யாவரது கடமையாகவும் இருக்கிறது.  

நன்றி: செம்மலர், ஜனவரி 2012 

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...